மனித உரிமை செயல்பாட்டாளர்களின் கண்டன கூட்டறிக்கை
கண்டன கூட்டறிக்கை
ஊடகவியலாளர் சவுக்கு சங்கர் மீது கஞ்சா பொய் வழக்கு, சிறையில் கையை உடைத்து சித்தரவதை, குண்டர் சட்டம் ஏவியது குறித்து நீதி விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்!
மனித உரிமை ஆர்வலர்கள், அரசியல் செயற்பாட்டாளர்கள், எழுத்தாளர்கள் கூட்டறிக்கை!!
மனித உரிமை ஆர்வலர்கள், அரசியல் செயற்பாட்டாளர்கள், எழுத்தாளர்கள் சார்பில் 17.05.2024 அன்று விடுத்துள்ள ஊடக கூட்டறிக்கை:
ஊடகவியலாளர் சவுக்கு சங்கர் மீது கஞ்சா வைத்திருந்ததாக பொய் வழக்குப் போட்டு, கோவை சிறையில் கையை உடைத்து சித்தரவதைச் செய்ததோடு, குண்டர் சட்டம் ஏவியுள்ளது குறித்து உயர்நீதிமன்ற ஓய்வுப் பெற்ற நீதிபதி தலைமையில் நீதி விசாரணைக்கு உத்தரவிட வேண்டுமென வலியுறுத்துகிறோம்.
பிரபல ஊடகவியலாளர் சவுக்கு சங்கர் மீது காவல்துறையில் உள்ள பெண்களை இழிவுப்படுத்தி யூடியூப் சேனலுக்குப் பேட்டி கொடுத்ததாக கோவை போலீசார் வழக்குப் போட்டு அவரை கடந்த 04.05.2024 அன்று தேனியில் கைது செய்தனர். பின்னர், அவர் தனது வாகனத்தில் 500 கிராம் கஞ்சா வைத்திருந்ததாக பொய் வழக்குப் போட்டுள்ளனர். தற்போது போலீசார் அவர் மீது கோவை, தேனி, திருச்சி, சேலம், சென்னை ஆகிய மாவட்டங்களில் மொத்தம் 7 வழக்குகள் போட்டுள்ளனர். இன்னும் பல வழக்குகள் போட்டு வருகின்றனர்.
கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்த சவுக்கு சங்கர் மீது 10க்கும் மேற்பட்ட சிறைக் காவலர்கள் இருட்டு அறையில் அடைத்து தாக்கிச் சித்தரவதைச் செய்துள்ளனர். இதனால் அவரது வலது கை உடைந்ததோடு, உடலெங்கும் காயங்கள் ஏற்பட்டுள்ளன. இதுகுறித்து சவுக்கு சங்கர் நீதித்துறை நடுவரிடம் புகார் கூறியதைத் தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது. இந்த அப்பட்டமான மனித உரிமை மீறலுக்குக் கோவை மத்திய சிறைக் கண்காணிப்பாளர் செந்தில்குமார்தான் முழுக் காரணம். இதுகுறித்து நீதிமன்றத்திற்கு அழைத்து வந்தபோது கோவை சிறையில் தனது உயிருக்கு ஆபத்து என்றும், சிறைக் கண்காணிப்பாளர் செந்தில்குமார் தன்னைத் தாக்கிக் கையை உடைத்தார் எனவும் சவுக்கு சங்கர் கூறியுள்ளார்.
தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு, கள்ளக்குறிச்சி மாணவி ஸ்ரீமதி மரணம் போன்றவற்றில் சவுக்கு சங்கர் அரசுக்கும், காவல்துறைக்கும், பள்ளி நிர்வாகத்திற்கும் வெளிப்படையாக ஆதரவாக செயல்பட்டது கடுமையாக கண்டிக்கத்தக்கது. ஊடகத்தை வைத்துக் கொண்டு உள்நோக்கத்தோடு தவறான, பொய்யான கருத்துகளைத் தெரிவிக்கும் போது சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். அதைவிடுத்து சவுக்கு சங்கர் மீது தமிழக அரசும், காவல்துறையும் குண்டர் சட்டத்தை ஏவுவது, பொய்யாக கஞ்சா வழக்குப் போடுவது, கையை உடைப்பது என அடக்குமுறையை ஏவுவது கண்டிக்கத்தக்கது.
சவுக்கு சங்கர் காவல்துறையில் உள்ள பெண்களை இழிவுப்படுத்தி யூடியூப் சேனலுக்குப் பேட்டி கொடுத்த வழக்கை நடத்தி அவருக்குச் சட்டப்படி தண்டனைப் பெற்றுத் தருவதில் யாருக்கும் மாற்றுக் கருத்தில்லை. ஆனால், அவரை கோவை மத்திய சிறையில் தாக்கி, அவரது வலது கையை உடைத்திருப்பது என்பது தண்டனைக்குரிய குற்றமாகும். மேலும், அவரைப் பழிவாங்கும் நோக்கோடு கஞ்சா வைத்திருந்ததாக பொய் வழக்குப் போட்டது ஏற்றுக் கொள்ள முடியாதது. அதோடு விடாமல் பல்வேறு மாவட்டங்களில் புகார் அளித்து வழக்குகள் போடுவது தமிழக அரசு மற்றும் காவல்துறையின் பழிவாங்கும் நடவடிக்கை ஆகும்.
