மறக்கப்பட்ட மாபெரும் தியாகம்: சாமி நாகப்பன் படையாட்சி! 114 ஆம் ஆண்டு நினைவஞ்சலி.
மறக்கப்பட்ட மாபெரும் தியாகம்: சாமி நாகப்பன் படையாட்சி! 114 ஆம் ஆண்டு நினைவஞ்சலி.
உலகின் முதல் சத்யாகிரக போராட்ட தியாகி சாமி நாகப்பன் படையாசியார் அவர்களுக்கு 114 ஆம் ஆண்டு நினைவஞ்சலி, தோற்றம் 1891, மறைவு :06-07-1909 . எந்த ஒரு போராட்டத்திலும் முதலாவதாக உயிரிழப்பவர் மாபெரும் தியாகியாக போற்றப்படுவார். அவருக்கு சிலை, நினைவிடம், அருங்காட்சியகம், அவர் பெயரில் விருதுகள் என அவரது நினைவு என்றென்றும் போற்றப்படும். உலக வரலாற்றின் மிகப்பெரிய சனநாயகப் போராட்டமாக கருதப்படுவது மகாத்மா காந்தியின் சத்தியாகிரக போராட்டம் ஆகும். இப்போராட்டத்தில் முதன்முதலில் பலியான உலகின் முதல் சத்தியாகிரகத் தியாகியை எல்லோரும் மறந்துவிட்டனர்.
‘இறந்தாலும் என்றென்றும் ஒவ்வொரு இந்தியரின் இதயத்திலும் வாழ்வார்’ என மகாத்மா காந்தியால் புகழப்பட்ட அந்த தியாகி இந்திய வரலாற்றில் இடம் பெறவில்லை. ஒரு மாபெரும் தியாகி மறக்கப்பட்டது ஏன்? அவர் ஒரு தமிழர் என்பதாலா? வஞ்சிக்கப்பட்ட சாதியில் பிறந்தவர் என்பதாலா? ஏழை என்பதாலா? படிக்காதவர் என்பதாலா?
மறக்கப்பட்ட மாபெரும் தியாகம்: சாமி நாகப்பன் படையாட்சி!
மகாத்மா காந்தி வடிவமைத்த மாபெரும் போராட்ட முறை சத்தியாகிரகம் எனப்படுவதாகும். இந்திய விடுதலைப்போராட்டம், நெல்சம் மண்டேலாவின் தென் ஆப்பிரிக்க விடுதலைப் போராட்டம், மார்ட்டின் லூதர் கிங்கின் அமெரிக்க கருப்பின உரிமைப் போராட்டம் என உலகின் மிகப்பெரிய போராட்டங்களின் அடிப்படை வடிவம் சத்தியாகிரகம்தான்.சிறீ நாராயண குரு, தந்தை பெரியார் பங்கெடுத்த வைக்கம் சத்தியாகிரகத்தின் முன்னோடியும் அதுதான். அப்படிப்பட்ட தென் ஆப்பிரிக்க சத்தியாகிரகப் போருக்காக உயிர்த்தியாகம் செய்த உலகின் முதல் தியாகி “சாமி நாகப்பன் படையாட்சி”.
உலகின் முதல் சத்தியாகிரக உயிர்த் தியாகம் எனும் அந்த மாபெரும் நிகழ்வு வரலாற்றின் பக்கங்களில் மறைக்கப்பட்டுவிட்டது.
அறப்போர் அல்லது சத்தியாக்கிரகம் என்பது பொதுவாக உரிமைகளை வென்றெடுப்பதற்காக வன்முறை இன்றி அறவழியில் போராடுவதைக் குறிக்கும். எதிராளிக்குத் தீங்கு விளைவிக்காமல் அவர் மனதை மாற்றி உரிமைகளைப் பெற்றுக்கொள்ள முயல்வதே இதன் அடிப்படையாகும்.
மகாத்மா காந்தி, நெல்சன் மண்டேலா, மார்ட்டின் லூதர் கிங் தொடங்கி ஈழத்தில் தியாகி திலீபன், இப்போது இந்தியாவில் அன்னா அசாரே, கூடங்குளம் அணுமின் நிலைய எதிர்ப்பு என எல்லாமும் “அறப்போர்” என்கிற முறையில் நடத்தப்படுகிறது. ஆனால், சத்தியாகிரக போரின் முதல் தியாகி சாமி நாகப்பன் படையாட்சியை எவரும் நினைவில் கொள்ளவில்லை. அவர் உயிர்த்தியாகம் செய்து 114 ஆண்டுகள் கடந்துவிட்டன.