ஒன்றிய அரசு பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு சிலிண்டரின் விலையை உயர்த்தியது, கண்டித்து போராட்ட நடத்த, மாநிலக்குழு முடிவு
தமிழ்நாடு புரட்சிகர சோசலிஸ்ட் கட்சியின் மாநில மையக் குழுக்கூட்டம் மற்றும் கடலூர் மாவட்ட செயற்குழு கூட்டம் கடலூர் தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது.மாநில மையக்குழுக் கூட்டத்திற்கு கட்சியின் மாநிலத் தலைவர் கே.எஸ்.சம்பந்தம், மாவட்ட செயற்குழுக் கூட்டத்திற்கு கே.எஸ்.தமிழரசன் ஆகியோர் தலைமை தாங்கினர்.
கூட்டத்தில் கீழ்க்கண்ட தீர்மானங்கள் எடுக்கப்பட்டன.
*மோடியின் பாஜக ஒன்றிய அரசு பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு சிலிண்டரின் விலையை உயர்த்தி ஏழை நடுத்தர மக்கள் மற்றும் சிறுகடை வியாபாரிகளின் வாழ்வாதாரத்தின் மீது தொடர்ந்து தாக்குதலைத் தொடுத்து வருகிறது.
* தமிழ்நாடு ஆளுநர் இரவி தாம் வகிக்கும் பதவி அதிகாரத்தைப் பயன்படுத்தி,தமது பொறுப்பற்ற பேச்சால் அரசமைப்புச் சட்டத்தின் மாண்பை குலைத்து வருகிறார்.
இதனைக் கண்டித்து தமிழ்நாடு புரட்சிகர சோசலிஸ்ட் கட்சி சார்பில் மார்ச் 14 தேதி தொடங்கி 22 ஆம் தேதி முடிய மாநிலம் தழுவிய அளவில் தொடர் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்துவது என முடிவு செய்யப்பட்டது.கடலூர் மாவட்டத்தில், கடலூர், சிதம்பரம், குறிஞ்சிப்பாடி, வடலூர், காட்டுமன்னார்கோயில், திருமுட்டம், திட்டக்குடி, விருத்தாசலம் ஆகிய எட்டு மையங்களில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்துவது என முடிவெடுத்து தேதி முடிவு செய்யப்பட்டது. இதர மாவட்டங்களைப் பொறுத்தவரை காலம் தாழ்த்தாமல் மாவட்டக் குழுக்களைக் கூட்டி ஒவ்வொரு மாவட்டத்திலும் ஆர்ப்பாட்டம் நடைபெறும் மையங்களின் எண்ணிக்கை, இடம் ,தேதி தலைமையேற்கும் தோழர்களின் பெயரை மாநில மையத்திற்கு அனுப்பி வைப்பது எனவும் மாநில மையத்திலிருந்து கலந்து கொள்ளும் தோழர்கள் குறித்து மாநிலத் தலைமையுடன் கலந்து பேசி முடிவுசெய்வது எனவும் முடிவு செய்யப்பட்டது.