“அபிஷேக் – ஹெட் ருத்ர தாண்டவம் லக்னோவை ஊதித்தள்ளிய சன்ரைசர்ஸ்: 9.4 ஓவரில் இலக்கை எட்டியது”; 3வது இடத்துக்கு முன்னேற்றம்
ஐதராபாத்: லக்னோ சூப்பர் ஜயன்ட்ஸ் அணியுடனான ஐபிஎல் லீக் ஆட்டத்தில், அபிஷேக் ஷர்மா – டிராவிஸ் ஹெட் ஜோடியின் அதிரடி ஆட்டத்தால் 10 விக்கெட் வித்தியாசத்தில் அபாரமாக வென்ற சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி புள்ளிப் பட்டியலில் 3வது இடத்துக்கு முன்னேறியது. ராஜிவ் காந்தி சர்வதேச ஸ்டேடியத்தில் நேற்று இரவு நடந்த இப்போட்டியில், டாஸ் வென்ற லக்னோ கேப்டன் கே.எல்.ராகுல் முதலில் பேட் செய்ய முடிவு செய்தார். ராகுல் – டி காக் இணைந்து லக்னோ இன்னிங்சை தொடங்கினர். சன்ரைசர்ஸ் அணியில் இலங்கை இளம் சுழல் விஜயகாந்த் வியாஸ்காந்த் (22 வயது) அறிமுகமானார். புவனேஷ்வர் குமாரின் துல்லியமான வேகத்தில் டி காக் (2 ரன்), மார்கஸ் ஸ்டாய்னிஸ் (3 ரன்) இருவரும் நிதிஷ் குமார் மற்றும் சன்விர் சிங்கின் அற்புதமான கேட்ச்சில் விக்கெட்டை பறிகொடுக்க, லக்னோ 21 ரன்னுக்கு 2 விக்கெட் இழந்து திணறியது. ராகுல் – க்ருணால் ஜோடி சேர்ந்து 3வது விக்கெட்டுக்கு 36 ரன் சேர்த்தனர். ராகுல் 29 ரன், க்ருணால் 24 ரன்னில் விக்கெட்டை பறிகொடுக்க, லக்னோ 11.2 ஓவரில் 66 ரன்னுக்கு 4 விக்கெட் இழந்து பரிதவித்தது.
இந்த நிலையில், நிகோலஸ் பூரன் – ஆயுஷ் பதோனி இணைந்து அதிரடியாக விளையாடி லக்னோ ஸ்கோரை உயர்த்தினர். பதோனி 28 பந்தில் அரை சதம் விளாசி அசத்தினார். சூப்பர் ஜயன்ட்ஸ் 20 ஓவரில் 4 விக்கெட் இழப்புக்கு 165 ரன் குவித்தது. பூரன் 48 ரன் (26 பந்து, 6 பவுண்டரி, 1 சிக்சர்), பதோனி 55 ரன்னுடன் (30 பந்து, 9 பவுண்டரி) ஆட்டமிழக்காமல் இருந்தனர். சன்ரைசர்ஸ் பந்துவீச்சில் புவனேஷ்வர் 4 ஓவரில் 12 ரன் மட்டுமே விட்டுக்கொடுத்து 2 விக்கெட் கைப்பற்றினார். கம்மின்ஸ் 1 விக்கெட் எடுத்தார். இதைத் தொடர்ந்து, 20 ஓவரில் 166 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் சன்ரைசர்ஸ் ஐதராபாத் களமிறங்கியது. அபிஷேக் ஷர்மா, டிராவிஸ் ஹெட் இணைந்து துரத்தலை தொடங்கினர். எடுத்த எடுப்பிலேயே டாப் கியரில் எகிறிய இருவரும் பவுண்டரியும் சிக்சருமாகப் பறக்கவிட்டு வானவேடிக்கை நடத்த சன்ரைசர்ஸ் ஸ்கோர் இறக்கை கட்டிப் பறந்தது. சன்ரைசர்ஸ் 4வது ஓவரிலேயே 64 ரன் சேர்க்க, தேவைப்படும் ரன் விகிதம் வெகுவாகக் குறைந்தது. இவர்களின் அதிரடியை கட்டுப்படுத்த முடியாமல் லக்னோ பவுலர்கள் விழி பிதுங்கினர். நவீன் உல் ஹக் வீசிய 5வது ஓவரை ஹெட் 4, 4, 6, 4, 4 என பிரித்து மேய்ந்தார். தொடர்ந்து சிறப்பாக விளையாடிய சன்ரைசர்ஸ் 9.4 ஓவரில் விக்கெட் இழப்பு ஏதுமின்றி 167 ரன் எடுத்து வெற்றியை ருசித்தது. டிராவிஸ் ஹெட் 89 ரன் (30 பந்து, 8 பவுண்டரி, 8 சிக்சர்), அபிஷேக் ஷர்மா 75 ரன் (28 பந்து, 8 பவுண்டரி, 6 சிக்சர்) என ருத்ர தாண்டவம் ஆடி வெற்றி இலக்கை எட்டினர். இதனால், சன்ரைசர்ஸ் 12 போட்டியில் 7வது வெற்றியை பதிவு செய்து 14 புள்ளிகளுடன் 3வது இடத்துக்கு முன்னேறியது.
* 10 ஓவரில் அதிகம்..
டி20 வரலாற்றில் 10 ஓவரில் அதிகபட்ச ரன்களை எடுத்து வெற்றியை ருசித்து சன்ரைசர்ஸ் ஐதராபாத் சாதனை படைத்து உள்ளது.