ரேஷன் கார்டு வைத்துள்ளவர் களுக்கான அறிவிப்புகள்!
ரேஷன் கடைகளில் விரல் ரேகை சரிபார்ப்பு பணியினை முடிக்க பின்வரும் அறிவுரைகள் வழங்கப்படுகிறது. அதன்படி, ரேஷன் கடைகளில் அத்தியாவசிய பொருட்கள் பெறும் பயனாளிகளின் குடும்ப உறுப்பினர்களது கைவிரல் ரேகை வைக்கப்படும்போது ஆவணங்கள் ஏதும் கோரக்கூடாது. ரேஷன் அட்டைதாரரின் குடும்ப உறுப்பினர்கள் கைவிரல் ரேகை சரிபார்ப்பு மேற்கொள்ளப்படவில்லை எனில், அவர்களின் பெயர் நீக்கம் செய்யப்படும் என்றோ, அத்தியாவசிய பொருட்கள் வழங்கப்படாது என்றோ தவறான தகவல்கள் வழங்கப்படக்கூடாது. ரேஷன் அட்டைதாரர்களின் வசதியின்படி, ரேஷன் கடைக்கு வந்து கைவிரல் ரேகையை பதிவு செய்து கொள்ளலாம். மாறாக, அவர்களை கட்டாயப்படுத்தி ரேஷன் கடைக்கு வரவழைத்து சிரமங்களை ஏற்படுத்தக்கூடாது. ரேஷன் கடையில் விற்பனை முடிந்த பிறகு ரேஷன் அட்டைதாரர்களது வீடுகளுக்கு சென்று பயனாளிகளின் கைவிரல் ரேகை வைக்கும் பணியை மேற்கொள்ளலாம். மேற்கூறிய அறிவுரைகளை பின்பற்றி கைவிரல் ரேகை சரிபார்ப்பு பணியை, பயனாளிகளுக்கு எவ்வித இடையூறுகள் இல்லாமலும், குழப்பங்கள் ஏதும் இல்லாமலும் முடிக்கப்பட ரேஷன் கடை பணியாளர்களை அறிவுறுத்துமாறும், அப்பணியினை மேற்பார்வையிட சம்பந்தப்பட்ட அலுவலர்களை அறிவுறுத்துமாறும் கேட்டுக்கொள்கிறேன் என உணவுப்பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை முதன்மை செயலாளர் ஹர் சஹாய் மீனா அனைத்து மாவட்ட கலெக்டர்களுக்கும் அனுப்பி உள்ள சுற்றறிக்கையில் தெரிவித்துள்ளார்.