மாரி செல்வராஜ் அவர்களின் இயக்கத்தில் வெளியான ‘மாமன்னன்’ திரைப்படம் பரவலான விமர்சனங்களை ஏற்படுத்தி இருக்கின்றது.

மாரி செல்வராஜ் அவர்களின் இயக்கத்தில் வெளியான ‘மாமன்னன்’ திரைப்படம் பரவலான விமர்சனங்களை ஏற்படுத்தி இருக்கின்றது.
சாதிய ஒடுக்குமுறைகளை மையப்படுத்தி படம் எடுப்பதிலும், அதை சந்தைப்படுத்தி வெற்றி பெறுவதிலும் அவர் தொடர்ந்து வெற்றி பெற்று வருகின்றார். அந்த வகையில் இந்தப் படமும் வெற்றிப்படமாக அமைந்திருக்கின்றது.
ஆனால் ஒரு படம் வணிக ரீதியாக வெற்றி பெருவதால் மட்டுமே அந்தப் படம் சிறந்த படமென்றோ, தோல்வியடைந்த படமெல்லாம் சிறந்த கதை அம்சமோ, சமூக நோக்கமோ இல்லாத படங்கள் என்றோ நம்மால் முத்திரை குத்த முடியாது.
வணிக சினிமாவின் எல்லைக்குள் நின்று, சாதி ஒடுக்குமுறைகளைப் பேசும் போது இயக்குநர் மீது இருக்கும் அழுத்தம் அந்தப் படைப்பை அதன் முழுமையான காத்திரமான தன்மையில் படைப்பதில் இருந்து விலக்கி, வழக்கம் போல கதாநாயகனின் வீரத்தால் எல்லா பிரச்சினைகளும் தீர்க்கப் படுவதாக முடிகின்றது.
ஆனால் அப்படியான மீட்பர் ஒரு நாளும் நிஜத்தில் வருவதில்லை என்பதாலும், வந்தாலும் அந்த மீட்பரை சிலுவையில் ஏற்றி விடலாம் என்று ஆதிக்க சாதிகள் உறுதியாக நம்புவதாலும், வீரம் பொருந்திய மீட்பரின் படங்களைப் பார்த்து அவர்கள் அதிகம் பயம் கொள்வதில்லை.
சாதிய ஒடுக்குமுறைகளைக் கேள்வி கேட்போம் எனப் படம் எடுக்கும் இயக்குநர்களும் தங்களின் எல்லையைத் தாண்டி சாதியை ஒழிப்பதற்கான ஆழமான காட்சிகளை தத்துவார்த்த பின்புலத்தோடு காட்சிப்படுத்த முயற்சிப்பதில்லை.
புத்தர் சிலையையோ அம்பேத்கரையோ, பெரியாரையோ காட்டுவதே அவர்களுக்குப் போதுமானதாக உள்ளது. அதைத் தாண்டி சாதியின் வேர்கள் பொருளாதார சுரண்டலிலும் வேர் கொண்டுள்ளது என்பதைப் பற்றியோ, பார்ப்பன பயங்கரவாதத்தை அம்பலப்படுத்த வேண்டும் என்பதைப் பற்றியோ அவர்களுக்கு சிறிதும் அக்கறை இருப்பதில்லை.
அந்த வகையில் மாரி செல்வராஜின் எந்த ஒரு படமும் சாதிய பிரச்சினைகளுக்கு தீர்வைச் சொன்னதில்லை.
சாதி வெறியர்களின் கொடூர அசிங்கமான சில பக்கங்களை அம்பலப்படுத்துவதைத் தவிர, தலித்துகள் சாதியத்துக்கு எதிராக ஒரு கூட்டு சமூகமாய், கூட்டு உளவியலாய் சித்தாந்த ரீதியாக ஒழுங்குபடுத்தப்பட்ட அமைப்புகளின் பின்புலத்தில் செயல்படுவது எப்படி என்பதை அவர் சொல்ல மறுக்கின்றார்.
இந்த இடத்தில்தான் புத்தர் போன்ற வர்க்க நீக்கம் செய்யப்பட்ட, முதலாளித்துவத்திற்கு பிரச்சினைகள் ஏதுமற்ற மொக்கைத் தீர்வுகள் குறியீடுகளாக காட்டப்படுகின்றன.
புத்தரை வைத்தே சாதியை ஒழித்து விடலாம் என்பதும், புத்தரே தீண்டாமையில் இருந்து விடுபட ஒரே மாற்று எனக் கட்டமைப்பதும் NGO பாணி அடையாள அரசியலாகும். இந்த அரசியல் ஒருபோதும் ஆளும் வர்க்கத்தை அசைத்துப் பார்க்கத் திராணியற்ற அரசியல் ஆகும்.
