அண்ணாமலைக்கு கே.எஸ்.அழகிரி சவால்…!
தமிழக பா.ஜனதா தலைவர் அண்ணாமலை உண்மைக்கு புறம்பான கருத்துகளை கூறி வருகிறார். தமிழகத்தின் நிதிநிலை அதல பாதாளத்திற்கு சென்று விட்டது, கடன் தொகை அடுத்த 2 ஆண்டுகளில் ரூ.10 லட்சம் கோடியாக உயர்ந்து விடும் என்று பேசி உள்ளார். இதை கூறுவதற்கு முன்பு, மத்திய பா.ஜனதா அரசின் கடன் நிலை குறித்து அவர் அறிய வேண்டும். மத்திய பா.ஜனதா அரசின் மொத்த கடன், கடந்த ஆண்டு மார்ச் மாதம் 31ந்தேதி நிலவரப்படி ரூ.153 லட்சம் கோடி. இது வருகிற மார்ச் மாதம் 31ந்தேதி நிலவரப்படி, ரூ.169 லட்சம் கோடியாக உயர்ந்துவிடும் என்று செய்தி வெளிவந்துள்ளது. ஒரே ஆண்டில் ரூ.16 லட்சம் கோடி கடன் உயர்ந்துவிடும். நாடு சுதந்திரம் பெற்ற பிறகு 67 ஆண்டுகளில் 55 ஆண்டுகள் காங்கிரஸ் ஆட்சி செய்தபோது, மொத்த கடன் ரூ.55 லட்சம் கோடிதான். ஆனால், 2023ம் ஆண்டு நிலவரப்படி ரூ.153 லட்சம் கோடியாக மத்திய பா.ஜனதா அரசு கடன் சுமையை ஏற்றி உள்ளது. தமிழகத்தின் கடன் குறித்து பேசும் அண்ணாமலை, மத்திய பா.ஜனதா அரசின் 9 ஆண்டுகால கடன் சுமை ரூ.100 லட்சம் கோடி அதிகரித்திருப்பது குறித்து என்ன பதில் கூற போகிறார்?. இதற்கான விளக்கத்தை அவர் தருவாரா? இதுபற்றி அண்ணாமலை மக்கள் மன்றத்தில் பதில் கூற வேண்டும் என தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளார்.