“பெங்களூருக்கு சிம்ம சொப்பனமாகும் சென்னை”.. இனி இந்த ஒரே ஒரு ஏரியா போதும்.. எல்லாம் மாறும்
சென்னை: சென்னையில் உள்ள கேஎன்கே ரோடு எனப்படும் காதர் நவாஸ் கான் ரோடு மொத்தமாக புனரமைக்கப்பட்டு வருகிறது. இறுதி பணிகள் நடக்கும் நிலையில் இங்கே மக்கள் கூட்டம் நிரம்பி வழிகிறது. சென்னையில் இரவு நேர வாழ்க்கையை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்ல சென்னை மாநகராட்சி முடிவு செய்துள்ளது. இதன் ஒரு கட்டமாக மிகப்பெரிய கட்டுமானம் ஒன்றை சென்னை மாநகராட்சி தொடங்கி உள்ளது. சென்னை ஏற்கனவே 24 மணி நேர நகரமாக உள்ளது. இதனால் சென்னையில் 24 மணி நேரமும் பல இடங்களில் கடைகள், புட் கோர்ட்டுகள் திறந்து உள்ளன. இந்த நிலையில் சென்னையில் இரவு நேர வாழ்க்கையை மேலும் சிறப்பாக்க திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளன. அதன்படி சென்னையில் உள்ள நிங்கம்பாக்கம் காதர் நவாஸ் கான் சாலை அதாவது கேஎன்கே சாலையை புதிய தோற்றத்திற்கு மாற்ற முடிவு செய்துள்ளனர். அங்கே 24 மணி நேர கடைகள் திறக்க, சாலைகளை அகலப்படுத்த, அழகாக்க, சாலையோரம் புதிய வகைகள் கடைகள் கொண்டு வர, பப், பார் போன்ற இடங்களை திறக்க முடிவு செய்துள்ளனர். பெங்களூரில் இருக்கும் எம்ஜி ரோடு, சர்ச் ஸ்ட்ரீட், பிரிட்ஜ் ஸ்ட்ரீட் ஆகிய இடங்களை போலவே இங்கும் மாற்றங்களை செய்ய முடிவு எடுக்கப்பட்டு உள்ளது. இதற்காக ஆயிரம் விளக்கு எம்எல்ஏ எழிலன் உடன் ஆலோசனைகளை அதிகாரிகள் செய்து வருகின்றன. இங்கே பப் மூலம் வருவாய் ஈட்டுவதற்காக 24/7 பப் கலாச்சாரத்தை உருவாக்க திட்டமிடப்பட்டு உள்ளது. இங்கே இதற்காக மிக நீண்ட நவீன பிளாசா போன்ற அமைப்பை உருவாக்க உள்ளனர். இந்த பிளாசா நுழைவு வாயில் வரை பைக் செல்லும் வசதியையும் ஏற்படுத்த உள்ளனர். இங்கே இருக்கும் ரட்லேண்ட் கேட் 4வது தெரு, வாலஸ் கார்டன் 2வது தெரு மற்றும் வாலஸ் கார்டன் 3வது தெரு ஆகிய சாலைகளை மேம்படுத்த உள்ளனர். இதற்கான கட்டுமானம் நேற்று தொடங்கியது. இதற்கு அடிக்கல் நாட்டிய நிலையில் கட்டுமானம் பணிகள் தொடங்கி உள்ளன. சிங்கார சென்னை: சிங்கார சென்னை 2.0 திட்டத்தை ஆட்சிக்கு வந்ததில் இருந்தே திமுக அரசு தீவிரமாக செயல்படுத்த முயன்று கொண்டு இருக்கிறது. தமிழ்நாடு பட்ஜெட்டில் கூட இது தொடர்பான பல முக்கியமான அறிவிப்புகள், திட்டங்கள் வெளியாகின. சிங்கார சென்னை 2.0 திட்டத்தின் கீழ் புதிய சுற்றுலா பகுதிகளை உருவாக்குவது, பழைய சுற்றுலா பகுதிகளை மேம்படுத்துவது என்று பல முக்கியமான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. முக்கியமாக சென்னையில் இருக்கும் கடற்கரைகளை சுத்தப்படுத்தும் பணிகளும் நடந்து கொண்டு இருக்கின்றன. சென்னையில் பல புதிய அலங்கார அமைப்புகளை ஏற்படுத்தும் பணிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. முக்கியமாக சாலைகளையும், பொது இடங்களையும் சுத்தப்படுத்தும் பணிகளும் சென்னையில் தீவிரமாக நடந்து கொண்டு இருக்கிறது. மதுரவாயல் – துறைமுகம் உயர்மட்ட சாலையை மீட்டெடுத்து நிறைவு செய்ய அரசு திட்டமிட்டுள்ளது; 20 கிமீ தொலைவு ஈரடுக்கு உயர்மட்ட சாலையாக அமையவுள்ளது. மீஞ்சூர் முதல் வண்டலூர் வரை 62 கிலோமீட்டர் தூரத்துக்கு இரு புறங்களிலும் பெருவழி மேம்பாட்டு திட்டம் செயல்படுத்தப்படும் என்பது போன்ற திட்டங்கள் அறிவிக்கப்பட்டு உள்ளன.