“நெய்வேலி : நீதிமன்றத் தீர்ப்பு வேதனையாக இருக்கிறது”
“நெய்வேலி : நீதிமன்றத் தீர்ப்பு வேதனையாக இருக்கிறது”
கடலூர் மாவட்டம், நெய்வேலி என்எல்சி நிர்வாகம் இரண்டு சுரங்க விரிவாக்கப் பணிக்காக கரிவெட்டி, மேல்வளையமாதேவி, கீழ் வளையமாதேவி, ஆதனூர் உள்ளிட்ட கிராமங்களில் நிலங்களை 2007-ம் ஆண்டு கையகப்படுத்தியது. சம்பந்தப்பட்ட இடங்களில் வாய்க்கால் வெட்டும் பணியின்போது பயிர்கள் சேதப்படுத்தப்பட்டதற்கு எதிர்ப்பு வலுத்த நிலையில், சாகுபடி செய்யப்பட்டுள்ள பயிர் அறுவடை செய்யப்படும் விவசாயிகளுக்கு இடையூறு ஏற்படுத்தக் கூடாது என உத்தரவிடக் கோரி பாதிக்கப்பட்ட விவசாயி ஒருவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம், சேதப்படுத்தப்பட்ட பயிர்களுக்கு ஏக்கருக்கு ரூ.40,000 இழப்பீட்டுத் தொகையாக நிர்ணயித்து உத்தரவு பிறப்பித்தார்.
இந்த இழப்பீட்டுத் தொகை வரும் ஆக.6-ம் தேதிக்குள் பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்க வேண்டும் என்றும் உத்தரவிட்டார்.
கூடுதலாக நம்மால் ஒத்துக்கொள்ள முடியாத கடலூர் மாவட்டத்தின் வேளாண்மை சூழலுக்கு எதிரான உத்தரவையும் அவர் வழங்கியுள்ளார்.
. செப்டம்பர் 15-ம் தேதிக்குப் பிறகு அந்த நிலத்தில் விவசாயப் பணிகள் எதுவும் மேற்கொள்ளக் கூடாது. கையகப்படுத்தப்பட்ட நிலத்தை என்எல்சி பாதுகாக்க வேண்டும். நிலத்தின் முன்னாள் உரிமையாளர்கள் சட்டம் – ஒழுங்கு பிரச்சினை ஏற்படுத்தினால் அரசு அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கலாம் என உத்தரவிட்டுள்ளார்.
விசாரணையை ஆகஸ்ட் 7-ம் தேதிக்கு ஒத்திவைத்துள்ளார்.
இப் பிரச்சனைகளால் அரசாங்கத்தை நமக்கும் நிறுவனத்துக்கும் நடுவில் நிறுத்தி, போராடி, நம் உரிமைகளைப் பெற வேண்டுமே ஒழிய, நீதிமன்றத்தின் கதவுகளைத் தட்டக் கூடாது என்பதை விவசாயிகளுக்கு எவருமே சொல்லவில்லையா?
தேவைக்கு மேலே நிலங்களைக் கையகப்படுத்தி என்எல்சி நிர்வாகம் தன் கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறது. என்எல்சியுடன் ஒப்பந்தமிட்டு சுரங்கம் வெட்டும் பணியை செய்யும் ஆந்திராவைச் சேர்ந்த மகாலட்சுமி நிறுவனம் அனல் மின் நிலையங்களுக்குத் தேவையானதை விட கூடுதலாக நிலக்கரியை வெட்டி தனியாருக்கு விற்றுக் கொண்டிருக்கிறது.
என்எல்சி நிர்வாகத்தினுடைய சுரங்கத் திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டால் கடலூரில் விளைநிலம் என்பதே இல்லாமல் போய்விடும். முன்னமே அனல் மின் நிலையங்களால் உருவாகும் புவி வெப்பமயமாதலால், காலநிலை மாற்றத்தால், கடல் மட்டம் உயர்ந்து வரக்கூடிய சூழலில், தமிழ்நாட்டின் கடற்கரையோரப் பகுதிகள் எல்லாம் கடலுக்குள் மூழ்கி விடும் அபாயம் நெருங்கிக் கொண்டிருக்கிறது. உலக அளவில் அனல் மின்நிலையங்களைக் குறைத்துக் கொண்டு வரும் இந்த நேரத்தில் அனல் மின்நிலையங்களுக்காக விளைநிலங்களை எல்லாம் காவு கொள்வது என்பது இந்தியா உலக அரங்கில் கொடுத்த உறுதிமொழிக்கு எதிரானது. வரவிருக்கும் பேரபாயத்தை தடுத்து நிறுத்த மக்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து தடுத்து நிறுத்த வேண்டிய ஒன்று இது.