சாதிய ஒடுக்குமுறைகளைப் பேசும் இவர்களால் ஏன் சமத்துவ சமுதாயத்தை நோக்கிய பயணத்தில் மார்க்சிய வழியில் பயணப்பட முடியவில்லை என்பது சாதாரணமாக கடந்து போகும் ஒன்றல்ல.
அதுமட்டுமல்ல, சித்தாந்த ரீதியாக அரசியல் படுத்தப்பட்டு அமைப்பாய் சாதியப் பிரச்சினைகளை எதிர்ப்பதை தன்னுடைய எந்த ஒரு படத்திலும் காட்சிப்படுத்தாத ரஞ்சித்தோ, மாரி செல்வராஜோ ஒவ்வொரு படத்திலும் ஒவ்வொரு மாதிரியான தீர்வுகளை முன்வைக்கின்றார்கள்.
குறிப்பாக பரியேறும் பெருமாள் படத்தில் சாதிவெறியர்களுடன் ஓர் உரையாடலையும், கர்ணனில் சாதிவெறியனான காவல்துறை அதிகாரியைக் கொல்வதால் பிரச்சினை முடிந்தது போலவும், மாமன்னனில் சாதிவெறியர்களைத் தோற்கடித்து தேர்தல் அரசியலில் வெற்றி பெறுவது போலவும் காட்டி இருக்கின்றார்.
படத்தின் தொடக்கத்தில் கோயில் குளத்தில் குளித்துக் கொண்டிருக்கும் நான்கு சிறுவர்களை ஆதிக்க சாதியைச் சேர்ந்தவர்கள் கற்களால் அடித்ததில் மூன்று சிறுவர்கள் கொல்லப்படுகின்றார்கள்.
இதற்கு எதிராக நியாயம் கேட்கப் போகும் மாமன்னன் வடிவேலு தன் சொந்தக் கட்சிகாரர்கள் சொல்லும் ஆலோசனையைக் கேட்டு, அதை அழுகையோடு ஏற்றுக் கொள்கின்றார். தன் சமூக மக்களை காக்க அரசியல் அதிகாரத்தை அடைய முடிவெடித்து அரசியல்வாதியாய் மாறுகின்றார்.
உதயநிதிக்கு சொந்தமான இடத்தில் கீர்த்தி சுரேஷ் இலவச கல்வி மையம் ஒன்றை நடத்துகிறார். அதை தனியார் கோச்சிங் மையம் நடத்தும் ஃபகத்தின் அண்ணன் சுனில் அடித்து உடைக்கின்றார். இதனால் ஏற்பட்ட பிரச்சினையைப் பற்றி பேசித் தீர்க்க வடிவேலுவும், அவரது மகன் உதயநிதியும் செல்கின்றார்கள்.
அங்கு வடிவேலுவை நிற்க வைத்து பேசும் ஃபகத் உதயநிதியை உட்காரச் சொல்கின்றார். ஆனால் உதயநிதி வடிவேலுவை உட்காரச் சொல்ல, சாதிவெறியனான ஃபகத்துக்கும் உதயநிதிக்கும் சண்டை ஏற்படுகின்றது.
இடைவேளைக்குப் பிறகு தேர்தல் வருகின்றது. அதில் சமூகநீதி சமத்துவ மக்கள் கழகத்தின் சார்பாக காசிபுரம் தொகுதியில் வடிவேலு போட்டியிடுகின்றார். அதற்கு அதே கட்சியில் இருந்து நீக்கப்பட்ட ஃபகத் தன்னுடைய சாதிக்காரர்களை தூண்டிவிட்டு இடையூறு செய்கின்றார்.
அதை உதயநிதி, கீர்த்தி சுரேஷ் மற்றும் அவர்களது நண்பர்கள் இணைந்து சமூக ஊடகங்களை பயன்படுத்தி முறியடித்து வடிவேலுவை வெற்றிபெற வைக்கின்றார்கள். படத்தின் இறுதியில் வடிவேலுவுக்கு சபாநாயகர் பதவி வழங்கப்படுகின்றது.
இதுதான் படத்தின் சுருக்கமான கதை. படத்தின் பிற்பகுதி வலிமையான திரைக்கதை இல்லாததால் படத்தின் முதல் பகுதி உருவாக்கிய உணர்வுகளை நீர்த்துப் போகச் செய்கின்றது.
