காவல் துறைக்கு ரூ.18¼ கோடியில் புது கட்டிடங்கள்; முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்!
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமைச் செயலகத்தில், காவல்துறை சார்பில் 18 கோடியே 20 லட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள 62 காவலர் குடியிருப்புகள், 2 காவல் நிலையங்கள், திருநெல்வேலி மாநகர் மற்றும் திருநெல்வேலி மாவட்ட ஆயுதப்படைகளுக்கு 2 ஒருங்கிணைந்த நிர்வாகக் கட்டடங்கள் ஆகியவற்றை காணொலிக் காட்சி வாயிலாக திறந்து வைத்தார்.
காவல்துறை என்பது குற்றங்களைத் தடுக்கும் துறையாகவும், தண்டனை பெற்றுத்தரும் துறையாகவும் மட்டும் அல்லாமல், குற்றங்கள் நடக்காத சூழ்நிலையை உருவாக்கும் துறையாகச் செயல்பட வேண்டும் என்று மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் அறிவுறுத்தியுள்ளார்கள். அதன்படி, மாநிலத்தின் அமைதியைப் பேணிப் பாதுகாத்து, சட்டம் ஒழுங்கைப் பராமரிக்கும் முக்கியப் பணிகளை ஆற்றி வரும் காவல் துறையின் பணிகள் சிறக்க, இவ்வரசு பொறுப்பேற்றப்பிறகு காவல் நிலையங்களுக்காக 46.28 கோடி ரூபாய், காவல் குடியிருப்புகளுக்காக 764.13 கோடி ரூபாய், காவல் துறையின் இதர கட்டடங்களுக்கென 115.77 கோடி ரூபாய், சொந்த இல்லத் திட்டத்தின்கீழ் 55.19 கோடி ரூபாய் மற்றும் சிறப்பு பராமரிப்புப் பணிகளுக்கென 149 கோடி ரூபாய் என பல்வேறு கட்டுமானப் பணிகளுக்கு 1130.37 கோடி ரூபாயும், காவல் கண்காணிப்பு பணிகளுக்கு ரோந்து வாகனங்களுக்காக 88 கோடியே 91 லட்சம் ரூபாயும், காவல்துறையின் உட்கட்டமைப்பு வசதிகளுக்கு 571.15 கோடி ரூபாயும் என மொத்தம் 1,790 கோடி ரூபாய் மதிப்பீட்டில் பல்வேறு திட்டங்களைக் காவல்துறையின் மேம்பாட்டிற்காக முதலமைச்சர் ஆணையிட்டு, செயல்படுத்தப்பட்டு வருகிறது. அதன் தொடர்ச்சியாக இன்று,முதலமைச்சர் கோயம்புத்தூர் மாவட்டம் – ஆனைமலையில் 4 கோடியே 69 லட்சத்து 39 ஆயிரம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள 30 காவலர் குடியிருப்புகள் மற்றும் நாமக்கல் மாவட்டம் குமாரப்பாளையத்தில் 4 கோடியே 8 லட்சத்து 97 ஆயிரம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள 32 காவலர் குடியிருப்புகள், என மொத்தம் 8 கோடியே 78 லட்சத்து 36 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 62 காவலர் குடியிருப்புகளைத் திறந்து வைத்தார். மேலும், இராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் 67 லட்சத்து 71 ஆயிரம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள போக்குவரத்து காவல் நிலையக் கட்டடம், திருப்பூர் மாவட்டம் அவிநாசிபாளையத்தில் 1 கோடியே 17 லட்சத்து 36 ஆயிரம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள காவல் நிலையக் கட்டடங்களும், திருநெல்வேலி மாநகர ஆயுதப்படை மற்றும் திருநெல்வேலி மாவட்ட ஆயுதப்படைகளுக்கு பாளையங்கோட்டை ஆயுதப்படை வளாகத்தில் 7 கோடியே 56 லட்சத்து 63 ஆயிரம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள 2 ஒருங்கிணைந்த நிர்வாகக் கட்டடங்கள், என மொத்தம் 18 கோடியே 20 லட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள காவல் துறை கட்டடங்களை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் இன்று திறந்து வைத்தார்.
இந்த நிகழ்ச்சியில், தலைமைச் செயலாளர் சிவ் தாஸ் மீனா, மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை முதன்மை செயலாளர் அமுதா, காவல்துறை தலைமை இயக்குநர் சங்கர் ஜிவால், தமிழ்நாடு காவலர் வீட்டுவசதி கழகத்தின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநர் விசுவநாதன் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.