தாழ்த்தப்பட்டவர்களுக்கு கொட்டாங்குச்சியில் டீ வழங்கல்; பரபரப்பு!
தர்மபுரி மாவட்டம் அரூர் அருகே உள்ள போளையம்பள்ளி கிராமத்தை சேர்ந்த 50 வயது பெண் விவசாய தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார். தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த இவர் கடந்த 8-ந்தேதி ஆர்.கோபிநாதம்பட்டி பகுதியில் உள்ள ஒரு விவசாய நிலத்திற்கு கொள்ளு செடிகளை பறிக்கும் வேலைக்கு சென்றார். அவருடன், அதே பகுதியை சேர்ந்த மேலும் 3 பெண்களும் சென்றனர். அங்கு பணி நடந்தபோது இடையே டீ வேண்டும் என்று அவர்கள் கேட்டுள்ளனர். அப்போது இவர்களை பணிக்கு அழைத்த சின்னதாய் (55), தனது மருமகள் தரணி (36) என்பவரிடம் டீ கொண்டு வருமாறு கூறியுள்ளார். இதையடுத்து தரணி ஒரு சொம்பில் டீ கொண்டு வந்துள்ளார். அப்போது சின்னதாய்க்கு எவர்சில்வர் டம்ளரிலும், மற்றவர்களுக்கு கொட்டாங்குச்சியிலும் டீ வழங்கப்பட்டதாக தெரிகிறது. இதை அந்த வழியாக சென்ற ஒரு வாலிபர் பார்த்து அதிர்ச்சி அடைந்தார். அவர் அந்த காட்சிகளை செல்போனில் வீடியோ எடுத்துள்ளார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் பரவியது. இந்த சம்பவத்தால் பாதிக்கப்பட்ட 50 வயது பெண் இந்த சம்பவம் குறித்து கம்பைநல்லூர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.அதன்பேரில் போலீசார் இந்த புகார் தொடர்பாக சின்னதாய், அவருடைய மருமகள் தரணி ஆகியோரிடம் விசாரணை நடத்தினர். அப்போது 4 பெண்களுக்கு கொட்டாங்குச்சியில் டீ கொடுத்தது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து சின்னதாய், தரணி ஆகிய 2 பேர் மீதும் எஸ்.சி., எஸ்.டி. வன்கொடுமை சட்டப்பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்த போலீசார், 2 பேரையும் கைது செய்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.