மாமன்னனாக வரும் வடிவேலு தன் சாதி மக்களின் நிலையை மாற்ற எதுவும் செய்ய முடியாதவராகவே இருக்கின்றார். அவரது வீடு கூட தான் வாழும் சமூக மக்களிடம் இருந்து பிரிந்து தனியாகவே இருக்கின்றது. ஓட்டு கேட்க மட்டும் சேரிக்குச் செல்வார் போல!.
இந்தப் படத்தில் வடிவேலுவின் கதாப்பாத்திரம் அருந்ததிய சாதியைச் சேர்ந்ததாக சொல்லப்படுகின்றது. ஆனால் துளி அளவு கூட அவர்களின் வாழ்வியலை மாரி செல்வராஜ் பதிவு செய்யவில்லை.
கொங்கு பகுதியில் நிலவும் சாதிய ஒடுக்குமுறைகள் குறித்து மாரி செல்வராஜுக்கு எதுவுமே தெரியவில்லை என்பது படம் முழுக்க நன்றாகத் தெரிகின்றது.
கொங்கு பகுதியில் மிகவும் மோசமாக சாதிய அடக்குமுறைக்கு உள்ளாகும் சமூகம் அருந்ததியர்கள்தான். பெரும்பாலும் விவசாயக் கூலிகளாக, அத்துக்கூலிகளாக, நிலமற்றவர்களாக, மிக மோசமான சுகாதாரக் கேடுகள் நிறைந்த பகுதிகளில் அவர்கள் வசிக்கின்றார்கள்.
தோளில் துண்டு போட்டு நடக்கக், கூடாது, வேட்டியை மடித்துக் கட்டக் கூடாது, தலையில் தலைப்பாகை கட்டக்கூடாது என கட்டுப்பாடுகள் விதிக்கப்படுகின்றன.
அவர்களின் துணிகளை சலவை செய்து கொடுக்க மாட்டார்கள். சலூன்களில் முடிவெட்டிவிட மாட்டார்கள், டீக்கடைகளில் இரட்டைக் குவளை முறை இன்றுவரையிலும் இருக்கின்றது. குடிப்பதற்கு தண்ணீர் கேட்டால் அவர்களின் கைகளில்தான் தண்ணீர் ஊற்றுவார்கள்; இல்லை என்றால் தேங்காய் சிரட்டையில் கொடுப்பார்கள். ஒரு பத்து வயது பையன் எண்பது வயது முதியவரை வாடா போடா என்பான்.
ஊர் பொதுக் குழாய்களில் தண்ணீர் பிடிக்கத் தடுப்பது, ஊர் பொதுக் குளங்களில் குளிக்க அனுமதி மறுப்பது, கோயிலுக்கு வெளியேயே நிற்க வைப்பது, ஊர் பொது சுடுகாடு, இடுகாடு போன்றவற்றில் பிணத்தை எரிக்கவோ புதைக்கவோ தடை, பொதுப்பாதையில் பிணத்தை எடுத்துச் செல்ல தடை, செத்த மாட்டை அப்புறப்படுத்த கட்டாயப்படுத்துவது, இழவு செய்தி சொல்ல கட்டாயப்படுத்துவது, ஊரில் எல்லோரையும் திருமணத்திற்கு அழைத்தாலும் அவர்களை மட்டும் புறக்கணிப்பது, பள்ளிக் கூடங்களில் மாணவர் மற்றும் மாணவிகளை கழிப்பிடம் சுத்தம் செய்யக் கட்டாயப்படுத்துவது என பல தீண்டாமைக் கொடுமைகள் நிகழ்த்தப்படுகின்றன.
கொங்கு மண்டலத்தில் இருக்கும் எந்த ஒரு கிராமத்தில் வாழும் அருந்ததிய மக்களும் இந்தக் கொடுமைகளில் இருந்து தப்பிக்க முடியாது என்பதுதான் உண்மை.
ஆனால் மாமன்னன் இதில் எந்த ஒரு பிரச்சினையைப் பற்றியும் பேசவில்லை. காரணம் இது எந்த வகையிலும் சாதாரண அருந்ததிய மக்களின் வாழ்வியலைப் பேச எடுக்கப்பட்ட படமல்ல.
எம்எல்ஏ ஆகும் அளவுக்கு வசதி படைத்த வடிவேலுவையும், அவரது மகன் உதயநிதியையும் சுற்றியே படம் நகர்கின்றது. ஃபகத்தின் முன் வடிவேலுவை உட்காரச் சொல்லும் உதயநிதியின் தைரியம், கவுண்டர் சாதியினரின் காடுகளில் கூலி வேலைக்குப் போகும், வருமானத்திற்கு அவர்களை மட்டுமே சார்ந்திருக்கும் ஒருவரின் மகனுக்கு ஒரு போதும் வராது.
