வாச்சாத்திக் குற்றவாளிகளைப் பாதுகாத்தவர் செயலலிதா! உயர் நீதிமன்றம் அம்பலப்படுத்தியுள்ளது, “தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் பெ. மணியரசன் அறிக்கை”
வாச்சாத்திக் குற்றவாளிகளைப் பாதுகாத்தவர் செயலலிதா!
உயர் நீதிமன்றம் அம்பலப்படுத்தியுள்ளது,
“தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர்
பெ. மணியரசன் அறிக்கை”.
வாச்சாத்தி வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட அனைவரையும், அதில் இப்போது உயிரோடுள்ள 215 அரசு ஊழியர்களையும் சென்னை உயர் நீதிமன்றம் தண்டித்திருக்கிறது.
இந்தத் தண்டனையை சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி பி. வேல்முருகன் அவர்கள் கொடுக்கவில்லை. தருமபுரி மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி எஸ். குமரகுரு அவர்கள் 2011 செப்டம்பர் 29-ஆம் நாள் வனத்துறை, காவல்துறை, வருவாய்த்துறை அதிகாரிகள் – அலுவலர்கள் 215 பேர்க்குக் குற்றவாளிகள் என்று தண்டனை கொடுத்தார். இப்போது சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி பி. வேல்முருகன் முழுமையாக விசாரித்து, எதிர்த்தரப்பு வழக்கறிஞர்களை முழுமையாக வாதிட அனுமதித்து, வாச்சாத்தி கிராமத்திற்கு உரிய அதிகாரிகளை அழைத்துக் கொண்டு சென்று நேரில் கள ஆய்வு செய்து. மாவட்ட முதன்மை நீதிபதி கொடுத்த தீர்ப்பை உறுதி செய்துள்ளார். அவர் புதிதாகத் தண்டனை கொடுக்கவில்லை.
தருமபுரி மாவட்டம் அரூர் – பாப்பிரெட்டிப்பட்டி இடையே கல்வராயன் மலைத் தொடரின் அடிவாரப் பகுதியில் உள்ள கிராமம் வாச்சாத்தி. அம்மலைத் தொடரில் நிறைய சந்தன மரங்கள் உண்டு. அச்சந்தன மரங்களை வாச்சாத்தி மக்கள் திருட்டுத்தனமாக வெட்டித் தங்கள் வீடுகளில் வைத்துப் பின்னர் விற்று வருகிறார்கள் என்ற குற்றச்சாட்டு அதிகாரிகளால் கூறப்பட்டது. சந்தனக் கடத்தல் வீரப்பனுக்காக இவ்வாறு திருடுகிறார்கள் என்று அரசுத் தரப்பில் சொல்லப்பட்டது.
20.6.1992 அன்று வனத்துறையினர் 155 பேர், காவல்துறையினர் 108 பேர், வருவாய்த் துறையினர் 6 பேர் என மொத்தம் 269 பேர் வாச்சாத்தி கிராமத்தை முற்றுகையிட்டு, சோதனை என்ற பெயரில் வேட்டை யாடினர். 90 பெண்கள் உட்பட 133 பேரைக் கைது செய்தனர். அம்மக்கள் மீது கொடூரத் தாக்குதல் நடத்தினர். மலைவாழ் பழங்குடிப் பெண்கள் 18 பேரை பாலியல் வன்முறை செய்தனர். அவர்களின் வீடுகள் சூறையாடப் பட்டன. அரசுத் துறைகள் சார்ந்த இந்த வன்முறையாளர்களை வாச்சாத்திக்கு ஏவிவிட்டவர் அப்போதைய தமிழ்நாடு முதலமைச்சர் செயலலிதா! வாச்சாத்திப் பழங்குடி மக்கள் மீது செயலலிதா கட்டவிழ்த்துவிட்ட வேட்டையை மக்கள், கட்சிகடந்து கண்டனம் செய்தனர்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்டுக் கட்சியும் அக்கட்சியின் மலைவாழ் மக்கள் சங்கத்தின் அப்போதைய மாநிலச் செயலாளராக இருந்த தோழர் பெ. சண்முகம் அவர்களும் பாதிக்கப்பட்ட பழங்குடி மக்களுக்கு ஆதரவாகவும் அரசுத்துறை வன்முறையாளர்கள் மற்றும் வன்புணர்ச்சி யாளர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் தொடர் போராட்டங்கள்நடத்தினர்.
முதல்வர் செயலலிதா வருவாய்க் கோட்டாட்சியர் தலைமையில் விசாரணைக் குழு அமைத்தார். அது அம்மையாரின் விருப்பப்படி, வாச்சாத்தியில் வழக்கமாக சந்தனக் கடத்தல் செய்வோர் மீது நடவடிக்கை எடுக்கச் சென்ற அதிகாரிகள் மீது அவர்கள் வீண் பழி சுமத்துகிறார்கள் என்று 10.8.1992 அன்று அறிக்கை கொடுத்தது.
பாதிக்கப்பட்ட மக்கள் சார்பில் மாவட்ட முதன்மை அமர்வு நீதின்றத்தில் வழக்குப் போடப்பட்டது. சென்னை வழக்கறிஞர்கள் வைகை, என்.ஜி.ஆர். பிரசாத் உள்ளிட்டோரைக் கொண்ட 5 வழக்கறிஞர் குழு இவ்வழக்கை நடத்தியது.
பதின்மூன்று அகவைச் சிறுமி, 8 மாத கர்ப்பினி உட்பட பதினெட்டு இளம் பெண்களை அரசுத் துறையினர் இழுத்துச் சென்று ஏரிக்கரைக் காட்டுப்பக்கம் வன்புணர்ச்சி செய்தது மெய்ப்பிக்கப்பட்டது. மற்ற குற்றங்களும் மெய்ப்பிக்கப்பட்டன. தருமபுரி மாவட்ட முதன்மை அமர்வு நீதிபதி 12 பேருக்கு 10 ஆண்டு சிறை, 5 பேர்க்கு 7 ஆண்டு சிறை, மற்றவர்களுக்கு ஒன்று முதல் மூன்றாண்டுகள் சிறைத் தண்டனைகள் வழங்கினார்.
இந்த வழக்கை சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தனர். வழக்கை இந்திய அரசின் காவல் துறையான சிபிஐ நடத்தியது. பாதிக்கப்பட்டவர்களுக்காக உயர் நீதிமன்றத்தில் இந்திய அரசு வழக்கறிஞர் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் ஆர்.எல். சுந்தரேசன் வாதிட்டார். சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி பி. வேல்முருகன் அவர்கள், பொறுப்புடனும் அக்கறையுடனும் விசாரித்தும், கள ஆய்வு செய்தும் 29.9.2023 அன்று அளித்த தீர்ப்பில், மாவட்ட நீதிமன்றம் அளித்த தண்டனைகளை உறுதிப்படுத்தினார். பாலியல் வன்முறையில் பாதிக்கப்பட்ட பெண்களுக்குத் தலா பத்துலட்சரூபாய் நிதிஉதவி செய்ய வேண்டும். அதில் 5 இலட்ச ரூபாயை அரசும், மீதி 5 இலட்ச ரூபாயைக் குற்றவாளிகளும் வழங்க வேண்டும் என்றார்.
“இந்த வழக்கில் தொடக்கத்திலிருந்தே குற்றச் செயலில் ஈடுபட்ட அதிகாரிகளையும் அரசு ஊழியர்களையும் பாதுகாக்க வேண்டும் என்ற நோக்த்துடன்தான் தமிழ்நாடு அரசு செயல்பட்டுள்ளது” என்று தீர்ப்பில் கூறியுள்ளார் நீதிபதி! அதனால்தான் 1992-இல் நடந்த குற்றச் செயல்களுக்கு 2023 செப்டம்பரில் தீர்ப்பு வரும் அவலம் ஏற்பட்டுள்ளது.
வாச்சாத்தி வன்கொடுமைக் குற்றவாளிகளை தண்டனையிலிருந்து தப்பிக்க வைப்பதற்கு அரசு அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்தியவர் அன்றைய முதல்வர் செயலலிதா என்பதை உயர் நீதிமன்றம் அம்பலப்படுத்தியுள்ளது.
இனி இதுபோல் ஆட்சியாளர்களால் – ஆதிக்க ஆற்றல்களால் நீண்ட கால தாமதம் ஏற்படாமல் தவிர்க்க, பழங்குடி மக்களுக்கும், பெண்களுக்கும் நீதி கிடைக்க இவர்களுக்கென்று தனித்தனியே மாவட்டத்திற்கு இரண்டு நீதிமன்றங்களை உருவாக்க வேண்டும்.
சிபிஎம் கட்சியும், மனித உரிமை ஆர்வலர்களும் உறுதியுடன் தொடர்ந்து முயலாவிட்டால் மேற்படி குற்றவாளிகள் எப்போதோ தப்பி அப்பாவிகள் ஆகியிருப்பர், நீதிபதி பி. வேல் முருகன் பாராட்டுக்குரியவர்.