வீடு கட்டுவதற்கு வழங்கப்படும் கம்பிகள் மழையில் நனைந்து துருப்பிடித்து வருவதால் பயனாளிகள் அவதி
கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் மத்திய அரசு மற்றும் தமிழக அரசு சார்பில் வீடு கட்டும் திட்டத்திற்கு வழங்கப்படும் இரும்பு கம்பிகள் வைக்கப்பட்டுள்ளது
குறிஞ்சிப்பாடி சுற்றியுள்ள அனைத்து ஊராட்சிகளிலும் இங்கிருந்து வீடு கட்டுவதற்கு தேவையான சிமெண்ட், இரும்பு ஜன்னல்கள் கதவுகள், இரும்பு கம்பிகள் போன்ற பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது இந்நிலையில் தற்பொழுது மழைக்காலம் தொடங்கியுள்ளதால் தொடர்ந்து குறிஞ்சிப்பாடி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் ஆங்காங்கே மழை பெய்து வருவதாலும் வீடு கட்ட உபயோகிக்கப்படும் கம்பிகள் அனைத்தும் துருப்பிடித்து காணப்படுகிறது அலுவலக நுழைவு வாயில் அருகே இந்த கம்பிகள் கிடப்பதை தினமும் அதிகாரிகள் பார்த்து கடந்து சென்று வருகின்றனர்
அலுவலக வளாகத்தில் உள்ள கம்பிகளை தற்காலிகமாக மழையில் நனையாமல் தார்ப்பாய் போட்டு பாதுகாக்காமல் மெத்தனம் காட்டி வரும் அதிகாரிகளால் பொதுமக்களுக்கு வழங்கப்படும் பொருட்கள் வீணாவதோடு அரசுக்கு வருவாய் இழப்பும் ஏற்படுகிறது மேலும் இந்த துருப்பிடித்த கம்பிகளை வைத்து பயனாளிகள் வீடு கட்டினால் அவற்றின் நிலைமை படுமோசமாகிவிடும் என்பதை கருத்தில் கொண்டு உடனடியாக மழைக்காலங்களில் தற்காலிகமாக இரும்பு கம்பிகளை தார்ப்பாய் அமைத்து பாதுகாக்க வேண்டும் என்று பொதுமக்கள் சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது