கொங்கு வேளாள கவுண்டர்கள் சமூகத்துக்கு ”10 சதவீத இடஒதுக்கீடு” வழங்க வலியுறுத்தல்!
கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி மற்றும் கொங்குவேளாள கவுண்டர்கள் பேரவை சார்பில் கொங்கு மண்டல எழுச்சி மாநாடு ஈரோடு மாவட்டம் பெருந்துறை அருகே விஜயமங்கலத்தில் நடைபெற்றது. இந்த மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:-மகளிர் உரிமைத்தொகை, மகளிருக்கு கட்டணமில்லா பஸ் பயணம், புதுமைப்பெண், மாணவர்களுக்கு காலை சிற்றுண்டி ஆகிய திட்டங்கள் நிறைவேற்றியதற்கும், விசைத்தறி தொழிலுக்கு 750 யூனிட்டில் இருந்து 1,000 யூனிட்டாக இலவச மின்சாரத்தை உயர்த்தி வழங்கியதற்கும் தமிழக அரசுக்கு நன்றியை தெரிவித்து கொள்வது.தொழிற்சாலைக்காக நிலத்தை அரசு கையகப்படுத்தும்போது நில உரிமையாளர்கள் மற்றும் சுற்றுவட்டார பகுதி பொதுமக்களிடம் கருத்து பெற்றபிறகு நிலத்தை கையகப்படுத்த வேண்டும்.தடை நீக்கம். விவசாயிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்காக மரவள்ளி கிழங்கில் இருந்து எத்தனால் எடுத்து பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும்.தென்னை விவசாயிகளின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க ரேஷன் கடைகளில் பாமாயிலுக்கு பதிலாக தேங்காய் எண்ணெய் வழங்க மத்திய, மாநில அரசுகளை கேட்டுக்கொள்கிறோம்.தென்னை, பனை மரங்களில் இருந்து கள் இறக்குவதற்கான தடையை அரசு நீக்க வேண்டும். டாஸ்மாக் கடைகளில் காலி மது பாட்டில்களை ரூ.10-க்கு திருப்பி வாங்கும் திட்டத்தை தமிழ்நாடு முழுவதும் அமல்படுத்த வேண்டும். விசைத்தறியாளர்களுக்கு ஆண்டு முழுவதும் வேலை வாய்ப்பு கிடைக்கும் வகையில் அரசு ஊழியர்கள் உள்ளிட்டோர் பயன்படுத்தும் சீருடைகளை தயாரிக்கும் பணிகளை கொடுக்க வேண்டும். தமிழகத்தில் உள்ள அனைத்து அணைகளையும் தூர்வார வேண்டும். பால் கொள்முதல் விலையை ஆண்டுதோறும் ரூ.5 உயர்த்த வேண்டும். வன்கொடுமை தடுப்புச் சட்டத்தில் பொய் வழக்கு போடுவதை களைய வேண்டும். தமிழகத்தில் நீண்ட காலமாக இருக்கும் சட்டமன்ற தனி தொகுதிகளை பொது தொகுதிகளாக மாற்ற அரசு முன்வர வேண்டும். ஈரோடு மாவட்டம் கொடுமணல் கிராமத்தில் அகழ்வாராய்ச்சி பணிகளை துரிதப்படுத்த வேண்டும். மேலும் திருப்பூர் மாவட்டம் குமரிக்கல்பாளையம் கிராமத்திலும் சாத்தியக்கூறுகள் உள்ளதால் அகழ்வாராய்ச்சி செய்ய வேண்டும். பாண்டியாறு – புன்னம்புழா, ஆனைமலை – நல்லாறு, திருமணி – முத்தாறு, சென்னக்கல் – வாணியாறு ஆகிய திட்டங்களை நிறைவேற்ற வேண்டும். பொள்ளாச்சி, கோபிசெட்டிபாளையம், ஆத்தூர், திருச்செங்கோடு ஆகிய ஊர்களை தலைமையிடமாக கொண்டு புதிய மாவட்டங்கள் பிரிக்கப்பட வேண்டும். தர்மபுரி, கிருஷ்ணகிரியை தொழில் வளர்ச்சி பின்தங்கிய மாவட்டங்களாக அறிவித்து புதிய தொழிற்சாலைகளை அமைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். கரூர் மாவட்டம் அரவக்குறிச்சியில் முருங்கைக்காயில் இருந்து மதிப்புக்கூட்டு பொருட்கள் தயாரிக்கும் தொழிற்சாலைகள் அமைக்கப்பட வேண்டும். தமிழகத்தில் மழைநீரை தேக்கி வைக்க காவிரி ஆற்றின் குறுக்கே தடுப்பணைகள் கட்டப்பட வேண்டும். மேட்டூர் உபரிநீரை நாமக்கல் மாவட்டத்தில் உள்ள ஏரிகளில் நிரப்பும் திட்டம் நிறைவேற்ற வேண்டும். தொழில் வளர்ச்சிக்காக கரூர், நாமக்கல் மாவட்டங்களுக்கு இடையே புதிய சர்வதேச விமான நிலையம் அமைக்க வேண்டும். ஈரோடு, திருப்பூர், கரூர் ஆகிய மாவட்டங்களில் பொது சுத்திகரிப்பு நிலையங்களை அரசு அமைக்க வேண்டும். பெருந்துறையில் எய்ம்ஸ் மருத்துவனை அமைக்க வேண்டும். ஜவுளி தொழிலை மீட்டெடுக்க ஒரு நிபுணர் குழுவை அரசு அமைக்க வேண்டும். கோவையில் மெட்ரோ ரெயில் திட்டத்தை நிறைவேற்றி அவினாசி, மேட்டுப்பாளையம், பொள்ளாச்சி, திருப்பூர், பல்லடம் ஆகிய பகுதிகளை இணைக்க வேண்டும். கொங்கு வேளாள கவுண்டர்கள் சமூகத்துக்கு 10 சதவீத இடஒதுக்கீடு வழங்க வேண்டும். மேற்கண்டவை உள்பட மொத்தம் 27 கோரிக்கைகளை வலியுறுத்தி தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.