அரசியல் அதிகாரம் கிடைத்தால் தன்சாதி மக்களுக்கு ஏதாவது நல்லது செய்ய முடியும் என தலித்துகள் நம்ப வைக்கப்படுகின்றார்கள். ஆனால் உண்மை நிலையோ எப்போதுமே இதற்கு நேர் மாறாகவே இருந்து வருகின்றது.
முன்னாள் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோயிந்தை பார்பனர்கள் கோயிலில் வைத்து அசிங்கப்படுத்தியபோது, தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணைய துணைத் தலைவராக இருந்தவர் எல்.முருகன்தான். அதைப்பற்றி வாயைக்கூட திறக்காமல் மெளனமாக இருந்தார்.
அதே போல டெல்லியிலுள்ள ஜெகந்நாதர் கோயிலுக்குச் சென்ற திரெளபதி முர்முவையும் கோயில் கருவறைக்கு வெளியே நிற்க வைத்து அவமானப்படுத்தி இருக்கின்றார்கள். அதே கோயிலில் மத்திய அமைச்சர்களான அஸ்வினி வைஷ்ணவ், தர்மேந்திர பிரதான் உள்ளிட்டோர் கருவறைக்குள் சென்று தரிசனம் செய்யும் போது, ஏன் ராம்நாத் கோவிந்து மற்றும் திரெளபதி முர்மு போன்றவர்களால் கருவறைக்குள் சென்று வழிபட முடியவில்லை என்று எப்போதாவது எல்.முருகன் கேட்டிருக்கின்றாரா?
சாதி ஒடுக்குமுறைகளைக் கடந்து சட்டசபைக்குப் போய் சபாநாயகராக ஆன மாமன்னனும் அதையேதான் செய்யப் போகின்றார்.
இந்தப் படத்தின் கதை முன்னாள் சபாநாயகர் தனபால் அவர்களின் வாழ்க்கையை தழுவியதாகச் சொல்லப்படுகின்றது.
இதைப் பற்றி கருத்து தெரிவித்த தனபால் அவர்கள், “1972-ல் இருந்து நான் அதிமுகவில் இருக்கிறேன். அம்மாவின் தீவிர விசுவாசி நான். என்னுடைய உழைப்பைப் பார்த்து கட்சியில் அமைப்புச் செயலாளர், அமைச்சர், சபாநாயகர் என பொறுப்பு கொடுத்து அழகு பார்த்தார்கள். என்னுடைய சாயலில் இந்த படம் வந்திருந்தால் அது அம்மாவுக்குக் கிடைத்த வெற்றி” என்று கூறியுள்ளார்.
ஒரு வேளை நிஜ மாமன்னன் தனபாலாக இருந்திருந்தால், அவரால் சல்லிப் பைசாவுக்கு கூட அவர் சார்ந்த அருந்ததிய மக்களுக்கு பிரயோஜனம் இருந்ததில்லை என்பதுதான் உண்மை.
காரணம் பதவிக்காகவும், அதிகாரத்திற்காகவும் இதுபோன்ற மாமன்னன்கள் எப்போதும் கூழைக் கும்பிடு போடுபவர்களாகவும், தான்சாதி மக்களுக்கே துரோகிகளாகவுமே இருந்திருக்கின்றார்கள்.
திமுக ஆட்சியில் துணை சபாநாயகராக இருந்த விபி.துரைசாமி திமுகவில் வாய்ப்பு மறுக்கப்பட்டதும், அங்கிருந்து கிளம்பி நேராக பாஜகவில் போய் சேர்ந்தார். மாமன்னன்களின் அரசியல் யோக்கியதை இவ்வளவுதான்.
பிஜேபி நாடு முழுவதும் தலித்துகளுக்கு எதிராக தீவிரமாக பார்ப்பனிய பயங்கரவாதத்தைக் கட்டவிழ்த்து விடும் கட்சி என்பது துரைசாமிக்குத் தெரியாதா? நன்றாகவே தெரியும். ஆனால் தேர்தல் அரசியல்வாதிகள் தன் சுயசாதி மக்களை பழிகொடுக்கத் தயங்காதவர்கள் என்பதால் துரைசாமியோ, எல்.முருகனோ தன்னையும் தன் குடும்பத்தையும் வளப்படுத்திக் கொள்ள மட்டுமே தன்சாதி மக்களை பயன்படுத்திக் கொள்ளப் பார்க்கின்றார்கள் என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.