இந்நிலையில் 2007 அளவில் சொற்ப தொகையை .கொடுத்து நிலத்தை கையகப்படுத்திய என்.எல்.சி நிர்வாகம் எந்த குடும்பத்துக்கும் நிரந்தர வேலை வாய்ப்பைத் தரவில்லை. என்எல்சி நிர்வாகம்தான் நம்பிக்கை துரோகம் செய்திருக்கிறது. இப்போது அனல் மின்நிலையங்களுக்காக நிலத்தை கையகப்படுத்தக் கூடாது என்று தடை செய்து தமிழ்நாடு அரசு விவசாய நிலங்களைப் பாதுகாக்க முன் வர வேண்டும். ஆனால் அப்படி நிகழவில்லை.
மாறாக, நீதிமன்றம் நீதியை வழங்கும் என்று நினைத்துக் கொண்டு விவசாயி ஒருவர் உயர் நீதிமன்றத்திற்கு சென்று ஒட்டுமொத்த விவசாயத்தையே முடிவுக்கு கொண்டு வரக்கூடிய ஒரு தீர்ப்பை வாங்கி வந்திருக்கிறார். இப்போது எவருமே போராட முடியாத ஒரு சூழல் எழுந்துள்ளது வேதனையாக இருக்கிறது.
அனைத்து கட்சிகளும் அமைப்புகளும் ஒட்டுமொத்த விவசாயிகளும் களமிறங்கி விவசாய நிலம் முழுவதையும் பாதுகாக்க வேண்டும். தமிழ்நாடு அரசு பிரச்சினையை சரியாக புரிந்து கொள்ள வேண்டும். இந்த விளைநிலங்களைக் கையகப்படுத்திக் கொடுக்கும் வேலையை நிறுத்த வேண்டும். தமிழ்நாட்டை | தமிழ்நாட்டின் வேளாண்மையை, தமிழ்நாட்டின் விவசாய நிலத்தைப் பாதுகாப்பதுதான் தமிழ்நாட்டின் முதன்மைக் குறிக்கோளாக இருக்க வேண்டும்.
உலகமே மாற்று எரிசக்தி நோக்கி நகர்ந்து கொண்டிருக்கும்போது அனல் மின்நிலையங்களுக்கு என்று ஒட்டுமொத்த விவசாயத்தையும் அழிப்பது நியாயம் இல்லை. முன்னமே இந்த நிலங்களுக்காக என்எல்சி நிர்வாகம் உரிமையைப் பெற்றிருந்தாலும் கூட இப்போது அந்த நிலத்தை மீட்டுக் கொடுக்க வேண்டிய கடமை தமிழ்நாடு அரசுக்கு இருக்கிறது. தமிழ்நாடு அரசு தலையிட்டு அந்த கடனை, அந்தத் தொகையை கடனாகக் கருதி தள்ளுபடி செய்யும்படி கூட பேசி முடிக்கலாம். அதிக தொகை கொடுத்தால் நிலத்தை கொடுத்து விடுகிறோம் என்ற ஒரு பார்வையை தலைவர்கள் புதிதாக கிளப்பி விட்டு வளர்த்து வருகிறார்கள். இது முழுமையான தவறான போக்கு ஆகும். எத்தனை கோடி கொட்டிக் கொடுத்தாலும் தாய் மண்ணை கரிக்காடாக மாற்ற அனுமதிக்க மாட்டோம் என்று கருதுவது தான் சரியானது. களத்திற்கு விவசாயிகள் வரவேண்டும் சரியான புரிதலோடு. மண்ணைக் காக்கும் போராட்டத்திற்கு மக்கள் அணியாக வேண்டும்.
“பேராசிரியர் த. செயராமன், தலைமை ஒருங்கிணைப்பாளர்,மீத்தேன் திட்ட எதிர்ப்புக் கூட்டமைப்பு
03.08.2023.