ஆன்லைன் திருமண தகவல் மையம் மூலம் மலர்ந்த காதல்; “நகை-பணத்தை ஏமாற்றி வாங்கிக்கொண்டு வேறொரு திருமணம் செய்து கொண்ட வாலிபர்” அதிர்ச்சி தகவல்!
கர்நாடக மாநிலம் மைசூருவை சேர்ந்தவர் 28 வயது இளம்பெண். பட்டதாரியான இவர் தனது திருமணத்திற்கான வரன் தேடினார். அதற்காக ஆன்லைன் திருமண தகவல் இணையதளத்தில் தன்னைப்பற்றிய தகவல்களை பதிவு செய்தார். இந்த நிலையில் அதன்மூலம் கேரளாவை சேர்ந்த அக்ஷய் என்ற வாலிபர், அந்த இளம்பெண்ணுக்கு பழக்கமானார். பின்னர் இருவரும் தங்களது செல்போன் எண்களை பரிமாறி பேசி வந்தனர். அப்போது இளம்பெண், அக்ஷய் காதலிப்பதாக கூறினார். அக்ஷயின் காதலை அந்த இளம்பெண்ணும் ஏற்றுக் கொண்டார். அதையடுத்து அந்த இளம்பெண்ணிடம் திருமண ஆசை காட்டி அவரிடம் அக்ஷய் உல்லாசம் அனுபவித்தார். மேலும் தான் தொழில் தொடங்க இருப்பதாக கூறி அவரிடம் இருந்து நகைகள் மற்றும் பணத்தை அக்ஷய் பெற்றுக் கொண்டார். இது அவர்களிடையே தொடர்ந்து நடந்தது.
இந்த நிலையில் அக்ஷய் அந்த இளம்பெண்ணை திருமணம் செய்ய மறுத்தார். இதனால் அதிர்ச்சி அடைந்த இளம்பெண், அக்ஷய் மீது கேரளா போலீசாரிடம் புகார் செய்தார். ஆனால் அவர் மீது கேரளா போலீசார் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இந்த நிலையில் நேற்று தட்சிண கன்னடா மாவட்டம் உல்லால் பகுதியில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் அக்ஷய்க்கும், வேறொரு பெண்ணுக்கும் திருமணம் நடக்க இருந்தது. இதுபற்றி அறிந்த அந்த அந்த இளம்பெண், நேராக அந்த திருமண மண்டபத்துக்கு போலீசார் மற்றும் தனது வக்கீலுடன் சென்று தகராறில் ஈடுபட்டார். இருப்பினும் அக்ஷய், அந்த பெண்ணை திருமணம் செய்து கொண்டு கேரளாவுக்கு புறப்பட்டு சென்றுவிட்டார். அதிர்ச்சி அடைந்த அக்ஷயின் காதலி கதறி அழுதார். தான் கொடுத்த புகாரின்பேரில் போலீசார் சரியாக நடவடிக்கை எடுக்கவில்லை என்று ஆதங்கத்துடன் கூறினார். மேலும் அக்ஷயை உடனடியாக போலீசார் கைது செய்ய வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டார். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.