மணிப்பூர் வன்முறை வழக்கு விசாரணையை கண்காணிக்க ஓய்வுபெற்ற 3 பெண் நீதிபதிகள் குழு நியமனம்: உச்ச நீதிமன்றம் உத்தரவு!.
மணிப்பூர் வன்முறை வழக்கு விசாரணையை கண்காணிக்க ஓய்வுபெற்ற 3 பெண் நீதிபதிகள் குழு நியமனம்: உச்ச நீதிமன்றம் உத்தரவு!.
08.08.2023, சென்னை
மணிப்பூரில் கடந்த 3 மாதங்களாகநடைபெற்று வரும் வன்முறைக்கு 150-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். இந்த வன்முறைக்கு நடுவே பெண்களுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாகவும் புகார் எழுந்துள்ளது.
இது தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் பல்வேறு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. இந்த மனுக்கள் தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலைமையிலான அமர்வு முன்பு கடந்த 1-ம் தேதி விசாரணைக்கு வந்தன.
அப்போது, மாநிலத்தில் சட்டம் ஒழுங்கு முற்றிலும் சீர்குலைந்து விட்டதாக கடும் கண்டனம் தெரிவித்த நீதிபதிகள், 7-ம் தேதி மாநில டிஜிபி நேரில் ஆஜராகி முழு விவரங்களை தாக்கல் செய்ய உத்தரவிட்டனர்.
இதன்படி இந்த மனுக்கள் ஆகஸ்ட் 07 ஆம் தேதி விசாரணைக்கு வந்தன.
இதனுடன், வன்முறையால் பாதிக்கப்பட்டோருக்கு நிவாரணம் வழங்க உத்தரவிட கோரியும் நீதிமன்ற கண்காணிப்பின் கீழ் விசாரணை நடத்தக் கோரியும் தாக்கல்செய்யப்பட்ட 10 மனுக்களும்விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டன.
அப்போது மணிப்பூர் மாநில டிஜிபி இராஜிவ் சிங் ஆஜரானார்.
‘‘மணிப்பூர் விவகாரத்தை மிகவும்முதிர்ச்சியுடன் கையாண்டு வருகிறோம். இதுதொடர்பாக பிரமாண பத்திரம் தாக்கல் செய்துள்ளோம்’’ என்று மத்திய அரசின் அட்டர்னி ஜெனரல் ஆர்.வெங்கட்ரமணி தெரிவித்தார்.
சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா கூறும்போது, “மணிப்பூர் வன்முறை தொடர்பான வழக்குகளில், 2 பெண்கள் ஆடையின்றி ஊர்வலமாக அழைத்துச் செல்லப்பட்டது உட்பட பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தொடர்புடைய 11 வழக்குகளை சிபிஐ விசாரிக்கும்.
காவல் கண்காணிப்பாளர் அந்தஸ்திலான பெண் அதிகாரி தலைமையிலான மாவட்ட அளவிலான சிறப்பு புலனாய்வுக் குழு இந்த வழக்குகளை விசாரிக்கும்.
மற்ற வழக்குகளை மாநில காவல்துறை விசாரிப்பர் என்றார்.
இதையடுத்து நீதிபதிகள் கூறியதாவது:
மணிப்பூர் விவகாரத்தில் மக்கள் மத்தியில் நம்பிக்கையை ஏற்படுத்துவதற்காக நாங்கள் முயற்சி செய்து வருகிறோம். இது தொடர்பான ஒட்டுமொத்த வழக்கு விசாரணையை கண்காணிக்க 3 உயர் நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதிகள் குழு அமைக்கப்படுகிறது.
இக்குழு நிவாரணம் மற்றும் மறுவாழ்வு நடவடிக்கைகள் குறித்தும் ஆலோசனை வழங்கும்.
காஷ்மீர் உயர் நீதிமன்ற முன்னாள்தலைமை நீதிபதி கீதா மிட்டல், மும்பை உயர் நீதிமன்ற முன்னாள் நீதிபதி ஷாலினி ஜோஷி, டெல்லி உயர் நீதிமன்ற முன்னாள் நீதிபதி ஆஷா மேனன் ஆகியோர் இக்குழுவில் இடம்பெறுவர்.
பெண்களுக்கு எதிரான குற்ற வழக்குகள் மீதான சிபிஐ விசாரணையை மராட்டிய முன்னாள் டிஜிபி தத்தாத்ரே பத்சல்கிகர் கண்காணிப்பார்.
சிபிஐ விசாரணைக் குழுவில் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த துணை காவல் கண்காணிப்பாளர் அந்தஸ்து அதிகாரிகள் 5 பேர்இடம்பெறுவர்.
இவர்கள் அனைவரும் பெண்களாகவே இருப்பார்கள்.
சிபிஐ வசம் ஒப்படைக்கப்படாத வழக்குகளை விசாரிக்க 42 சிறப்பு புலனாய்வுக் குழுக்கள் (எஸ்ஐடி) அமைக்கப்படும். இந்த குழுக்களை வெளி மாநிலங்களைச் சேர்ந்த டிஐஜி அந்தஸ்து அதிகாரிகள் கண்காணிப்பர்.
ஒவ்வொரு அதிகாரியும் 6 எஸ்ஐடி குழுக்களை கண்காணிப்பார்கள். இவ்வாறு நீதிபதிகள் தெரிவித்தனர்.
எங்கள் WhatsApp குழுவில் இணையுங்கள்