2023-ம் ஆண்டில் கடந்த ஒரு லட்சம் ஆண்டுகளில் இல்லாத வெப்பம் பதிவு; புவி வெப்பமயமாதலை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளை உலக நாடுகள் தீவிரப்படுத்த வேண்டும்!

அண்மையில் நிறைவடைந்த 2023-ஆம் ஆண்டு தான் பூமியின் வெப்பம் மிகுந்த ஆண்டாக பதிவாகியுள்ளது. பூமியின் பல்வேறு பகுதிகளில் புவி வெப்பமயமாதலால் ஏற்பட்ட காட்டுத் தீ, வறட்சி, வெப்ப அலைகள் போன்றவற்றின் காரணமாக கடந்த ஆண்டின் சராசரி வெப்பநிலை தொழில்புரட்சி காலத்திற்கு முந்தைய சராசரி வெப்பநிலையை விட 1.48 டிகிரி செல்சியஸ் அதிகமாக பதிவாகியுள்ளது. 2023-ஆம் ஆண்டில் பாதிக்கும் கூடுதலான நாட்களின் வெப்பநிலை தொழில்புரட்சி காலத்திற்கு முந்தைய சராசரி வெப்பநிலையை விட 1.50 டிகிரி செல்சியஸ் அதிகமாகவும், அனைத்து நாட்களின் வெப்பநிலை தொழில்புரட்சி காலத்திற்கு முந்தைய சராசரி வெப்பநிலையை விட ஒரு டிகிரி செல்சியஸ் அதிகமாகவும் பதிவாகியுள்ளது. கடந்த ஒரு லட்சம் ஆண்டுகளில் இல்லாத வெப்பநிலை 2023-ஆம் ஆண்டில் பதிவாகியு்ள்ளது. புவி வெப்ப நிலை இந்த அளவுக்கு அதிகரித்து வருவது கவலையளிக்கிறது.காலநிலை மாற்றத்தின் தீய விளைவுகளை கட்டுப்படுத்துவதற்காக நடவடிக்கைகள் குறித்து ஐ.நா. அமைப்பு கடந்த 31 ஆண்டுகளாக பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதுவரை 28 பன்னாட்டு மாநாடுகள் நடத்தப்பட்டிருக்கின்றன. காலநிலை மாற்ற பேராபத்துகளை குறைக்க பெட்ரோல், டீசல், நிலக்கரி, எரிவாயு பயன்பாட்டுக்கு மிக விரைவாக முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்; பொதுப்போக்குவரத்தை ஊக்குவிக்க வேண்டும்; அனல் மின்நிலையங்களை மூடி விட்டு புதுப்பிக்கத்தக்க மின்சார உற்பத்தியை அதிகரிக்க வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்தப்பட்டு வருகிறது. ஆனாலும், அவற்றை கடைபிடிக்க உலக நாடுகள், குறிப்பாக வளர்ந்த நாடுகள் முன்வராதது தான் இத்தகைய நிலைக்கு காரணம் ஆகும்.அண்மையில் துபாயில் நடைபெற்ற ஐ.நா. காலநிலை மாற்ற மாநாட்டில் காா்பன் டை ஆக்சைடு உள்ளிட்ட பசுமை இல்ல வாயுக்களின் வெளியேற்றத்தை, கடந்த 2019-இல் இருந்த அளவைவிட 43% 2030-ஆம் ஆண்டிலும், 60% 2035-ஆம் ஆண்டிலும் குறைக்க வேண்டும்; அவ்வாறு குறைப்பதன் மூலம் 2050-ஆம் ஆண்டில் கரிம சமநிலையை எட்ட முடியும் என்று முடிவெடுக்கப்பட்டிருக்கிறது. ஆனாலும் கூட அந்த இலக்கை எட்டுவதற்கான வழிமுறைகளும், திட்டங்களும் இன்னும் இறுதி செய்யப்படவில்லை.காலநிலை மாற்றத்தின் தீய விளைவுகளை தமிழகம் அனுபவிக்கத் தொடங்கி விட்டது. சென்னையிலும், தென் மாவட்டங்களிலும் அண்மையில் ஏற்பட்ட மழை மற்றும் பெரு வெள்ளங்களுக்கும் காலநிலை மாற்றம் தான் காரணம். காலநிலை மாற்றத்தால் சென்னையின் சில பகுதிகள் உள்ளிட்ட பல பகுதிகளை கடல் கொள்ளும் என்பது உள்ளிட்ட பல ஆபத்துகள் நம்மை அச்சுறுத்திக் கொண்டிருக்கின்றன. தாங்க முடியாத வெப்பம், சமாளிக்க முடியாத வெள்ளம், வறட்சி, உணவுப் பற்றாக்குறை என நினைத்துப் பார்க்க முடியாத பேரிடர்கள் நம்மைத் தாக்க அணிவகுத்து நிற்கின்றன. இத்தகைய ஆபத்துகளில் இருந்து எதிர்காலத் தலைமுறையினரையும், பூவுலகையும் காப்பது நமது கைகளில் தான் உள்ளது.பூவுலகைக் காப்பதற்காக ஐ.நா காலநிலை மாற்ற மாநாடுகளில் எடுக்கப்பட்ட முடிவுகளை செயல்படுத்துவதற்கான நடவடிக்கைகளை உலக நாடுகள் தீவிரப்படுத்த வேண்டும். நமது பங்காக தமிழ்நாட்டில், அனல் மின் நிலையங்கள் ஹைட்ரோகார்பன் திட்டங்கள், பெட்ரோகெமிக்கல் திட்டங்களை கைவிட வேண்டும். , ஒட்டுமொத்த தமிழகமும் ஒன்று பட்டு, பசுமையான, இயற்கையுடன் இயைந்த வாழ்க்கை முறைக்கு மாற முன்வர வேண்டும். அதற்கான கட்டமைப்புகளையும் விதிமுறைகளையும் தமிழக அரசு உருவாக்க வேண்டும் என பாட்டாளி மக்கள் கட்சி தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் எம்பி தெரிவித்துள்ளார்.

Spread the love

TamilNews Media

Tamil web magazine in which daily news, medical articles, politics, sports, education related news are uploaded. Contact 9600032872

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *