பஞ்சாப் ராணுவ முகாமில் இன்று அதிகாலை நடந்த துப்பாக்கி சூட்டில் 4 ராணுவ வீரர்கள் பலியாகினர்.
வீரர்களுக்குள் ஏற்பட்ட பரஸ்பர மோதலா அல்லது காலிஸ்தான் பின்னணியா? என்பது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது. பஞ்சாப் மாநிலம் பதிண்டாவில் தென்மேற்கு கமாண்டின் ராணுவ ராணுவ முகாம் செயல்பட்டு வருகிறது. பாதுகாப்பு முக்கியத்துவம் வாய்ந்த இப்பகுதியில், இன்று அதிகாலை 4.35 மணியளவில் ராணுவ முகாம் விடுதிக்குள் நடந்த துப்பாக்கிச் சூட்டில் 4 பேர் பலியானதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அதனால் ராணுவ முகாமை சுற்றியுள்ள பகுதிகளில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. அப்பகுதியை சுற்றியும் சீல் வைக்கப்பட்டுள்ளது.ராணுவ முகாமின் அனைத்து நுழைவு வாயில்களும் மூடப்பட்டுள்ளன.
இதுகுறித்து ராணுவத்தின் தென்மேற்கு கமாண்டின் ராணுவ வட்டாரங்கள் கூறுகையில், நேற்று‘ அதிகாலை 4.35 மணியளவில் பதிண்டா ராணுவ முகாமிற்குள் நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் நான்கு பேர் பலியாகினர். விரைவுப் படை களத்தில் இறங்கியுள்ளது. குறிப்பிட்ட பகுதியை சுற்றிலும் சீல் வைக்கப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு வருகிறது’ என்று தெரிவித்தன. ராணுவ முகாமிற்குள் துப்பாக்கிச் சூடு நடந்ததாக கூறப்படுவதால், முகாமிற்குள் இருந்த உள்நபரால் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதா? அல்லது வெளிநபரால் சுடப்பட்டதா? என்பது குறித்து அதிகாரபூர்வ தகவல்கள் உடனடியாக வெளியிடப்படவில்லை.
இதுகுறித்து பதிண்டா போலீஸ் எஸ்எஸ்பி பர்மர் கூறுகையில், ‘பயங்கரவாத தாக்குதல் ஏதும் நடைபெறவில்லை. இருந்தாலும் இந்த விவகாரம் ராணுவத்தின் அதிகார வரம்பிற்கு உட்பட்டது என்பதால், உடனடியாக எதையும் தெரிவிக்க முடியாது’ என்றார். துப்பாக்கி சூட்டில் பலியானவர்கள் ராணுவ வீரர்களா அல்லது பொதுமக்களா என்பது குறித்தும் அறிவிக்கப்படவில்லை. மேலும் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதற்கான காரணம் மற்றும் இந்த சம்பவத்தை யார் நடத்தியது என்பது குறித்தும் தெரிவிக்கவில்லை. இருந்தும் வீரர்களுக்குள் பரஸ்பர தாக்குதலா? அல்லது காலிஸ்தான் பின்னணியா என்பது குறித்து தீவிர விசாரணை நடந்து வருகிறது.
இதுகுறித்து ராணுவ வட்டாரங்கள் கூறுகையில், ‘ராணுவ முகாமின் மெஸ்ஸில் துப்பாக்கிச் சூடு நடந்தது. கடந்த 2 நாட்களுக்கு முன்பு ஒரு துப்பாக்கியும் 28 தோட்டாக்களும் காணாமல் போயின. அதன் பின்னணியில் இந்த துப்பாக்கிச் சூடு நடந்திருக்கலாம். சுட்டுக் கொல்லப்பட்ட 4 பேரும் ராணுவ படைப்பிரிவை சேர்ந்தவர்கள் ஆவர். அவர்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்திய நபர் சாதாரண உடையில் இருந்ததாக கூறப்படுகிறது. 4 பேரின் உடல்கள் கைப்பற்றப்பட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. தொடர் விசாரணை நடைபெற்று வருகிறது’ என்றன.