தர்காக்கள், தேவாலயங்களை புனரமைப்பது மட்டுமே ஒரு அரசின் சிறுபான்மை சமூக நலன் திட்டமாக இருக்க முடியாது!
எஸ்டிபிஐ கட்சியின் மாநிலத் தலைவர் நெல்லை முபாரக் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது;- தமிழ்நாடு அரசின் பட்ஜெட்டில் சிறுபான்மை நலன் தொடர்ந்து புறக்கணிக்கப்பட்டு வரும் நிலையில், இந்த ஆண்டின் (2024-25) பட்ஜெட்டிலும் அதே புறக்கணிப்பு தொடர்கிறது. தமிழக அரசின் பட்ஜெட்டில் சமூகநீதி நோக்கில் சிறுபான்மையினர் மேம்பாட்டுக்கான எவ்வித திட்டங்களும் இடம்பெறாது சமூகநீதி அரசுக்கான இலக்கை கேள்விக்குட்படுத்துகிறது. பட்ஜெட்டில் சிறுபான்மையினர் நலன் தொடர்பான அறிவிப்பில், தேவாலயங்கள், பள்ளிவாசல்கள், தர்காக்களை பழுது பார்க்கவும் புனரமைப்பதற்கும் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதை தாண்டி வேறு எந்த விதமான சிறுபான்மையினர் மேம்பாட்டுக்கான அறிவிப்புகளும் பட்ஜெட் அறிவிப்பில் இடம்பெறாதது மிகுந்த ஏமாற்றமளிக்கிறது. அதிலும் கூட ஒதுக்கப்பட்ட தொகை மிகக் குறைவு, மட்டுமின்றி சில பாரம்பரிய முத்துப்பேட்டை போன்ற தர்காக்கள் புறக்கணிக்கப்பட்டுள்ளதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.ஒடுக்கப்பட்ட விளிம்புநிலை சமூகங்களை மேம்படுத்தும் சிறிய முன்னோடி திட்டங்கள் போன்று எந்த ஒரு திட்டமும் சிறுபான்மை சமூக முன்னேற்றத்துக்காக பட்ஜெட்டில் திட்டமிடப்படாதது சிறுபான்மை சமூகங்கள் மீதான சமூகநீதி அரசின் அக்கறையின்மையை வெளிக்காட்டுகிறது.உயர்கல்வி பயிலும் மாணவிகளுக்கு மாதம் ரூ. 1000 வீதம் உதவித் தொகை வழங்கும் புதுமைப் பெண் திட்டத்தில், அரசு உதவி பெறும் சிறுபான்மையினர் பள்ளிகளில் தமிழ் வழியில் பயின்ற மாணவிகள் சேர்க்கப்பட்டுள்ளது வரவேற்கத்தக்க ஒன்றாக இருந்தாலும், உருது உள்ளிட்ட மொழிகளில் பயின்ற சிறுபான்மை மாணவிகள் அந்தத் திட்டத்தில் சேர்க்கப்படாதது ஏமாற்றம் அளிக்கிறது.அதேபோல், ஒன்றிய அரசால் நிறுத்தி வைக்கப்பட்ட ப்ரீ மெட்ரிக் ஸ்காலர்ஷிப் திட்டத்திற்கு மாநில அரசே நிதி ஒதுக்கி செயல்படுத்த வேண்டும் என எஸ்டிபிஐ கட்சி தொடர்ந்து வலியுறுத்தி வந்தது. தமிழக முதல்வரும் ஒன்றிய அரசு திட்டத்தை செயல்படுத்த தவறும் பட்சத்தில் மாநில அரசே அதனை ஏற்று செயல்படுத்தும் என வாக்குறுதி அளித்திருந்தார். நேற்று முன்தினம் நடைபெற்ற முஸ்லிம் சமூகப் பிரதிநிதிகள் கூட்டத்தில் கூட, அந்தத் திட்டத்தின் கீழ் முஸ்லிம் மாணவிகளுக்கு வக்பு வாரியம் மூலம் உதவித்தொகை வழங்கப்படும் என அறிவித்திருந்தார். ஆனால், பட்ஜெட்டில் அது தொடர்பான அறிவிப்பு எதுவும் இல்லை.தமிழக அரசின் பட்ஜெட்டில் சிறுபான்மை நலத்திட்டங்களில், சிறுபான்மை சமூக மக்களின் பொருளாதாரம், வாழ்வியல் சூழல், தொழில் ஆகியவற்றை மேம்படச் செய்யும் அறிவிப்புகள் புறக்கணிக்கப்படுவதால், சிறுபான்மை சமூக மக்களுக்காக தனி பட்ஜெட்டை தமிழ்நாடு அரசு வெளியிட வேண்டும் என்று எஸ்டிபிஐ கட்சி தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகின்றது.அதேபோல் தமிழகத்தில் உள்ள முஸ்லிம்களின் வாழ்நிலை குறித்து அறிய, சச்சார் கமிட்டி போன்றதொரு கமிட்டியை அமைத்து, முஸ்லிம் சமூகத்தின் முன்னேற்றத்திற்கான அனைத்து விதமான திட்டமிடல் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று எஸ்டிபிஐ கட்சி தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. அது தொடர்பான அறிவிப்புகள் எதுவும் பட்ஜெட்டில் இல்லை.ஆட்சி அமைத்து மூன்று ஆண்டுகள் ஆகிவிட்ட போதும், சிறுபான்மை சமூக மக்களின் முன்னேற்றத்துக்காக எந்த பொருளாதார திட்டத்தையும், அறிவிப்பையும், நிதி ஒதுக்கீடையும் செய்யாதது சிறுபான்மை சமூக மக்களிடையே இந்த அரசு குறித்த வெறுமையையே ஏற்படுத்தியுள்ளது. வழக்கம்போல இந்த பட்ஜெட் சிறுபான்மை சமூக மக்களின் எதிர்ப்பார்ப்பை, நம்பிக்கையை பூர்த்தி செய்யாத புஸ்வான பட்ஜெட்டாகவே அமைந்துள்ளது.திமுகவின் தேர்தல் அறிக்கையில் கூறப்பட்ட பல விஷயங்கள் காற்றில் பறக்க விடப்பட்டதாக தெரிகிறது. ஆட்சி அமைத்து மூன்று பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்ட போதும், தேர்தல் அறிக்கையில் அளிக்கப்பட்ட வாக்குறுதிகளை மையமாக வைத்து, அதனை நிறைவேற்றுகிற வகையில் பட்ஜெட் தயாரிக்கப்படவில்லை. சேவை உரிமைகள் சட்டம் தொடர்பான எந்த நகர்வையும் இந்த அரசு மேற்கொண்டதாக தெரியவில்லை. மாநில கல்வி கொள்கை தொடர்பான அறிவிப்புகளோ அதற்கான நிதி திட்டமிடல்களோ பட்ஜெட் அறிவிப்பில் இல்லை.மேலும், தமிழகத்தை பொருளாதார ரீதியில் முன்னேற்ற தொழில் முன்னேற்றங்கள் குறித்த அறிவிப்புகள் இல்லை. வேலைவாய்ப்பை அதிகரிக்கும் திட்டங்களோ, பார்வைகளோ இவ்வரசுக்கு இருப்பதாக தெரியவில்லை. தனியார் நிறுவனங்களையோ, கார்ப்பரேட்களையோ மட்டுமே நம்பியிராமல் தொழில் முனைவர்களை பெருமளவில் உருவாக்க தேவையான திட்டங்களை வகுக்க வேண்டும் என்கிற கோரிக்கை புறக்கணிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தின் பொருளாதாரம் கார்ப்பரேட் பொருளாதாரமல்ல; மாறாக சிறு குறு விவசாய, மத்திய வர்க்க பொருளாதாரமாகும் . இதை உணர்ந்து அதனை முன்னேற்ற தேவையான திட்டங்கள் உடனடியாக திட்டமிடப்பட வேண்டும்.அதேபோல் இந்த பட்ஜெட்டில் சாதிவாரி கணக்கெடுப்பு பற்றி அறிவிக்கப்படாதது ஏமாற்றம் அளிக்கிறது. பல்வேறு மாநிலங்கள் சாதிவாரி கணக்கெடுப்புக்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வரும் நிலையில், சமூக நீதியில் முன்னோடி மாநிலமான தமிழகத்தில் அதனை செயல்படுத்த நடவடிக்கை எடுக்காமல், சாதிவாரி கணக்கெடுப்பை ஒன்றிய அரசின் பக்கம் தள்ளிவிடும் அறிவிப்பு ஏற்புடையதல்ல. ஆகவே சாதிவாரி கணக்கெடுப்பின் அவசியத்தை உணர்ந்து தமிழக அரசு சாதிவாரி கணக்கெடுப்பை நடத்த அறிவிப்பு வெளியிட வேண்டும். இவ்வாறு அவர் அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.