மருத்துவ உபகரணங்களுக்கு பதிவு உரிமம் கட்டாயம்
சென்னை-‘அறிவிக்கப்படாத மருத்துவ உபகரணங்களை தயாரிக்கவும், இறக்குமதி செய்யவும், அக்., 1 முதல் பதிவு உரிமம் கட்டாயம்’ என, மத்திய மருந்து தரக் கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்துள்ளது.
நாட்டில் விற்பனை செய்யப்படும் அனைத்து வகையான மருந்து, மாத்திரைகளும், மத்திய மற்றும் மாநில மருந்து தரக் கட்டுப்பாட்டு வாரியங்கள் வாயிலாக ஆய்வு செய்யப்படுகின்றன.
அதேபோல், போலி மருந்துகளும் கண்டறியப்பட்டு, உரிய நடவடிக்கை எடுக்கப்படுகிறது.
மருந்துகளின் தரத்தை உறுதி செய்ய ஒழுங்குமுறை விதிகள் இருந்தாலும், மருத்துவ உபகரணங்களுக்கு கட்டுப்பாடுகள் இல்லை.
மத்திய சுகாதாரத் துறை தகவல்களின்படி, நாட்டில் உள்ள மருத்துவ உபகரணங்களில், 80 சதவீதம் ஒழுங்குமுறை செய்யப்படாமல் உள்ளதாக தெரிகிறது.
இதையடுத்து, அவற்றை தரக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர, மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
அதன்படி, பிரிவு சி, டி வரையறைக்கு கீழ் உள்ள அறிவிக்கப்படாத மருத்துவ உபகரணங்களுக்கு, பதிவு உரிமம் கட்டாயம் ஆக்கப்பட்டுள்ளது.
அவ்வாறு உரிமம் கோரி விண்ணப்பித்தால், நேரடி ஆய்வு செய்து உரிமம் வழங்கப்படும் என, மருந்து தரக் கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்துள்ளது.
மேலும் விபரங்களை, https://cdsco.gov.in/ என்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்.
பதிலளிமுன்அனுப்பு
|