சவுக்கு சங்கர் கைதைத் தொடர்ந்து ‘ரெட்பிக்ஸ்’ யூடியூப் சேனல் செய்தி ஆசிரியர் பெலிக்ஸ் ஜெரால்ட் டில்லியில் கைது செய்யப்பட்டுள்ளார். அவர் மீதும் பல்வேறு வழக்குகள் போட்டுக் கைது செய்ய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. அவர் கைது செய்யப்பட்ட தகவல்கூட அவரது மனைவிக்குத் தெரிவிக்கப்படவில்லை.
சவுக்கு சங்கர் மீதான காவல்துறையின் பழிவாங்கல் நடவடிக்கையின் உச்சகட்டமாக தற்போது அவர் மீது குண்டர் சட்டம் ஏவப்பட்டுள்ளது. குண்டர் சட்டம் உள்ளிட்ட தடுப்புக் காவல் சட்டங்கள் மனித உரிமைகளுக்கு எதிரானவை என்பதால் அவற்றைச் சட்டப் புத்தகத்தில் இருந்து நீக்க வேண்டுமென மனித உரிமை அமைப்புகள் நீண்ட காலமாக போராடி வருகின்றன. இச்சூழலில் சவுக்கு சங்கர் மீது குண்டர் சட்டம் ஏவப்பட்டுள்ளது ஏற்புடையதல்ல.
தமிழக அரசையும், காவல்துறையையும் தொடர்ந்து விமர்சிக்கும் சவுக்கு சங்கர், பெலிக்ஸ் ஜெரால்ட் போன்ற ஊடகவியலாளர்களை மீது பழிவாங்கும் நோக்கில், ஊடகச் சுதந்திரத்திற்கு எதிராக நடவடிக்கைகள் மேற்கொள்ளும் போக்கை வன்மையாகக் கண்டிக்கிறோம்.
சவுக்கு சங்கர் மீது தாக்குதல் நடத்தி அவரது வலது கையை உடைத்த கோவை மத்திய சிறைக் காவலர்கள், சிறைக் கண்காணிப்பாளர் செந்தில்குமார் மீது உரிய குற்ற நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும்.
ஊடகவியலாளர்கள் சவுக்கு சங்கர், பெலிக்ஸ் ஜெரால்ட் கைது, அவர்கள் மீதான மனித உரிமை மீறல்கள் குறித்து உயர்நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் நீதி விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்.
இவண்,
1) பேராசிரியர் அ. மார்க்ஸ், எழுத்தாளர், மனித உரிமைச் செயற்பாட்டாளர்.
2) எஸ்.வி. இராசதுரை, எழுத்தாளர், மனித உரிமைச் செயற்பாட்டாளர்.
3) தியாகு, தலைவர், தமிழ்த்தேசிய விடுதலை இயக்கம்.
4) ஹென்றி திபேன், இயக்குநர், மக்கள் கண்காணிப்பகம்.
5) சுப. உதயகுமரன், தலைவர், பச்சைத் தமிழகம் கட்சி.
6) பேராசிரியர் இரா.முரளி, அகில இந்திய துணைத் தலைவர், மக்கள் சிவில் உரிமைக் கழகம் (PUCL).
7) பொ.இரத்தினம், மூத்த வழக்கறிஞர்.
😎 பேராசிரியர் பிரபா.கல்விமணி, ஒருங்கிணைப்பாளர், பழங்குடி இருளர் பாதுகாப்புச் சங்கம்.
9) வ. கீதா, எழுத்தாளர்.
10) மீ.த. பாண்டியன், செயலாளர், காவல் சித்திரவதைக்கு எதிரான கூட்டியக்கம், தமிழ்நாடு – புதுச்சேரி.
11) கோ. சுகுமாரன், செயலாளர், மக்கள் உரிமைக் கூட்டமைப்பு.
12) பேராசிரியர் சே. கோச்சடை, மொழிபெயர்ப்பாளர், மனித உரிமைச் செயற்பாட்டாளர்.
13) பேராசிரியர் ப. சிவக்குமார்.
14) பேராசிரியர் மு. திருமாவளவன்.
15) பேராசிரியர் முனைவர் அரச முருகுபாண்டியன், கவிஞர், மனித உரிமைச் செயற்பாட்டாளர்.
16) வழக்கறிஞர் ச.பாலமுருகன், எழுத்தாளர், மனித உரிமைச் செயற்பாட்டாளர்.
17) அ. சிம்சன், மாநில ஒருங்கிணைப்பாளர், நீதிக்கான மக்கள் இயக்கம்.
18) தடா ரஹிம், மாநிலத் தலைவர், இந்திய தேசிய லீக் கட்சி.
19) வழக்கறிஞர் தோ.ம. ஜான்சன், தமிழ் வழக்கறிஞர் பேரவை.
20) அமரந்த்தா, எழுத்தாளர், மொழிபெயர்ப்பாளர்.
21) த.வெ.நடராஜன், மனித உரிமைச் செயற்பாட்டாளர்.
22) முருகப்பன் ராமசாமி, நகரக் கல்வி மேம்பாட்டுக் குழு, திண்டிவனம்.
23) கோ. வேடியப்பன், மனித உரிமைச் செயற்பாட்டாளர்.
24) பி.வி.இரமேஷ், தலைவர், மக்கள் பாதுகாப்புக் கழகம்.