தலித் மக்களுக்கு எப்பொதெல்லாம் பிரச்சினைகள் வந்ததோ, அப்போதெல்லாம் களத்தில் கம்யூனிஸ்ட்களும், பெரியாரிய அமைப்புகளுமே நின்றார்கள். உத்தபுர சுவர் பிரச்சினையில் சிபிஎம் நின்றது என்றால், திருப்பூர் மாவட்டம், அவிநாசி அருகே திருமலைக் கவுண்டன்பாளையத்தில் உள்ள அரசு உயர்நிலைப் பள்ளியில் அருந்ததியர் சமுதாயத்தைச் சேர்ந்த பாப்பம்மாள் சமைத்த சாப்பாட்டை சாப்பிட மறுத்த சாதிவெறியர்களுக்கு எதிராக பெரியார் அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் போராடினார்கள். அதன் காரணமாக 75 பேர் மீது எஸ்சி, எஸ்டி வன்கொடுமை தடுப்புச் சட்டப்படி வழக்குப் பதிவு செய்யப்பட்டது. ஆனால் சட்டசபைக்கோ, நாடாளுமன்றத்திற்கோ போன மாமன்னன்கள் ஒரு போதும் வாயே திறக்கவில்லை.
2022 ஆம் ஆண்டு திருவண்ணாமலை மாவட்டம் வீரளூரில் உயிரிழந்த அருந்ததியர் சாதியைச் சேர்ந்த அமுதா என்பவரது உடலைப் பொதுப்பாதை வழியாக எடுத்துச் செல்லமுயன்றதற்காக, வன்னியர், கவுண்டர் உள்ளிட்ட ஆதிக்க சாதி வெறியர்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் திரண்டு அருந்ததியர்களின் குடியிருப்புகளைச் சூறையாடி, அவர்களைக் கொடூரமாகத் தாக்கிய போதும்,
சேலம் மாவட்டத்தில் உள்ள திருமலைகிரியில் உள்ள மாரியம்மன் கோவிலுக்குள் பிரவீன் என்ற பட்டியலின இளைஞர் நுழைந்ததற்காக அந்த ஊரைச் சேர்ந்த ஆதிக்க சாதியினர் தாங்கள் இனிமேல் இந்தக் கோவிலுக்குள் செல்லப் போவதில்லை என அறிவித்த போதும், அந்த இளைஞரை திருமலைகிரி தி.மு.க. ஒன்றிய செயலாளர் மாணிக்கம் என்பவர் பொதுமக்கள் முன்பாக ஆபாசமாகத் திட்டிய போதும்,
விருதுநகர் மாவட்டம் ஆவியூரில் அருந்ததியர்கள் சாதி இந்துக்களால் மோசமான தீண்டாமைக்கு ஆளாக்கப்பட்ட போதும் மாமன்னன்கள் யாரும் வாயே திறக்கவில்லை.
அப்புறம் எதற்காக மாமன்னன்கள் கொண்டாடப்படுகின்றார்கள் என்றால், மாமன்னன்கள் எப்போதுமே பிரச்சினை இல்லாத வெற்று அரசியலை முன்வைக்கின்றார்கள் என்பதால்தான். சாதி ஒழிப்புக்காக எந்த வகையான முன்னெடுப்பையும் எடுக்காமல், ஓர் அமைப்பு சார்ந்து, சித்தாந்தம் சார்ந்து போராடாமல், தனிமனித சாகசத்தின் மூலம் பிரச்சினைக்கு தீர்வு சொல்வதால்தான்.
ஆனால் நாம் ஏன் இது போன்ற படங்களை ஆதரிக்கின்றோம் என்றால், காஷ்மீர் பைல்ஸ், கேரளா ஸ்டோரி போன்ற கேவலமான படங்கள் வரும் காலத்தில் குறைந்த பட்சம் சாதி எதிர்ப்பு மனநிலையை இந்தப் படங்கள் கொண்டிருப்பதால்தான்.
மாமன்னன்கள் எப்போது சாதி ஒழிப்புக்காக களமாடுகின்றார்களோ, எப்போது தலித்துகள் முதலாளித்துவத்தாலும் சாதியாலும் சுரண்டப்படுகின்றார்கள் என்பதை தன் சாதி மக்களுக்குப் புரிய வைத்து, இதற்கு எதிரான போராட்டத்தை ஓர் அமைப்பாக, அரசியலாக கட்டமைக்கின்றார்களோ அப்போதுதான் அவர்கள் உண்மையான மாமன்னன்களாக மாற முடியும்.
Spread the love

TamilNews Media

Tamil web magazine in which daily news, medical articles, politics, sports, education related news are uploaded. Contact 9600032872

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Social Share Buttons and Icons powered by Ultimatelysocial