திருப்பதி போறீங்களா.. சென்னை புறநகர் பகுதி மக்களுக்கு தெற்கு ரயில்வே முக்கிய அறிவிப்பு
சென்னை சென்ட்ரல்-திருப்பதி சப்தகிரி எக்ஸ்பிரஸ் ரயில் பகுதி நேரமாக வரும் 31ம் தேதி வரை ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. திருப்பதி கோட்டத்திற்கு உட்பட்ட ரயில் நிலையத்தில் வருகிற 31-ந்தேதி வரை பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் ரயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டிருக்கிறது. திருப்பதி ஏழுமலையான தரிசனம் செய்ய தினசரி சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்டங்களில் இருந்து ஏரளமான மக்கள் பயணிக்கிறார்கள். திருப்பதிக்கு செல்ல தினசரி ரயில் மற்றும் பேருந்து வசதிகள் உள்ளன. பலரும் ரயில் பயணத்தையே விரும்புவார்கள்.. காரணம் விரைவான பயணம், கட்டணம் குறைவு, அலைச்சல் இல்லை..வயதானவர்கள், கர்ப்பிணிகள், குழந்தைகளுடன் சென்றுவர ரயில் பயணமே எளிதாக இருக்கும். இதன் காரணமாக சென்னையில் இருந்து திருப்பதி செல்லும் சப்தகிரி எக்ஸ்பிரஸ் ரயில் எப்போதுமே கூட்டமாக இருக்கும்.
தற்போது பள்ளிகளுக்கு விடுமுறைவிடப்பட்டுள்ளது. கோடை விடுமுறை காரணமாக பலரும் குடும்பத்துடன் திருப்பதிக்கு சென்று ஏழுமலையானை தரிசனம் செய்ய ஆர்வம் காட்டுகின்றனர். இந்நிலையில் சென்னையில் இருந்து திருப்பதி செல்ல திட்டமிட்டுள்ள பயணிகளுக்கு தெற்கு ரயில்வே முக்கிய அறிவிப்பினை வெளியிட்டுள்ளது. இதுகுறித்து தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது: சென்னை சென்டிரலில் இருந்து காலை 6.25 மணிக்கு புறப்பட்டு திருப்பதி செல்லும் சப்தகிரி எக்ஸ்பிரஸ் ரெயில் (வண்டி எண்-16057) வருகிற 31-ந்தேதி வரை ரேணிகுண்டா-திருப்பதி இடையே பகுதி நேரமாக ரத்துசெய்யப்படுகிறது. அதே தேதிகளில், திருப்பதியில் இருந்து மாலை 6.05 மணிக்கு புறப்பட்டு சென்னை சென்ட்ரல் வரும் சப்தகிரி எக்ஸ்பிரஸ் ரெயிலும் (16058) திருப்பதி-ரேணிகுண்டா இடையே பகுதி நேரமாக ரத்துசெய்யப்படுகிறது. அதேபோல, சென்னை சென்டிரலில் இருந்து மதியம் 2.25 மணிக்கு புறப்பட்டு திருப்பதி செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயில் (16053) வருகிற 31-ந்தேதி வரை ரேணிகுண்டா-திருப்பதி இடையே பகுதி நேரமாக ரத்து செய்யப்படுகிறது. அதே தேதிகளில், திருப்பதியில் இருந்து காலை 10.10 மணிக்கு புறப்பட்டு சென்னை சென்ட்ரல் வரும் எக்ஸ்பிரஸ் ரெயிலும் (16054) திருப்பதி-ரேணிகுண்டா இடையே பகுதி நேரமாக ரத்து செய்யப்படுகிறது” இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.