கள்ளுக்கடைகள் திறக்க நடவடிக்கை எடுக்கப்படும்; அண்ணாமலை!
தமிழக பா.ஜனதா மாநில தலைவர் அண்ணாமலை ஆரணியில் நடைபெற்ற என் மண் என் மக்கள் யாத்திரையில் பேசுகையில், ஆரணி வரலாற்று சிறப்பு மிக்க ஊராகும். அயோத்தியில் பால ராமர் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டதற்கு முக்கிய காரணமே ஆரணிதான். இந்த பகுதியில் உள்ள புத்திரகாமேட்டீஸ்வரர் கோவிலில், ராமரின் தந்தையான தசரத சக்கரவர்த்தி வருகை தந்து புத்திரகாமேட்டி யாக பூஜை செய்ததின் பயனாகத்தான் ராமரே பிறந்தார் என்று வரலாறு உண்டு. ராமருக்கு அயோத்தி எப்படி முக்கியமோ, அதே போன்று அவருடைய தந்தைக்கு பெருமை சேர்த்தது ஆரணி என்று சொல்லும் அளவிற்கு பெருமைமிக்க ஊர் ஆரணி. அதற்கு ஆதாரமாக விளங்குவது குழந்தை ராமர்.கடந்த சட்டமன்றத் தேர்தலின் போது தி.மு.க. சார்பில் வலம் வரும் போது அவர்கள் ஒரு பெட்டியை வைத்தார்கள். இன்றுவரை மக்கள் கொடுத்த மனுக்களுக்கு எந்தவிதமான தகவலும் இல்லை. அது போல் இருக்காது எங்களின் பயணம். 32 வீடு உள்ள ஒரு கிராமம் 20 ஆண்டுகளுக்கு முன்பு எப்படி இருந்ததோ அதே நிலைமைதான் இப்போதும் உள்ளது. பாரத பிரதமர் நரேந்திர மோடி நேரடியாக ஓலை வீட்டிற்கு சென்று அவர்களுடைய வாழ்வாதாரங்களை அறிந்து அவர்களுக்காக பிரதம மந்திரி வீடு திட்டத்தில் வீடுகளை வழங்கி வருகிறார். இப்போது 3-வது முறையாக உங்களுடைய ஓட்டுகளை கேட்டு நாங்கள் வருகிறோம். உங்களுடைய கோரிக்கைகள் அனைத்துமே தேர்தல் அறிக்கைகளாக, புத்தகமாக வெளியிடுவோம். அது மட்டுமல்லாமல் ஆட்சிக்கு வந்ததும் காவல்துறையை விரிவுபடுத்தி, போலீசாருக்கு சம்பளத்தை உயர்த்தி 2 மடங்கு வழங்குவோம். குறைவாக சம்பளம் பெறுவதால்தான் லஞ்சம் பெறுகிறார்கள். அவற்றை தடுக்கவே இது போன்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். தமிழகம் முழுவதும் உள்ள மதுக்கடைகளை முழுமையாக அகற்ற முடியாது. மதுவுக்கு அடிமையானவர்களை மாற்ற மறுவாழ்வு மையங்கள் அமைக்கப்படும். முதல் மற்றும் இரண்டாவது ஆண்டில் 65 சதவீதமாக மதுக்கடைகள் குறைக்கப்படும். மூன்றாவது ஆண்டில் முழுமையாக மதுக்கடைகளை மூட செய்வோம். அதன் பிறகு கள்ளுக்கடைகள் திறக்க நடவடிக்கை எடுக்கப்படும். என் மண் என் மக்கள் பயணத்தின் வெற்றியை போன்று வரும் நாடாளுமன்றத் தேர்தலில் பா.ஜனதாவுக்கு வாக்களித்து வெற்றி பெறச் செய்யுங்கள் என்றார்.