“பத்ம விருதுடன் சென்னை வந்த பிரேமலதா”. பேரணியாக செல்ல முயற்சி! போலீசார் அனுமதி மறுத்ததால் வாக்குவாதம்
பத்ம விருதுகள் வழங்கும் விழா, டெல்லியில் குடியரசுத் தலைவர் மாளிகையில் நேற்று முன்தினம் நடைபெற்றது. இந்த விழாவில், மறைந்த நடிகர் விஜயகாந்துக்கு வழங்கப்பட்ட பத்ம பூஷண் விருதை அவரது மனைவியும், தேமுதிக பொதுச் செயலாளருமான பிரேமலதா விஜயகாந்த், குடியரசுத் தலைவர் திரவுபதி முர்முவிடம் இருந்து பெற்றுக் கொண்டார். விஜயகாந்த் மறைந்த நிலையில் மத்திய அரசு தந்த பத்ம பூஷன் விருதை அவருக்கு சமர்ப்பிக்கும் வகையில் பிரேமலதா விஜயகாந்த் மேல்நோக்கி பார்த்தார். இந்த விழாவில் நடிகர் விஜயகாந்தின் மகன் விஜய பிரபாகரன் மற்றும் பிரேமலதா விஜயகாந்தின் தம்பி சுதீஷ் உள்ளிட்டவர்கள் பங்கேற்று இருந்தனர். இந்நிலையில், விஜயகாந்த்துக்கான பத்ம பூஷன் விருதுடன் இன்று சென்னை வந்தடைந்தார் பிரேமலதா விஜயகாந்த். சென்னை விமான நிலையத்தில் ஏராளமான தேமுதிக தொண்டர்கள் கூடி, பத்ம பூஷன் விருதுடன் வந்த பிரேமலதாவை வரவேற்றனர். இதைத்தொடர்ந்து, தொண்டர்கள் புடைசூழ விஜயகாந்த் நினைவிடத்திற்கு பேரணியாக சென்று அஞ்சலி செலுத்த திட்டமிட்டார் பிரேமலதா விஜயகாந்த். திறந்தவெளி வாகனத்தில் பிரேமலதா, பத்மபூஷன் விருதைக் காட்டியபடி புறப்பட்டார். அவரைத் தொடர்ந்து தேமுதிகவினர் தங்கள் வாகனங்களில் பேரணியாகச் செல்லக் கிளம்பினர். சென்னையில் அனுமதியின்றி விமான நிலையத்தில் இருந்து பிரேமலதாவுடன் பேரணியாக செல்ல முயன்ற தேமுதிகவினரை போலீசார் தடுத்து நிறுத்தினர். 2 வாகனங்களை மட்டுமே அனுமதிக்க முடியும் எனக் கோரி பேரிகார்டு போட்டு தடுத்தனர். இதனால் தேமுதிக தொண்டர்களுக்கும் போலீசாருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த்தின் திறந்தவெளி வாகனப் பேரணிக்கு போலீசார் அனுமதி மறுத்தனர். ஒன்றிரண்டு வாகனங்களை மட்டுமே அனுமதிக்க முடியும் எனத் தெரிவித்தனர். இதனால், சென்னை விமான நிலையத்தில் இருந்து வெளியே செல்ல மாட்டோம் என தேமுதிகவினர் மறுப்பு தெரிவித்தனர்.பத்மபூஷன் விருதுடன் தமிழ்நாடு திரும்பி இருக்கும் தன்னை போலீசார் இவ்வாறு தடுக்கக்கூடாது என பிரேமலதா போலீசாரிடம் தெரிவித்தார். இதையடுத்து நீண்ட நேரம் வாக்குவாதம் நடந்தது. பிரேமலதா வாகனத்தை பின்தொடர்ந்து, வாகனப் பேரணியாகச் செல்ல முயன்றவர்களை பேரிகார்டு போட்டு தடுத்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.