ஹோ சி மின் சிறை டைரி-சுரா

                                                                                            சுராவின் முன்னுரை


மக்களிடம் பரவலான வரவேற்பைப் பெற்ற ‘Ho Chi Minh’s Prison Diary’ என்ற நூலை ‘ஹோ சி மின் சிறை டைரி’ என்ற பெயரில் நான் தமிழில் மொழி பெயர்த்திருக்கிறேன்.

உலகில் பிறக்கும் மனிதர்கள் எல்லோருமே முத்திரை பதிக்கும் மனிதர்கள் இல்லை. விரல் விட்டு எண்ணக் கூடிய சிலர் மட்டுமே உலக சரித்திரத்தில் இடம் பெறும் வாய்ப்பினைப் பெற்றிருக்கிறார்கள். அவர்களில் ஒருவர் ஹோ சி மின்.

உலக வரலாற்றுத் தலைவர்களைப் பற்றி ஒர் பட்டியல் போட்டால், அதில் ஒரு சிறப்பான இடத்தை ஹோ சி மின்னுக்கு தந்தே ஆக வேண்டும்.

தன்னைப் பற்றிய சிந்தனை சிறிதும் இன்றி வியட்நாம் நாட்டையும், அந்நாட்டு மக்களையும், கம்யூனிஸ்ட் கட்சியையும், மக்களின் ஒளிமயமான வாழ்க்கையையும், உலகமெங்கும் இருக்கும் தொழிலாளர்களின் செழிப்பான வாழ்க்கையையும், உலகம் முழுவதும் அன்னிய ஆக்கிரமிப்பிற்கு எதிராக திரண்டெழுந்து போர் புரிந்து மகிழ்ச்சியான வாழ்க்கையை மக்கள் வாழ வேண்டும் என்பதையும் தன்னுடைய இறுதி மூச்சு வரை மனதில் வைத்திருந்து வாழ்ந்து இந்த உலக வாழ்க்கையிலிருந்து விடை பெற்றுச் சென்ற மாமனிதர்தான் ஹோ சி மின்.

அவரைப் போன்ற தலைவர்கள் எப்போதாவது ஒரு முறைதான் இந்த உலகில் பிறப்பார்கள். மக்களின் நல் வாழ்விற்காக தன் முழு வாழ்வையும் அர்ப்பணித்த அந்த மாபெரும் மக்கள தலைவரின் சிறை சிந்தனைகள் கொண்ட இந்நூலை மொழிபெயர்க்க வாய்ப்பு கிடைத்ததற்காக, உண்மையிலேயே பெருமைப்படுகிறேன். இந்த நல்வாய்ப்பை எனக்கு அளித்த என் அருமை நண்பர் திரு. இளைய பாரதிக்கு இதயத்தின் அடித்தளத்திலிருந்து நன்றி.

ஹோ சி மின்னின் சிறை டைரியைத் தவிர, அவருடைய மரண அறிக்கையும், அவர் வாழ்க்கையில் நடைபெற்ற குறிப்பிடத்தக்க சம்பவங்கள் பற்றிய ஒரு தகவல் பெட்டகமும் கூட இந்நூலில் மொழி பெயர்க்கப்பட்டிருக்கின்றன. இந்நூலைப் படித்து முடிக்கும்போது, ஹோ சி மின் நம் மனதிற்குள் சிம்மாசனம் போட்டு கம்பீரமாக உட்காருவார் என்பது மட்டும் நிச்சயம். அந்த வகையில் அது சந்தோஷப்படக் கூடிய ஒரு விஷயம்தான்!

இந்த நல்ல நூலை இணைய தளத்தில் வெளியிடும் tamilnewsmedia.com நிறுவனத்திற்கு என் இதயத்தின் அடித்தளத்திலிருந்து நன்றி.

அன்புடன்,

சுரா(Sura)

 


டயரியின் முதல் பக்கம்

கவிதை எழுதுவது என் பழக்கங்களில் ஒன்றில்லை.

ஆனால், இந்த சிறைக்குள் நான் வேறு என்ன செய்வது?

இந்த சிறையிலிருக்கும் நாட்களை நான்

கவிதைகள் எழுதி கழிப்பேன்.

அவற்றைப் பாடிப் பாடி விடுதலைக்கான நாள்

நெருங்கி நெருங்கி வரும்.

*****

செல்வ தெருவில் கைது

செல்வத்தின், புகழின் தெருவில்

என் பயணம் தாமதமாகும் வண்ணம்

அவர்கள் என்மீது அவமரியாதை கூறினார்கள்.

தெளிந்த மனசாட்சி உள்ள நம்பக்கூடிய மனிதன் நான்.

எனினும், காரணம் எதுவுமே இல்லாமல்

அவர்கள் என்னை ஒற்றன் என குற்றம் சாட்டினார்கள்.

*****

த்ஸிங்ஸி மாவட்ட சிறையில்

இருண்ட அறையில் ஏற்கெனவே இருப்பவர்கள்

புதிய விருந்தாளிகளை வரவேற்கிறார்கள்.

வானத்தில் வெள்ளிமேகங்கள்

கார்முகில்களை துரத்தியடிக்கின்றன.

இரண்டும் அதோ பார்வைக்கப்பால் போய் மறைந்துவிட்டன.

பூமியில் சுதந்திரமாக திரியும் மக்களை சிறையறைகளுக்குள்

தள்ளி விடுகிறார்கள்.

*****

வாழ்க்கையின் பாதை கடுமையானது

1

செங்குத்தான மலைகளுக்கு மேலே

உயர்ந்த மலைச்சிகரங்களின் உச்சியில் ஏறி விட்ட நான்

சமவெளிகளில் பெரிய ஆபத்துகளை

எப்படி எதிர்பார்ப்பேன்?

மலைகளில் நான் புலிகளுடன் சண்டை போட்டு

காயமின்றி வெளியே வந்தேன்.

சமவெளிகளில் நான் மனிதர்களிடம் மோதி

சிறையறைக்குள் எறியப் பட்டேன்.

2

ஒரு முக்கிய மனிதரைப் பார்க்க சீனாவிற்குப் போனபோது

நான் வியட்நாமின் ஆளாக இருந்தேன்.

அமைதியாக இருந்த பாதையில் திடீரென்று கடுமையான காற்று வீசியது.

ஒரு மதிப்பு மிக்க விருந்தாளியாக

என்னை சிறைக்குள் தள்ளி விட்டார்கள்.

3

குற்ற உணர்வு இல்லாத, ஒழுக்கமும் நேர்மையும் உள்ள மனிதன் நான்.

எனினும் என்னை ஒரு சீன ஒற்றன் என்று பழி சுமத்திவிட்டார்கள்.

அதனால், வாழ்க்கை சுகமான ஒன்றல்ல.

இப்போது நிகழ்காலம் எழுந்து நிற்கும் முட்களுடன்

சிரமங்களைச் சந்திக்கிறது.

*****

அதிகாலை

1

எல்லா அதிகாலைகளிலும்

சூரியன் சுவருக்கு மேலே உயர்ந்து வந்து

மூடிய வாசற் கதவுக்கு நேராக

வெளிச்சத்தைப் பாய்ச்சுகிறது.

ஆனால், வாசற் கதவு மூடியேதான் இருக்கிறது.

சிறை அறைகள் இருளில் மூடிக் கிடக்கின்றன.

எனினும், வெளியே உதயசூரியன் பிரகாசித்து நிற்பது

எங்களுக்கு நன்றாகவே தெரிகிறது.

2

கண் விழித்த பின் எல்லோரும் பேன் வேட்டையில் இறங்கி விடுகிறார்கள்.

எட்டு மணிக்கு காலை உணவுக்காக மணி அடிக்கிறார்கள்.

வாருங்கள், போகலாம்… எதுவும் பேசாமல் காலை உணவில் உட்காருவோம்.

நம்முடைய பொறுமைகள் வீணாகாது.

நல்ல காலம் நிச்சயமாக வரும்.

*****

மதியம்

சிறையறைக்குள் மதிய தூக்கம் எத்தனை சுகமானது!

மணிக் கணக்கில் அமைதியான தூக்கம்

எங்களை எங்கோ கொண்டு செல்கிறது.

ட்ராகனின் முதுகில் ஏறி சொர்க்கத்திற்கு

சவாரி செய்வது போல்

நான் கனவு காண்கிறேன்…

கண் விழிக்கும்போது, பயணத்தை முடிக்காமலே

நான் திரும்பவும்

சிறைக்குள் எறியப் படுகிறேன்.

*****

பிற்பகல்

மணி இரண்டு.

நல்ல காற்று வருவதற்காக சிறையறையின்

கதவு திறக்கப்படுகிறது.

வானத்தை ஒரு தடவை பார்ப்பதற்காக

எல்லோரும் தலைகளை உயர்த்துகிறார்கள்.

விடுதலையின் வானத்தைப் பார்ப்பதற்காக ஏங்கும்

சுதந்திர ஆத்மாக்களே,

உங்களுக்குத் தெரியுமா,

உங்களின் சொந்த இனம் சிறையறைக்குக்குள் தளர்ந்து விழுவது!

*****

மாலை

உணவு முடியும்போது சூரியன் மேற்கில் இருக்கிறது.

அப்போது எல்லா மூலைகளிலிருந்தும்

இசையும் நாடொடிப் பாடல்களும் திடீரென்று கிளம்பி வருகின்றன.

பழைய த்ஸிங்ஸி சிறை ஒரு கலை மையமாக வடிவமெடுக்கிறது.

*****

சிறை உணவு

ஒவ்வொரு உணவும் கறி இல்லாமல் உப்பு இல்லாமல்

ஒரு உருண்டை கோணி அரிசிச் சோறு மட்டும்.

வெளியிலிருந்து உணவு கிடைப்பவர்கள்

சில நேரங்களில் வயிறு நிறைய உண்ணலாம்.

ஆனால், நாங்கள் வெளியிலிருந்து எந்த உதவியும் இல்லாமல்

பட்டினியில் கிடக்கிறோம்.

*****

கைதியின் புல்லாங்குழல்

திடீரென்று ஒரு புல்லாங்குழல் இதயத்தைத் தொடும் ஒரு இசையைப் பிறப்பிக்கிறது.

வேதனையுடன் பாடல் ஒலிக்கிறது.

அதன் ராகம் ஒரு அழுகை.

ஆயிரம் மைல்களுக்கப்பால், மலைகளுக்கும் நதிகளுக்கும் அப்பால்

பயணம் சிரமங்கள் நிறைந்த துயரம்.

யாரோ திரும்பி வருவதை உற்று பார்ப்பதற்காக

ஏதோ தூர கோபுரத்திற்கு

ஒரு பெண் ஏறிச் செல்வதைப் பார்ப்பதைப் போல.

*****

சங்கிலிகள்

1

பிசாசைப் போல பசியில் திறந்த வாயுடன்

ஒவ்வொரு இரவிலும் சங்கிலிகள் மனிதப் பாதங்களை விழுங்குகின்றன.

அவற்றின் தாடை எலும்புகள் சிறைக் கைதியின்

வலது காலில் இறுக பிடிக்கின்றன.

இடது காலுக்கு மட்டுமே மடக்கவும் நிமிரவும் சுதந்திரமிருக்கிறது.

2

எனினும் இந்த பூமியில் அதைவிட வினோதமான ஒன்றுண்டு.

கால்களில் சங்கிலி இடுவதற்காக ஆட்கள் அங்கு ஓடிச் செல்கின்றனர்.

ஒருமுறை தன்னைத் தானே சங்கிலியில் பூட்டிக் கொண்டால்

அவர்கள் நிம்மதியாக உறங்கலாம்.

இல்லாவிட்டால் அவர்களுக்கு தலை சாய்க்க இடம் இருக்காது.

*****

சதுரங்க விளையாட்டு

1

நேரத்தைப் போக்க நாங்கள் சதுரங்கம் விளையாடுகிறோம்

ஆயிரமாயிரம் குதிரைகளும் காலாட்களும்

ஒருவரையொருவர் பின் தொடர்கின்றனர்.

திடீரென்று செயலில் இறங்குகின்றனர்.

தாக்குவதிலும் பின் வாங்குவதிலும்

சாமர்த்தியமும் கால்வேகமும் எங்களுக்கு அதிக பலத்தைத் தருகின்றன.

2

கண்கள் முன்னாலிருக்கும் தூரத்தைப் பார்க்க வேண்டும்.

சிந்தனைகள் ஆழத்தில் யோசித்து உருவாக்கப்பட வேண்டும்.

போர் புரிதலில் தைரியசாலியாக இருக்கவேண்டும்.

இடைவிடாமல் தொடர வேண்டும்.

நினைத்தது தவறிப் போனால் இரண்டு ரதங்கள் வீண்.

சரியான நிமிடம் வந்தால் ஒரே ஒரு பந்தயத்திலும் வெற்றி பெறலாம்.

3

இரு பக்கங்களிலும் அணிகள் சமபலம் கொண்டவை.

எனினும் வெற்றி ஒரு பக்கத்திற்கே கிடைக்கும்.

ஆக்கிரமியுங்கள், பின் செல்லுங்கள்- தவறு உண்டாகாத தந்திரத்துடன்.

அப்போது நீங்கள் மிகப் பெரிய படைத் தலைவன் ஆகலாம்.

*****

நிலவு

கைதிகளுக்கு மது இல்லை, மலர்கள் இல்லை.

எனினும் எப்படி நாங்கள் இரவை இனிமையாக கொண்டாடுவோம்?

நான் கதவு ஓட்டை வழியாக நிலவை உற்று பார்க்கிறேன்.

கதவு ஓட்டை வழியாக நிலவு கவிஞனைப் பார்த்து புன்னகைக்கிறது.

*****

நீருக்கு ரேஷன்

எங்கள் ஒவ்வொருவருக்கும் அரைப்புட்டி நீர் ரேஷன்.

முகம் கழுவலாம். இல்லாவிட்டால் தேநீர் தயாரிக்கலாம் – விருப்பம்போல.

முகம் கழுவ வேண்டுமெனில் தேநீர் வேண்டாமென்று முடிவெடுக்க வேண்டும்.

தேநீர் வேண்டுமெனில், முகம் கழுவாமல் இருக்க வேண்டும்.

திருவிழா

1

முழு நிலவு கண்ணாடியைப் போல் வட்டமாக இருக்கிறது.

அதன் தகதகக்கும் வெளிச்சம் பூமி முழுவதையும் ஒளிர வைக்கிறது.

உறவினர் நண்பர்களுடன் நடு இலையுதிர் காலத்தைக் கொண்டாடுபவர்களே,

துன்பத்தின் கழுநீரைக் குடித்துக் கொண்டிருக்கும்

சிறைக்கைதிகளை ஞாபகத்தில் வைத்துக் கொள்ளுங்கள்.

2

சிறையில் நாங்களும் திருவிழாவைக் கொண்டாடுகிறோம்.

எங்களுக்கு இலையுதிர்கால நிலவும் இளங்காற்றும்

கவலையைச் சுவைக்கின்றவை.

குளிர்நிலவை ரசிக்கக் கூடிய சுதந்திரம்

பறிக்கப்பட்ட என் இதயம்

வானத்திலிருக்கும் பயணப் பெண்ணுக்குப் பின்னால்

அலைந்து திரிகிறது.

*****

மூன்று சீட்டு விளையாட்டு

சிறையறைக்கு வெளியே மூன்று சீட்டு விளையாடுபவர்களுக்கு விலங்கு போடுகிறார்கள்.

ஆனால், சிறைக்குள் வந்து விட்டால் மூன்று சீட்டு விளையாட சுதந்திரம் இருக்கிறது.

அதனால் சிறையில் கைதிகள்

அதற்காக வருத்தப்படுவது இயற்கையே.

ச்சே… முன்பே இங்கு வருவதைப் பற்றி

நான் ஏன் சிந்திக்கவில்லை?

*****

மூன்று சீட்டு விளையாடியதற்கு சிறைத் தண்டனை

மூன்று சீட்டு விளையாடியதற்காக சிறைக்குள் அடைக்கப் பட்டவர்களுக்கு

அரசாங்கம் உணவு தருவதில்லை.

பட்டினி கிடந்தாவது அவர்கள் பழைய பாதைகளின்

தவறை சீக்கிரமாக புரிந்து கொள்வார்கள் அல்லவா?

பணக்காரர்களான கைதிகளுக்கு நித்தமும் விருந்துதான்.

ஏழைகளின் வாயில் பசியால்

எச்சில் ஊறுகிறது. கண்ணீர் அரும்புகிறது.

*****

தெருவில்

வெளியே தெருவில் இருக்கும்போதுதான் நமக்கு

விபத்துகளின் கணக்கு எடுக்க முடிகிறது.

ஒரு மலையை ஏறி முடிக்கும்போது வேறொரு மலை கண்ணில் தெரிகிறது.

எனினும், மலை உச்சிக்கு

ஒருமுறை சிரமப்பட்டு ஏறிவிட்டால்

பத்தாயிரம் ஏக்கர் பூமியை

ஒரே பார்வையில் அளந்தெடுக்கலாம்.

*****

மாலை

பறந்து தளர்ந்து போன பறவைகள் ஓய்வு தேடி

காடுகளை நோக்கி சிறகடிக்கின்றன.

சூனியமான வானத்தில் ஒரே ஒரு மேகம் நகர்ந்து கொண்டிருக்கிறது.

தூரத்தில் மலைச்சரிவிலிருக்கும் கிராமத்தில்

ஒரு பெண் சோளத்தை அரைக்கிறாள்.

சோளம் முழுவதையும் அரைத்து முடிக்கும்போது

அடுப்பில் நெருப்பு சிவப்பாக எரிகிறது.

*****

தேசிய நாளில் தியென் பவ்விற்கு

வீடுகளனைத்தும் மலர்களாலும் விளக்குகளாலும்

அலங்கரிக்கப்பட்டிருக்கின்றன.

தேசிய நாளில் நாடு முழுவதும் மகிழ்ச்சியில் திளைத்திருக்கிறது.

அதே நாளில்தான் என்னை சங்கிலி போட்டு இடம் மாற்றினார்கள்.

பறக்கும் கருடனுக்கு எதிர் காற்றின் குணம்.

*****

லங்ஜ்வெனியில் இரவு

பகல் முழுவதும் என் ‘குதிரைகள்’ இரண்டும்

ஓய்வே இல்லாமல் வேகமாக நடந்தன.

இரவில் எனக்கு நன்கு பொரித்த கோழி பரிமாறினார்கள்.

தொடர்ந்து குளிர், மூட்டைப் பூச்சி ஆகியவற்றின்

ஆக்கிரமிப்பில் என்னை வீசி எறிந்தார்கள்.

அதிகாலையை அறிவிக்கும் புலர்காலைப் பறவையின்

அழுகை எவ்வளவு வரவேற்பிற்குரியது!

*****

தியென் துங்

ஒவ்வொரு நேரமும் உணவிற்கு ஒரு கிண்ணம் கஞ்சி.

பசிக்கும் வயிறு இரவிலும் பகலிலும் சத்தம் போட்டு அழுகிறது.

காடு இலவங்கத்தைப் போலவும்

அரிசி மாணிக்கத்தைப் போலவும்

விற்கப்படும்போது உணவிற்கு மூன்று பலம் சோறு போதுமா?

*****

தியென் பவ்வில்

இன்று நடந்தது ஐம்பத்து மூன்று கிலோமீட்டர்.

அணிந்தவையெல்லாம் நனைந்து விட்டன.

செருப்பு பிய்ந்து போய் விட்டது.

படுக்க ஒரு இடமில்லாமல் இரவு முழுவதும்

அழுக்கு வாய்க்காலுக்கு அருகில்

அடுத்த நாள் வருவதை எதிர்பார்த்து நான் அமர்ந்திருக்கிறேன்.

*****

சிறையில்

கணவன் சிறைக்கம்பிகளுக்கு உள்ளே.

மனைவி வெளியே, உள்ளே கண்களைப் பதித்து நின்றிருக்கிறாள்.

அவர்கள் எவ்வளவு அருகில் இருக்கிறார்கள்!

வெறும் அங்குலங்களே நடுவில்.

எனினும், அவர்கள் எவ்வளவு தூரத்தில்!

ஆகாயமும் ஆழக் கடலையும் போல.

அவர்களின் ஆசையற்ற விழிகள்

வார்த்தைகளால் கூற முடியாத கதைகளைக் கூறுகின்றன.

ஒவ்வொரு வார்த்தைக்கும் முன்னால் கண்களில் நீர் அரும்புகிறது.

இந்த சந்திப்பைப் பார்த்து மனம் கலங்காதவர்கள் யாருண்டு?

*****

வில்க்கிக்கு வரவேற்பு

நாமிருவரும் சைனாவின் நண்பர்கள்.

இருவரும் பயணம் சுங்கிங்கிற்கு.

ஆனால், உங்களுக்கு மதிப்புமிக்க விருந்தாளிக்கான இடம்.

எனக்கோ, காலால் மிக்தக்கும் சிறையறை.

எதற்கு இந்த மாறுபாடான நடவடிக்கை?

ஒரு ஆளுக்கு சூடு, இன்னொரு ஆளுக்கு குளிர்.

அதுதான் முன்பிருந்தே உலகத்தின் சட்டம்

நீர் கடலை நோக்கி ஓடுவதைப் போல.

*****

ஆத்ம உபதேசம்

குளிர் காலத்தின் தனிமையும் குளிரும் இல்லாமல்

வசந்தத்தின் செழிப்பும் உற்சாகமும் உண்டாவது சாத்தியமில்லாத ஒன்று.

விபத்து என்னை பக்குவப்படுத்தி உறுதி படைத்தவனாக்கியிருக்கிறது.

என் மனதை உருக்காக மாற்றியிருக்கிறது.

*****

கிராம காட்சி

நான் இங்கு வந்தபோது நெற் செடிகள்

இளம் பச்சை நிறத்தில் இருந்தன.

இலையுதிர் காலம் வந்திருக்கிறது, அறுவடை பாதி முடிந்திருக்கிறது.

விவசாயிகளின் முகங்கள் நிறைய புன்னகை தவழ்கிறது.

பாட்டும் சிரிப்பும் நெல் வயல்களைத் தாண்டி வந்து கேட்கின்றன.

*****

கஞ்சி சத்திரம்

வழியோரத்தின் பெரிய மர நிழலில்

ஓலை வேய்ந்த ஒரு குடிசைவழி பயணிகளுக்கு சத்திரமாக.

ஆனால், அந்த சத்திரத்தில் விருந்தாளிகளுக்கு மது இல்லை;

சாப்பாட்டுப் பட்டியலில் ஆறிப்போன

கஞ்சியும் வெளுத்த உப்பும் மட்டும்.

*****

க்வோத்தே சிறை

சிறை கவலைகள் பாடாய் படுத்துகிற

அழுக்குப் பிடித்த சிறையறை.

விறகு, அரிசி, உப்பு, எண்ணெய் எல்லாவற்றையும்

பணம் கொடுத்து வாங்க வேண்டும்.

ஒவ்வொரு அறைக்கு முன்னாலும் ஒரு சிறிய அடுப்பு எரிகிறது.

அதில் பகல் முழுவதும் அரிசி வேகிறது.

சூப் கொதிக்கிறது.

*****

பொழுது புலர்வதற்கு முன்பே பிரிவு

1

கோழிகள் கூவின. இரவு இனியும் முடியவில்லை.

நிலவு நட்சத்திரங்களுடன் சேர்ந்து மெதுவாக

இலையுதிர் காலத்தின் மலைகளில் ஏறுகிறது.

ஆனால், தூர பயணம் செய்யும் பயணி

இதோ வெளியே பாதைக்கு வந்தாகி விட்டது.

பாய்ந்து வரும் குளிர்காற்று அவரின் முகத்தில் மோதுகிறது.

2

கிழக்கின் வெளிர்ப்பு பனிநீர் நிறமாக மாறுகிறது.

இரவின் நிழல்களைத் துடைத்து நீக்கி

பிரபஞ்சம் முழுவதும் உற்சாகம் படர்கிறது.

பயணியிடம் கவிஞன் உஷ்ணத்தை உடைத்து எழுகிறான்.

*****

லுங்கானில் துங்சுண் சிறைக்கு

இந்தப் பகுதியில் பூமி விசாலம்தான் என்றாலும் வறுமையானது.

அதனால் மக்கள் சிக்கனத்திலும் கடுமையான உழைப்பிலும் பழக்கப்பட்டிருக்கிறார்கள்.

இந்த இலையுதிர் காலத்தில் அவர்கள் கடுமையான

வறட்சி காரணமாக கஷ்டப்படுகிறார்கள்.

பூமியின் ஐந்தில் ஒரு பங்கு இடத்தில்தான் விதைத்து விளைச்சல் எடுக்க முடிகிறது.

*****

துங் – சுண்

துங் – சுண் சிறை சிங்மாவைப் போலத்தான்.

ஒரு நேரம் ஒரு பாத்திரம் கஞ்சி, வயிறு எப்போதும் காலி.

எனினும் நீரும் வெளிச்சமும் தேவையான அளவிற்கு இருக்கின்றன.

தினமும் இரண்டு முறைகள் புதிய காற்றுக்காக சிறையறைகள் திறக்கப்படுகின்றன.

உடனிருப்பவர்களின் தாள் போர்வை

பழையதும் புதியதுமான புத்தகத்தின் தாள்கள்

ஒட்டப்பட்டு சேர்க்கப்பட்டிருக்கின்றன.

ஒரு போர்வை இல்லாததை விட மேலானது தாள் போர்வை.

ஜரிகை துணி விரித்த மரகதக் கட்டில்களில் உறங்குபவர்களே,

உங்களுக்குத் தெரியுமா இருண்ட சிறையறைகளில்

எவ்வளவு பேர் கண்களை மூடாமல் இருக்கிறார்களென்று?

*****

தெருவில்

இவர்கள் என் கையையும் காலையும் கட்டி வைத்திருக்கிறார்கள்.

எனினும் மலைகளின் நான் கிளிகளின் பாட்டுகளைக் கேட்கிறேன்.

காடு முழுவதும் வசந்த மலர்களின் நறுமணம் நிறைந்திருக்கிறது.

இந்த நீண்ட பயணத்தின் தனிமையை சிறிதளவிலாவது

குறைக்கின்றன இவை எல்லாம்.

சுதந்திரத்தைக் கொண்டாடுவதிலிருந்து

என்னை யாரால் தடுக்க முடியும்?

*****

குளிர்ந்த இரவு

குளிர்ச்சியான இலையுதிர்கால இரவு; தலையணை இல்லை, போர்வைகளும் இல்லை.

முதுகை வளைத்து கால்களை மடக்கிச் சேர்த்து

நான் உறங்க முயற்சிக்கிறேன்; வெறுமனே

வாழைகளில் விழும் நிலவொளி குளிருக்கு ஆழம் கூட்டுகிறது.

ஜன்னல் கம்பிகள் வழியாக சப்தர்ஷி நட்சத்திரங்கள் உள்ளே

எட்டிப் பார்க்கின்றன.

*****

கட்டுகள்

என் கை கால்களில் ஒரு நீளமான வேதாளம் கட்டப்பட்டு கிடக்கிறது.

தோளில் தொங்கல் அணிந்த வெளிநாட்டு அதிகாரியா நான்?

அப்படியென்றால் அதிகாரிகளின் தொங்கல்கள்

ஜரிகை நூலில் செய்யப்பட்டவை.

என் தொங்கல்கள், கோணிச் சணலின் சுருளால் ஆனவை.

*****

ஒரு பல்லிற்கு விடை

தோழா, நீயொரு கடின இதயம் அகம்பாவம் பிடித்தவன்தான்.

நீ நாக்கைப் போல மென்மையான இதயம் கொண்ட ஒரு அடக்கமானவன் அல்ல.

நாம் ஒன்றாக எல்லா கசப்பையும் இனிப்பையும் பங்கு போட்டோம்.

ஆனால், இப்போது நீ மேற்கே செல்ல வேண்டும்.

நானோ, கிழக்குப் பக்கமாய்.

*****

ஓடிப்போன பட்டாளத்துக்காரனின் மனைவி

ஒரு நாள் நீ போய்விட்டாய், பிறகு திரும்பி வரவேயில்லை.

நம்முடைய அறையில் நான் மட்டும் தனியாக இருந்தேன்.

உடன் கவலை மட்டும்.

என் தனிமையைப் பார்த்து கவலைப்பட்ட அதிகாரிகள்

என்னை தற்காலிகமாக சிறைக்கு விருந்தாளியாக அழைத்தார்கள்.

*****

சிரிப்பதற்கு ஒரு விஷயம்

அரசாங்கத்தின் உபசரிப்பு, அரசாங்க அரண்மனையில் வாசம்

அரசாங்கத்தின் காவலாளிகள் மாறி மாறி சேவை

அரசாங்கத்தின் மலைகளையும் நதிகளையும் போதுமென்று

தோன்றும் வரை பார்த்து நிற்கலாம்.

அடடா, இவ்வளவு வசதிகளாலும் மூச்சு அடைக்கும்போது

மனிதன் தனி மனிதன்தான்.

*****

நானிங்கிற்குச் செல்லும் வழியில்

உறுதியான கயிறுக்கு பதிலாக இப்போது கறுப்பு இரும்புச் சங்கிலி.

அடிக்கடி அவை முத்து வளையல்கள் கிலுங்குவதைப் போல கிலுங்குகின்றன.

ஒற்றன் என்று பழி சொல்லி அவர்கள் என்னை சிறையில் அடைத்தார்கள்.

அதனால் என்ன, ஒரு திவானின்

மிடுக்குடன் என் நடவடிக்கைகள் இருக்கின்றன.

*****

பன்றியைச் சுமக்கும் சேவகர்கள்

1

நாங்கள் தெரு வழியே நடக்கிறோம்.

சேவகர்கள் பன்றிகளைச் சுமக்கிறார்கள்.

பன்றிகள் மனிதர்களின் தோள்களில் சவாரி செய்கின்றன.

மனிதர்களோ சங்கிலிகளில் இழுத்துச் செல்லப் படுகிறார்கள்.

பிறப்பிலேயே இருக்கும் சுதந்திரத்தைப் பணயம் வைத்தால்

மனிதனின் விலை பன்றியை விட குறைவுதான்.

2

இந்த பூமியில் மனிதர்களுக்கு பத்தாயிரம் துன்பங்கள்.

எனினும், சுதந்திரத்தை இழந்ததுதான்

இருப்பதிலேயே மிகப் பெரிய துயரம்.

அப்போது மனிதர்களுக்கு சொல், செயல் மறுக்கப்படுகின்றன.

குதிரைகளையும், மாடுகளையும் போல

நாம் மேய்க்கப்படுகிறோம்.

*****

தடுமாறி விழுதல்

இருட்டின் மூடுபடம் நீங்கவில்லை, அதற்கு முன்பே புறப்பட்டாகிவிட்டது.

வளைந்து நெளிந்து செல்லும் பாதையில் கல்லும் மலையும் குழியும்.

தடுமாறி விழ ஆரம்பிக்கும்போது, முன்னால் ஆபத்தான ஒரு குழி.

மிக அருகில் இருந்தது அது. அதிர்ஷ்டம் என்றுதான்

சொல்ல வேண்டும், நான் அதைத் தாண்டி கடக்கலாம்.

*****

நானிங்கிற்குச் செல்லும் படகில்

நீரோட்டத்தில் மல்லார்ந்தவாறு படகு நானிங்கிற்குச் செல்கிறது.

எங்களின் கால்கள் மரக்கட்டையில் இழுத்து கட்டப்பட்டிருக்கின்றன.

தூக்கு மரத்தில் ஏற்றியதைப் போல.

நதியின் இரு கரைகளிலும் பச்சைப் பிடித்து வரும்

செழிப்பான கிராமங்கள்.

நதியின் நடுவிலோ, வேகமாக பாய்ந்து செல்லும் மீனவர்களின் படகுகள்.

*****

நானிங் சிறை

இந்தச் சிறை கட்டப்பட்டிருப்பது புதுமையான முறையில்தான்.

இரவு முழுவதும் சுற்றிலும் ஒளிர்ந்து கொண்டிருக்கும் மின்சார பிரளயம்

ஆனால், சாப்பிட அமரும்போது ஒரு கிண்ணம் கஞ்சி மட்டும்.

வயிறு கோபத்தில் அடங்குவதே வழி.

*****

கவலை

போர் ஜுவாலைகள் உலகத்திற்கு நெருப்பு பற்ற வைத்திருக்கின்றன.

நான் முன்னால்… நான் முன்னால் என்று மனிதர்கள் போட்டி போடுகிறார்கள்.

சிறையில் கைதியின் மீது கனமான பாவம் மட்டும்.

அவனுடைய லட்சியங்களுக்கு ஒரு பைசா விலை இல்லை.

*****

கோழி கூவுவதைக் கேட்ட போது

நீ வெறுமொரு சாதாரண கோழிதான்.

எனினும் தினமும் காலையில் நீ அதிகாலையை

அறிவித்து கூவுகிறாய்.

‘கொக்கரக்கோ!’ என்று நீ மக்களை

தூக்கத்திலிருந்து தட்டி எழுப்புகிறாய்.

உன் தினசரி செயலை சாதாரணம் என்று யார் சொல்வார்கள்?

*****

மூன்று சீட்டு விளையாட்டுக்கு

சிறையில் அடைக்கப்பட்டவனின் மரணம்

மீதமிருந்தது எலும்பும் தோலும் மட்டும்.

குளிரும் பசியும் துயரமும் சேர்ந்து அவனை ஒரு வழி பண்ணிவிட்டன.

நேற்று இரவு அவன் என்னுடன் சேர்ந்து உறங்கினான்.

இன்று காலையில் இதோ, ஒன்பது வசந்தங்களின்

ஊருக்குப் பயணமாகி விட்டான்.

*****

இன்னொரு ஆள்

போயீயும் சு-த்ஸியும் சவ் இனத்தின் சோற்றை வேண்டாமென்றார்கள்.

இந்த மனிதனோ அரசாங்கத்தின் கஞ்சியை.

போயீயும் சு-த்ஸியும் யுயாங் மலையில் இறந்து விழுந்தார்கள்.

சிறையிலடைக்கப்பட்ட இந்த மூன்று சீட்டுக்காரனோ, தானிருக்கும் சிறை அறைக்குள்.

*****

புகை பிடித்தலுக்கு எதிர்ப்பு

இங்கு புகை பிடிப்பது கடுமையாக தடை செய்யப்பட்டிருக்கிறது.

உங்களின் புகையிலை சிறை அதிகாரியின் பைப்பிற்கு

இடம் மாற்றம் செய்யப்பட்டிருக்கிறது.

அவர் அதை பைப்பில் இட்டு இழுக்கிறார். அவருக்கு அது முடியலாம்.

ஆனால், நீங்கள் இனி புகைக்க

முயற்சித்தால், கை விலங்கு நிச்சயம்.

*****

மாலை

காற்று மாலைப் பாறைகளில் மோதி பலமாக வீசுகிறது.

குளிரின் ஈட்டி மரக் கிளைகளைப் பிளக்கிறது.

தூரத்தில் கோவில் கோபுரத்தின் மணியோசை

பயணியின் காலடிகளுக்கு வேகத்தை அதிகரிக்கிறது.

மாலை தாண்டியதும் எருமைகளை மேய்க்கும்

சிறுவர்கள் புல்லாங்குழல் ஊதுகிறார்கள்.

*****

நியாய விலை

ஒரு பிடி அரிசி வேக வைக்க அறுபது சென்ட்

ஒரு பானை வெந்நீருக்கு ஒரு ய்வான்;

அறுபது சென்ட் கொடுப்பதற்கு ஒரு முழு ய்வான் –

இதுதான் சிறையில் நியாய விலை!

உறக்கமில்லாத இரவு

முதல் யாமம் கடந்து செல்கிறது… இரண்டாம் யாமம்… மூன்றாம் யாமம்

நான் திரும்பியும் புரண்டும் படுக்கிறேன்,

எழுந்து நடக்கிறேன், தூக்கம் வரவில்லை.

நான்கு… ஐந்து… கண்களைச் சிறிதுதான் மூடியிருப்பேன்

ஐந்து முனையுள்ள நட்சத்திரம் கனவுகளில் மின்னி ஒளிர்கிறது.

*****

நண்பனின் நினைவு

அன்று நீ என்னுடன் சேர்ந்து நதிக்கரை வரை வந்தாய்.

‘நீ என்று திரும்புவாய்?’என்று நீ கேட்டாய்.

‘புது விளைச்சல் பழுத்து ஆடும்போது’ என்று நான் சொன்னேன்.

ஆனால், விளைச்சல் அறுவடையாகி எவ்வளவோ நாட்களாகி விட்டன.

நான் இப்போதும் அன்னிய நாட்டின் சிறைக்குள் இருக்கிறேன்.

சிறை நண்பனுக்காக வேண்டுகோள்

ஒரே படகில் செல்பவர்கள்

ஒருவருக்கொருவர் உதவ வேண்டி வரும்.

உங்களுக்காக இதோ நான் இந்த வேண்டுகோளை எழுதுகிறேன்.

சரியென்று கருதப்படும் வார்த்தைகளை எடுத்து பயன்படுத்துகிறேன்.

‘அதனால் மேலிடத்தின் உத்தரவுகளுக்கு கீழ்ப்படிந்து…’

இப்படி இப்படி.

இப்படிப்பட்ட உத்திகள் எனக்கு பழக்கமில்லை.

எனினும், வேலையைச் சரியாக செய்து முடிக்கும்போது நீங்கள் காட்டும் நன்றி!

*****

சொறி

சிவப்பு நீல சொறி படர்ந்த நாங்கள்

ஜரிகை பட்டு மூடியதைப் போல.

சிதார் வாசிப்பதைப் போல சொறிவது தொடர்ந்து நடக்கிறது.

நாங்கள் இங்கு சிறப்பு விருந்தாளிகள்.

ஒரே மொழியில் நாங்கள் ஒன்றாகப் பாடுகிறோம்.

*****

அரிசி பொடியாவது

உலக்கைக்குக் கீழே அரிசியின் துன்பம் கடினம்தான்

எனினும், பொடியாகி முடியும்போது

அது பஞ்சைப் போல வெள்ளையாக வெளியே வருகிறது.

பூமியில் மனிதர்களின் விஷயமும் அதைப் போலத்தான்.

துன்பமென்னும் உரல் அவர்களை

மாணிக்கக் கல்லாக ஒளிர வைக்கிறது.

*****

நவம்பர் பதினொன்று

1

முன்பெல்லாம் நவம்பர் பதினொன்று வரும்போது

ஐரோப்பா முழுவதும் முதல் உலக போர் முடிவு

கொண்டாடப்படும்.

இன்று பூ கண்டங்கள் ஐந்திலும்

குருதி கொட்டும் போர்கள் நடக்கின்றன.

முதல் குற்றவாளிகள் நாஸிகள்தான்.

2

சைனாவின் பகைப் போர் தொடங்கி வருடம் ஆறாகிறது.

அவளுடைய வீரச்செயல்கள் உலகமெங்கும் பரவியிருக்கிறது.

வெற்றி அவளின் கைப்பிடியில் இருக்கிறது.

எனினும் எதிர் தாக்குதல் தொடர முயற்சி இனியும் வேண்டும்.

3

ஆசியா முழுவதும் ஜப்பானுக்கெதிரான கொடிகள் பறக்கின்றன.

அவை அனைத்தும் ஒரே மாதிரி இல்லை. பெரியவை உண்டு.

சிறியவை உண்டு.

நமக்கு பெரிய கொடிகள் வேண்டும்.

அதே நேரத்தில், நமக்கு சிறிய கொடிகளும் வேண்டும்.

*****

விமான தாக்குதலைப் பற்றி முன்னறிவிப்பு

எதிரி விமானங்கள் வானத்தில் சீறி நெருங்குகின்றன.

மக்கள் அனைவரும் அபயம் தேடி ஓடுகிறார்கள். இப்போது இடம் காலி.

விமான தாக்குதலையொட்டி எங்களை வெளியே விடுகிறார்கள்.

விமானங்கள் தாக்கினால் என்ன,

சிறைக்கு வெளியே நாங்கள் சந்தோஷப்படுகிறோம்.

*****

சத்திரம்

சட்டப்படி சிறையில் புதிய விருந்தாளிகள்

ஓடைக்கு அருகில் தூங்க வேண்டும்.

யாருக்காவது இரவில் சுகமாக உறங்க வேண்டுமென்ற

கட்டாயம் இருந்தால்

ரொக்கப் பணம் முன்கூட்டியே தர வேண்டும்.

*****

இளம் வெயில்

அதிகாலை வேளையில் இளம் வெயில் சிறைக்குள் கடந்து வருகிறது.

அது புகை படலத்தை இல்லாமற் செய்கிறது.

மூடு பனியைப் போகச் செய்கிறது.

உயிரின் மூச்சு பிரபஞ்சம் முழுவதும் நிறைகிறது.

கைதிகளின் முகங்கள் புன்னகையில் ஒளிர்கிறது.

*****

வாக் லீலை

1

‘சிறை’என்பதற்கான ஓவிய எழுத்திலிருந்து

‘மனிதன்’என்பதற்கான எழுத்தை எடுத்து விடுங்கள்.

‘செய’லின் சின்னத்தை அதில் சேருங்கள்-

‘அரசு’க்கான வார்த்தையாக.

‘துரதிர்ஷ்ட’த்தின் தலையை எடுத்து மாற்றினால்

‘நம்பிக்கை’ஆகி விடும்.

‘மனித’னுடன் கவலையைச் சேர்த்தால் ‘மகத்துவம்’ ஆகி விடும்.

‘சிறை’யிலிருந்து மேற்கூரையை மாற்றினால் ‘ட்ராகன்’ ஆகி விடும்.

2

சிறைக்குள்ளிருந்து வெளியே வரும் மனிதர்கள்

நாடு உண்டாக்க முடியும்.

துரதிர்ஷ்டமானது மக்களின் நம்பிக்கையைச் சோதித்துப் பார்ப்பது.

அநீதிக்கு எதிராக போராடுபவர்கள்தான்

உண்மையிலேயே உயர்ந்தவர்கள்.

சிறைக்கதவு திறக்கும்போது

தனி ட்ராகன் வெளியே வரும்.

*****

வியட்நாம் ஜாக்கிரதை!

அடிமைத்தனத்தை விட நல்லது மரணம்.

என்னுடைய நாடு முழுவதும் செங்கொடிகள் பிறகும் பறக்கின்றன.

ஆ… இப்படிப்பட்ட ஒரு காலத்தில் சிறைக் கைதி ஆவது என்பது எவ்வளவு கொடுமையானது!

போரில் என்னுடைய பங்கைச் செலுத்த

என்னை எப்போது வெளியே அனுப்புவார்கள்?

*****

சைனாவில் ஒரு பிரிட்டிஷ்

பிரதிநிதி சங்கம்

அமெரிக்காக்காரர்கள் போய் விட்டார்கள்; இப்போது

பிரிட்டிஷ்காரர்களின் முறை.

அவர்களின் பிரதிநிதிகளுக்கு எங்கும் வரவேற்பு.

நானும் சைனாவிற்கு நட்பு முறையில் விஜயம் செய்த பிரதிநிதிதான்.

ஆனால், எனக்கு கிடைத்த சூடான வரவேற்பின் தன்மையே வேறு.

*****

அவ்மீங்கிற்கு திரும்புதல்

அவர்கள் என்னை நானிங்கிற்கு மாற்றினார்கள்.

பிறகு அவ்மீங்கிற்கு திரும்ப கொண்டு வந்தார்கள்.

இடம் மாற்றத்துடன் இடம் மாற்றம்.

பயணத்திற்கு ஏற்பாடுகள் நடக்கின்றன.

எனக்கு போதும் போதும் என்றாகி விட்டது.

*****

பவ்ஸியாங்கில் நாய் கறி

க்வோத்தேயில் அவர்களுக்கு புதிய மீன் கிடைக்கிறது.

பவ்ஸியாங்கில் நாய் கறிதான் உணவு.

காவலாளிகளுக்குக் கூட சில நேரங்களில்

அபூர்வ உணவுகள் கிடைக்கின்றன.

*****

சாலை பணியாளர்கள்

மழையில் நனைந்து சுருங்கி, காற்றின் சாட்டையடி ஏற்று

முதுகு நிமிர்த்தாமல் நீங்கள் வேதனையுடன் வேலை செய்கிறீர்கள்.

பாதையை நன்றாக ஆக்கும் உங்களிடம்

பாதையில் போகும் நடைப் பயணிகள்.

குதிரைச் சவாரிக்காரர்கள், வண்டிப்பயணம் செய்பவர்கள்- இவர்களில்

எத்தனை பேருக்கு நன்றி இருக்கிறது?

*****

காவலாளி பிரம்பைத் திருடியபோது

என்னுடன் சேர்ந்து இருந்த காலம் முழுவதும் நீ

தன்னம்பிக்கை கொண்டவனும்

நம்பிக்கைக்கு உரியவனுமாக இருந்தாய்.

நாம் ஒன்றாகச் சேர்ந்து இமயத்தின்,

மூடுபனியின்

பருவங்களைக் கடந்தோம்.

நம்மைப் பிரித்த திருடன் அழிந்து போகட்டும்!

நாம் இருவருக்கும் அவன் உண்டாக்கிய

துன்பங்களுக்கு முடிவு வருமா?

*****

மைல் கல்

உயரம் இல்லாமல், தூரத்தில் இல்லாமல்,

அரசனாக இல்லாமல், சாம்ராட்டாக இல்லாமல்

தெருவின் ஒரு ஓரத்தில் ஒதுங்கி நிற்கின்ற நீ

ஒரு சாதாரண மைல்கல் மட்டுமே.

எனினும் இந்த வழியே போகின்ற பயணிகளுக்கு நீ

உடனடி தரிசனம் தருகிறாய்.

அவர்கள் வழி தவறிப் போகாமல் வழி நடத்துகிறாய்.

இனியும் போக வேண்டிய தூரம்

எவ்வளவு என்பதைத் தெரிவிக்கிறாய்.

உன் சேவை சாதாரணமானதல்ல, மக்கள் என்றும்

உன்னை நினைவில் வைத்திருப்பார்கள்.

பின்யாங் சிறையில்

கைக்குழந்தை

அவ், அவ், அவ் என் தந்தை ஓடிப் போய் விட்டார்!

என் தந்தைக்கு படையைக் கண்டால் பயம்!

ஆறு மாதக்காரனான நானும்

என் தாயும் சேர்ந்து இருக்க வேண்டிய நிலை!

*****

வெளிச்சத்திற்கு கூலி

சிறைக்குள் நுழைந்து விட்டால் வெளிச்சத்திற்கும் வேண்டும் கூலி!

ஒரு ஆளுக்கு ஆறு க்யாங்ஸி ய்வான்;

அதாவது – இருட்டின் சாம்ராஜ்யத்தில்

வெளிச்சத்திற்கு விலை வெறும் ஆறு ய்வான் மட்டும்!

*****

சிறை வாழ்க்கை

எல்லோருக்கும் சொந்தத்தில் அடுப்பு,

கொஞ்சம் மண்பாத்திரங்கள்

சோறும் கறியும் வைக்க, தேநீரும் சேர்த்து குடிக்க.

பகல் முழுவதும் இடைவிடாமல் புகையோ புகை!

*****

மி. க்வோ

இந்த சந்திப்பு உண்மையிலேயே அதிர்ஷ்டம்தான்.

நீரோட்டத்தில் இரண்டு பாசி கூட்டங்கள்

ஒன்று சேர்ந்ததைப் போல

ஆ… மி. க்வோ, தங்களின் கருணையை நான் மறக்கவில்லை.

தங்களைப் போன்றவர்கள் இப்போதும் பூமியில்

இருக்கிறார்கள் என்று அறிவது

குளிரின் ஆழத்தில் ஒரு தீக்கனல்

பரிசாகக் கிடைப்பதற்கு நிகர்.

*****

காவல் தலைவர் மி. மோ

பின்யாங்கின் முக்கிய காவலாளிக்கு

பொன்னால் ஆன இதயம்

பாக்கெட்டிலிருந்து காசு தந்து அவர் கைதிகளுக்கு

அரிசி வாங்குகிறார்.

இரவு நேரத்தில் நாங்கள் உறங்க சங்கிலிகளை அவிழ்த்து விடுகிறார்.

எந்தச் சமயத்திலும் அதிகாரத்தை பயன்படுத்துவதில்லை.

கருணையை மட்டுமே வெளிப்படுத்துகிறார்.

*****

லே பிங்ஙிற்கு வண்டி

பல மாதங்கள் கால் நடையாக நடந்து தளர்ந்து

இன்று நாங்கள் புகை வண்டியில் ஏறுகிறோம்.

நிலக்கரிக் குவியலில்தான் அமர்ந்திருக்கிறோம் என்றாலும்

நடப்பதை விட இது எவ்வளவோ மேல்.

*****

தப்பிப்பதற்கு ஒரு முயற்சி

சுதந்திரம் என்ற ஒரே சிந்தனையின் தூண்டுதலால்

அந்த மனிதன் ஓடும் வண்டியிலிருந்து குதிக்கிறான்.

எல்லாவற்றையும் பணயம் வைத்து

அரை மைல் தூரம் ஓடுகிறான்.

எனினும் காவலாளிகள் அதோ அந்த

அதிர்ஷ்டமில்லாதவனைப் பிடித்து விடுகிறார்கள்.

*****

லே பிங்

இங்கு காவல் தலைவர் தினமும் சீட்டு விளையாடுகிறார்.

போலீஸ் தலைவர் மாறிச் செல்லும் கைதிகளிடமிருந்து

பணம் பிடுங்குகிறார்.

மாவட்டத் தலைவர் ஒரு விளக்கிற்குக் கீழே வேலை செய்கிறார்.

ஒன்றுக்குமில்லை மாற்றம்.

*****

ல்யு சவ்வில்

எல்லா கசப்புகளுக்கும் துன்பங்களுக்கும் ஒரு முடிவு வேண்டும்.

ஒன்பதாம் தேதி இங்கு ல்யு சவ்வை அடைந்தபோது

நான் ஒரு நூறு பயங்கர இரவுகளை திரும்பிப் பார்த்தேன்.

கண் விழித்தபோது என் முகத்தில்

கவலையின் வடுக்கல் இருந்தன.

*****

விசாரணை இல்லாத நீண்ட சிறை வாசம்

கஷாயத்திற்கு கசப்பு மிகவும் அதிகமாவது

இறுதி கட்டத்தை அடையும்போதுதான்.

எல்லை கதவுதான் துன்பம் தருவது.

நீதிபதியின் வீட்டிற்கு ஒரு மைல் தூரம் போனால் போதும்.

எனினும் என்னை இவ்வளவு காலம் காக்க வைத்து விட்டார்கள்.

*****

நடு இரவு

உறங்கும்போது எல்லா முகங்களும் உண்மையானவை.

விழிக்கும்போது அவற்றில் நேர்மையும் நேர்மைக்கேடும் தெரியும்.

நன்மை தீமைகள் பிறப்பில் வருவதில்லை.

பெரும்பாலும் பழக்கத்தில் வருவதுதான்.

*****

நீதிபதியின் வீட்டில்

இறுதியில் நான் நினைத்தேன், கடைசி இடம் இதுதானென்று,

மோட்சத்திற்காக நாள் மிகவும் நெருங்கி வருகிறதென்று.

இனியும் இன்னொரு தடை இவர்கள்

கண்டுபிடிப்பார்கள் என்று யாருக்குத் தெரியும்?

இதோ இன்னொரு இடம் மாற்றம்; க்வெயிலினிக்கு.

*****

நான்கு மாதங்கள் முடிகின்றன

‘சிறையிலிருக்கும் ஒரு நாள் வெளியிலிருக்கும்

ஆயிரம் வருடத்திற்கு நிகர்’

பழமொழியில் தவறில்லை.

மனிதர்களின் ஒன்றுமில்லாத நான்கு மாத வாழ்க்கை

எனக்கு பத்து வயது அதிகமாக்கியது.

அந்த நான்கு மாதங்கள் முழுவதும் நான்

வயிறு நிறைய சாப்பிட்டதில்லை.

நான்கு மாதங்கள் – நான் நிம்மதியாக தூங்கியதில்லை.

நான்கு மாதங்கள் – நான் இந்த ஆடைகளை மாற்றியதில்லை.

நான்கு மாதங்கள் – நான் ஒருமுறை கூட குளித்ததில்லை.

என்னுடைய பற்களில் ஒன்று போய் விட்டது, தலை நரைத்து விட்டது,

பசி தின்று தீர்க்கும் பிணத்தைப் போல

சொறி பிடித்து மெலிந்து கறுத்து

அதிர்ஷ்டத்தால் உறுதியும் பொறுமையும் உள்ளதால்

ஒரு அங்குலத்தைக் கூட விட்டுக் கொடுக்காததால்

என் தேகம் வலித்தாலும் ஆத்மாவிற்கு கேடொன்றுமில்லை.

*****

நோய் பீடிப்பு

சைனாவின் மாறி மாறி வரும் காலசூழ்நிலை

என் உடலைச் சின்னாபின்னமாக்கி விட்டது.

வியட்நாமின் துயரங்கள் என் இதயத்தை கீறி அறுக்கின்றன.

சிறைக்குள் நோயாளியாக இருப்பது மோசமானது.

எனினும் தேம்பி அழப் போவது இல்லை.

ஒரு பாட்டுப் பாடத்தான் எனக்கு விருப்பம்.

*****

க்வெயிலினில்

‘காட்டு வாழ் மனிதர்கள்’ என்ற அர்த்தமுள்ள க்வெயிலினி’ல்

காட்டு வாழ் மனிதர்களுமில்லை; காடுமில்லை.

உயரமான மலைகளும் ஆழமான நதிகளும் மட்டுமே.

ஒரு உயரமான அத்திமர நிழலில் சிறை பயங்கரம்;

பகல் தளர்ச்சி, இரவோ வெறுமை.

*****

நுழைவு கட்டணம்

சிறையை அடையும் போது ஒரு கட்டணம் கொடுக்க வேண்டும்.

குறைத்தது ஐம்பது ய்வான்.

ஒரு பைசாவும் கையில் இல்லாதவனக்கு

அடியும் இடியும் இடைவெளி இல்லாமல்.

நாற்பது நாட்கள் இழப்பு, பயனேயில்லை.

பேச முடியாத துயரம் நிறைந்த நாற்பது நாட்கள்.

மீண்டுமொரு முறை என்னை ல்யு சவ்விற்கு அனுப்புகிறார்கள்.

குழப்பங்களும், தொல்லைகளும் புதிதாக படர்கின்றன.

ல்யுசவ், க்வெயிலின், பிறகும் ல்யூசவ்

என்னை முன்னாலும் பின்னாலும் தட்டுகிறார்கள்.

நிரபராதியான என்னை க்வாங்ஸி முழுவதும் இழுத்துச் செல்கிறார்கள்.

இந்த போக்கு வரவுகளுக்கு முடிவு எப்போது?

*****

நான்காம் எதிர்ப்பு மண்டலத்தின் அரசியல் பிரிவில்

க்வாங்ஸி பகுதியின் பதின்மூன்று மாவட்டங்களிலும்

நான் அலைந்திருக்கிறேன்.

பதினெட்டு சிறைகளின் கதைகளைத் தெரிந்திருக்கிறேன்.

என்ன குற்றம் செய்தேன் என்று நான்

திரும்பத் திரும்ப கேட்கிறேன்.

என் மக்களுக்காக என்னையே சமர்ப்பித்தேன் என்பதுதான் குற்றம்.

*****

அதிகாலை காட்சி

அதிகாலை; சூரியன் மலை உச்சிகள் ஏறுகிறது.

மலைச் சரிவுகள் பனிநீர் ஒளியில் திளைக்கிறது.

சிறைக்கு முன்னால் மட்டும் இருண்ட நிழல் மீதம்.

சிறைக்கு சூரியனின் வழி தடை செய்யப்பட்டிருக்கிறது.

*****

ஸிங்மிங் திருவிழா

ஸிங்மிங் திருவிழா நாள் ஒரே ஸ்தாயியில் சாரல் மழை.

சிறைவாசிகளுக்கு கடுமையான கவலையின் எரிச்சல்.

‘சுதந்திரமே, நீ எங்கே?’ நாங்கள் அழைத்து கேட்கிறோம்.

காவல்காரன் தூரத்தில் அரசாங்கம் இருக்குமிடத்தை நோக்கி

விரலைக் காட்டுகிறான்.

*****

மாலை காட்சி

மாலை நேரத்தில் பனிநீர் மலர் மலர்கிறது. பிறகு வாடிப் போகிறது.

யாருக்கும் தெரியாமல் பிறகும் மலர்கிறது, பிறகும் விழுகிறது.

எனினும் பனிநீர் மலரின் நறுமணம்

சிறைக்குள் வரை வந்து சேர்கிறது-

அங்கு இருப்பவர்களிடம் வாழ்க்கையின்

கவலையையும் அநீதியையும் பற்றி கூறுவதற்கு.

விலக்குகள்

சுதந்திரம் மறுக்கப்பட்ட வாழ்க்கை எவ்வளவு கஷ்டமானது!

இயற்கையின் அழைப்புகள் கூட விலங்குகளுக்கு அடங்கியவை.

கதவைத் திறக்கும்போது வயிறைக் காலி பண்ண விடுவதில்லை.

இயற்கையின் அழைப்பு இறுகும்போது, கதவு அடைக்கப்படுகிறது.

*****

உறக்கம் வராத இரவுகள்

உறக்கம் வர மறுக்கும் முடியாத இரவுகளில்

நான் சிறை வாழ்க்கையைப் பற்றி நூற்றுக்கும் மேற்பட்ட கவிதைகள் எழுதுகிறேன்.

ஒவ்வொரு நான்கு வரிகளும் முடியும்போதும், பேனாவைக் கீழே வைத்து விட்டு

சிறை கம்பிகள் வழியாக சுதந்திரமான வானத்தைப் பார்க்கிறேன்.

*****

நிற்காத மழை

ஒரு தெளிவான நாளில் ஒன்பது நாட்களின்

இடைவெளி இல்லாத மழை!

என் செருப்புகள் பிய்ந்து போயின.

பாதையின் சேறு முழுவதும் கால்களில்.

ஆனால், நடை எப்படி இருந்தால் என்ன?

நான் நடந்தே தீர வேண்டும்.

*****

வீணான நாட்கள்

நீல வானம் என்னை கேலி செய்ய திட்டம் போட்டு ஒளிர்கிறது.

சங்கிலிகளின் பிடியில் எனக்கு எட்டு மாதங்கள் வீணாயின.

ஒவ்வொரு நாளுக்கும் ஆயிரம் வராகன் விலை இருப்பதைப் போல.

இனி நான் என்று சுதந்திரத்தின் நாட்களைக் கொண்டாடுவது?

*****

இலையுதிர் கால அடையாளங்கள்

1

பத்துமணி ஆகும்போது சப்தர்ஷிகள்

மலைக்கு மேலே வருகின்றன.

மின்மினிப் பூச்சிகளின் ஏறி இறங்கும் பாட்டு

இலையுதிர் காலம் வந்து விட்டது என்பதை அறிவிக்கிறது.

மாறி மாறி வரும் பருவங்களில் சிறைக் கைதிக்கு என்ன வேலை?

அவன் கனவு காண்பது ஒரே ஒரு

பருவ மாற்றம் மட்டுமே: விடுதலை.

2

கடந்த இலையுதிர் கால தொடக்கத்தில் நான்

சுதந்திரமானவனாக இருந்தேன்.

இந்த இலையுதிர்காலம் என்னை சிறையறைக்குள் சந்திக்கிறது.

என் நாட்டிற்கு அளித்த சேவைகளின் கணக்கெடுக்கும்போது

இந்த இலையுதிர் காலத்தின் அறுவடை

சென்றதைவிட மோசமில்லை.

*****

சிறை வாசலில் ஒரு நடை

இந்த நீண்ட செயலின்மைக்குப் பிறகு

கால்கள் பஞ்சு போலாகி விட்டன.

முதல் எட்டிலேயே நான் தட்டித் தடுமாறி விழ இருந்தேன்.

உடனே முக்கிய காவலாளி பின்னால் வந்து கூறுகிறார்:

‘அட்டென்ஷன்! அபௌட்டேன்! நடந்தது போதும்.’

*****

இலையுதிர்கால இரவு

வாசற்படிக்கு முன்னால் காவல்காரன் துப்பாக்கியுடன் நிற்கிறான்.

மேலே கரிய மேகங்கள் நிலவைத் திருடிக் கொண்டு செல்கின்றன.

மூட்டைகள் முன்னேறி இயந்திரத் துப்பாக்கிகளைப் போல கூட்டம் கூடுகின்றன.

கொசுக்கள் படைவீரர்களாக போர் விமானங்களைப்

போல ஆக்கிரமிக்கின்றன.

என் இதயம் பிறந்த நாட்டுக்கு ஓராயிரம் மைல்கள் பயணிக்கின்றது.

என் கனவு ஆயிரம் கயிறுகள்

சேர்த்து உண்டாக்கிய நூல் பந்தைப் போல-

கவலையுடன் கட்டு இறுகுகிறது; குற்றம் செய்யாமலே

ஒரு வருடம் நான் சிறையில் இருந்தேன்.

கண்ணீரை மையமாக்கி நான் என் சிந்தனைகளை

கவிதைகளாக மாற்றுகிறேன்.

*****

ஆயிரம் கவிஞர்களின் தொகுப்பைப் படித்தபோது

பழமைவாதிகளுக்கு இயற்கை அழகைப் பற்றி பாட விருப்பம் இருந்தது.

பனி மலர்கள், காற்று, நிலவு, மூடுபனி, மலைகள், நதிகள்.

இன்று நாம் இரும்பையும் உருக்கையும் சேர்த்து

கவிதைகள் உண்டாக்க வேண்டும்.

இன்று கவிஞர்களுக்கு ஒரு படையெடுப்பு நடத்தவும் தெரிந்திருக்க வேண்டும்.

*****

இயற்கைக் காட்சி

மரக் கிளைகள் சாங்ஃபெயின் ஓவியத்தை வரைகின்றன.

க்வான்யுவின் மேன்மைகளுக்கு மேல்

சூரியன் எப்போதும் பிரகாசித்து நிற்கிறது.

இந்த வருடம் என் பிறந்த நாட்டிலிருந்து ஒரு செய்தியும் இல்லை.

ஒவ்வொரு நாளும் பிறந்த மண்ணிலிருந்து

ஒரு வாக்கிற்காக நான் காத்திருக்கிறேன்.

*****

தெளிவான தட்ப வெப்ப நிலை

எல்லாம் மாறுகின்றன. இயற்கையின் சக்கரம் சுழல்கிறது.

மழையின் நாட்களுக்குப் பிறகு தெளிவான

தட்ப வெப்ப நிலை வருகிறது.

ஒரே நிமிடத்தில் உலகம் முழுவதும் ஈரத்தில் ஊறி கிடக்கின்றது.

மலைகள் இலட்சம் மைல்கள் நீளத்தில்

ஜரிகைக் கம்பளம் விரிக்கின்றன.

மழை கழுவியெடுத்த பெரிய மரக் கிளைகளில்

பறவைகள் சேர்ந்து பாட்டு பாடுகின்றன.

இளம் வெயிலுக்கும் தென்றலுக்கும் கீழே

பூக்கள் புன்சிரிக்கின்றன.

மனித சிந்தனையில் வெப்பம் நிறைகிறது.

வாழ்க்கை பிறகும் மலர்கிறது.

துன்பம் சந்தோஷத்திற்கு பாதை அமைக்கிறது.

இதுதான் இயற்கையின் விருப்பம்.

*****

சிறைவாசம் முடிந்து மலைகளில் ஒரு நடை

மேகங்கள் மலை உச்சிளைத் தழுவுகின்றன.

மலை உச்சிகள் மேகங்களைப் புணர்கின்றன.

கீழே நதி கண்ணாடியைப் போல களங்கமற்று ஒளிர்கிறது.

தெற்கு வானம் நோக்கி பழைய நண்பர்களை

கனவு கண்டு அலையும்போது

மேற்கு மலையின் உச்சியில் என்

இதயம் பதிகிறது.

 

 

 

ஹோ சி மின்னின் மரண அறிக்கை

அமெரிக்க ஆக்கிரமிப்பிற்கு எதிரான, நாட்டின் விடுதலைக்கான நம்முடைய மக்களின் போராட்டம் இனியும் அதிகமான தடைகளையும் தியாகங்களையும் கடந்து செல்ல வேண்டி இருக்கலாம். எனினும், முழுமையான வெற்றி நமக்குத்தான். அதில் எந்தவிதமான சந்தேகமும் இல்லை.

அப்போது தெற்கிலும் வடக்கிலும் பயணம் செய்து நம்முடைய தைரியம் மிக்க நாட்டு மக்களையும் அணிகளையும் படைகளையும் பாராட்டவும், வயதானவர்களையும் நம்முடைய பிரியமான இளைஞர்களையும் குழந்தைகளையும் காணவும் நான் விரும்புகிறேன்.

அந்தச் சமயத்தில் நம்முடைய மக்களின் சார்பாக சோசலிச அமைப்பிலிருக்கும் சகோதர நாடுகளுக்கும் உலகத்தின் நட்பு நாடுகளுக்கும் நான் செல்வேன். அமெரிக்க ஆக்கிரமிப்பிற்கு எதிராக நம்முடைய மக்கள் நடத்திய நாட்டுப் பற்று கொண்ட போராட்டத்திற்கு அவர்கள் தந்த இதயபூர்வமான ஆதரவிற்கும் உதவிக்கும் நன்றி கூறுவேன்.

தாங் காலத்தில் புகழ்பெற்ற சீன கவிஞர் து-ஃபு எழுதினார்: ‘எழுபதாவது வயதை அடைந்தவர்கள் என்று மிகவும் குறைவானவர்களே இருக்கிறார்கள்.’

இந்த வருடம் எழுபத்தொன்பதாவது வயதை அடைந்திருக்கும் நான் அந்த குறைவானவர்களில் ஒருவனாக என்னை நினைத்துக் கொள்கிறேன். எனினும் என்னுடைய மனம் இப்போதும் தெளிவாக இருக்கிறது- கடந்து போன வருடங்களுடன் ஒப்பிடும்போது என்னுடைய உடல் நலம் சிறிது மோசமாக ஆகியிருந்தாலும், எழுபதின் உச்சத்தை அடைந்திருக்கும் ஒரு மனிதனைப் பொறுத்த வரையில், உடல் நலம் வயதிற்கேற்றபடி சற்று மோசமாகிக் கொண்டு வரத்தான் செய்யும். அதில் ஆச்சரியப்படுவதற்கு ஒன்றுமில்லை.

எனினும், இனியும் எவ்வளவு காலத்திற்கு புரட்சிக்கும் தாய் மண்ணுக்கும் மக்களுக்கும் சேவை செய்ய என்னால் முடியும் என்று யாருக்குத் தெரியும்?

அதனால், கார்ல் மார்க்ஸ், லெனின் ஆகியோரைப் போன்ற மூத்த புரட்சிக்காரர்களுடன் நானும் போய் சேரும் நாளை முன் கூட்டியே கண்டு இந்த சில வரிகளை இங்கு குறிக்கிறேன். இப்படிச் செய்தால் நாடு முழுக்க இருக்கும் நம்முடைய மக்களுக்கும் நம்முடைய கட்சி தோழர்களுக்கும் உலக நண்பர்களுக்கும் திடீரென்று ஆச்சரியப்பட வேண்டிய நிலை வராது அல்லவா?

முதலில் கட்சியைப் பற்றி: தொழிலாளி வர்க்கத்திடமும் மக்களிடமும் தாய் மண்ணிடமும் கொண்டிருக்கம் அர்ப்பணிப்பு மூலம், ஆரம்பத்திலிருந்தே மக்களை ஒற்றுமைப்படுத்தவும், ஒன்று சேர்க்கவும் நீண்ட போராட்டத்தை வெற்றியிலிருந்து வெற்றிக்கு எடுத்துச் செல்லவும் நம்முடைய கட்சிக்கு முடிந்திருக்கிறது.

ஏக மனது நம்முடைய கட்சியின், மக்களின் மிகவும் மதிப்பு மிக்க பரம்பரைச் சொத்து. மத்திய குழு முதல் ஆரம்ப நிலையிலிருக்கும் அமைப்பு வரை இருக்கும் எல்லா தோழர்களும் கட்சிக்குள் ஒருமையும் மன ரீதியான ஒற்றுமையும் நிலவவும், கட்சிக்குள் பரந்த மக்களாட்சி தத்துவம் இருக்கவும் சுய விமர்சனமும் ஆராய்ச்சியும் தொடர்ந்து தீவிரமாக செய்து பார்ப்பதுதான் ஏக மனதையும் ஒருமையையும் உறுதி செய்வதற்கான சரியான வழி. தோழமை உணர்வும், அன்பும் மலர்ந்து இருக்க வேண்டும்.

நம்முடையது அதிகாரத்தில் இருக்கும் கட்சி. ஒவ்வொரு கட்சி உறுப்பினரும் ஒவ்வொரு அணியும் புரட்சி பாதையை உறுதியாக நம்பவும், கடின உழைப்பு, தீவிர ஈடுபாடு, உற்சாகம், நேர்மை, முழுமையான சுயநலமின்மை, பொது நன்மைக்காக முழுமையான அர்ப்பணிப்பு ஆகியவற்றைக் கொண்டிருத்தலும் வேண்டும். நம்முடைய கட்சி முழுமையான புனிதத் தன்மையுடன் இருப்பதுடன், மக்களின் தலைவனும நம்பிக்கைக்குரிய சேவகன் என்ற நிலையில் அதன் பகுதிக்கான தகுதியைத் தெளிவுபடுத்த வேண்டும்.

தொழிலாளி, இளைஞர்கள் அமைப்பு உறுப்பினர்களும், பொதுவாக நம்முடைய இளைஞர்களும் மிகுந்த புத்திசாலிகளாவார்கள். அவர்கள் எப்போதும் ஆபத்துகளைப் பார்த்து பயப்படாமல் வளர்ச்சி குறித்த சிந்தனைகளுடன் முன்னோக்கி வர தயாராகவே இருக்கிறார்கள். கட்சி அவர்களின் புரட்சி சிந்தனைகளை வளர்த்தெடுத்து, சிவப்பு சிந்தனை கொண்டவர்களும் சோசலிசத்தின் உருவாக்கத்தில் நிபுணர்களுமான அவர்களை நம்முடைய வழித்தோன்றல்களாக ஆக்கி அவர்களுக்கு முறையான பயிற்சி தர வேண்டும்.

எதிர்கால புரட்சி வீரர்களுக்குப் பயிற்சி தந்த அவர்களுக்குத் தேவையான பாடங்களைக் கற்றுத் தருவதும் மிகவும் முக்கியமான விஷயங்கள்.

நம்முடைய உழைக்கும் மக்கள் சமவெளிகளிலும் மலைப் பகுதிகளிலும் பல யுகங்களாக பலவிதப்பட்ட கஷ்டங்களையும் ஃப்யூடல் காலனியல் துன்பங்களையும் சுரண்டலையும் சகித்துக் கொண்டு இருந்திருக்கிறார்கள். போதாதென்று, அவர்கள் பல வருடங்களாக போர்களையும் அனுபவித்திருக்கிறார்கள். எனினும், நம்முடைய மக்கள் மகத்தான தைரியத்தையும், உற்சாகத்தையும், கடின உழைப்பையும் வெளிப்படுத்தி வந்திருக்கிறார்கள். கட்சி ஆரம்பிக்கப்பட்டதிலிருந்து, எல்லா நேரங்களிலும் அசாதாரணமான நம்பிக்கையுடன் அதை அவர்கள் பின்பற்றி வந்திருக்கிறார்கள்.

மக்களின் வாழ்க்கை நிலையை உயர்த்துவதற்கு கட்சி பயனுள்ள ஒரு சமூக பொருளாதார வளர்ச்சிக்கான திட்டத்தை நடைமுறைக்குக் கொண்டு வர வேண்டும்.

அமெரிக்க ஆக்கிரமிப்பிற்கு எதிரான போர் இனியும் தொடரலாம். நம்முடைய தோழர்கள், உடைமை, உயிர் சம்பந்தமாக புதிய தியாகங்களைச் செய்ய வேண்டிய நிலை நேரிடலாம். எது நடந்தாலும், நாம் இறுதி வெற்றி அடையும் வரையில் அமெரிக்க ஆக்கிரமிப்பாளர்களை எதிர்த்து நிற்கும் நம்முடைய தீர்மானத்தில் உறுதியாக இருக்க வேண்டும்.

நம்முடைய நதிகளும் நம்முடைய மலைகளும் நம்முடைய மக்களும் என்றும் இருப்பார்கள். அமெரிக்க ஆக்கிரமிப்பாளர்களை தோல்வியடையச் செய்த பிறகு, நம்மால் பத்து மடங்குகள் அழகான ஒரு நாட்டை உண்டாக்க முடியும். முன்னாலிருக்கும் கஷ்டங்களும் துயரங்களும் எந்த வகையில் இருந்தாலும் நம்முடைய மக்களின் முழுமையான வெற்றி என்பதென்னவோ நிச்சயம். அமெரிக்க ஆட்சியாளர்கள் தோல்வியைச் சந்திக்கப் போவது உண்மை. நம்முடைய அன்னை பூமி மீண்டும் ஒன்றாகும். வடக்கும் தெற்குமாக இருக்கும் நம்முடைய நாட்டு மக்கள் ஒரே மேற் கூரைக்குக் கீழே மீண்டும் ஒன்று சேர்வார்கள். அப்போது ஒரு சிறு நாட்டைச் சேர்ந்த நாம் தைரியமான ஒரு போர் மூலமாக இரண்டு சாம்ராஜ்யங்களை – ஃப்ரெஞ்சையும் அமெரிக்காவையும் – தோல்வியடையச் செய்து தேசிய விடுதலை அமைப்பிற்கு மதிப்பு மிக்க கொடையை அளித்தவர்கள் என்ற பரிசைப் பெற்றிருப்போம்.

உலக கம்யூனிஸ்ட் அமைப்பைப் பற்றி: வாழ்க்கை முழுவதையும் புரட்சிக்காக அர்ப்பணித்துக் கொண்ட நான் சர்வதேச கம்யூனிஸ்ட் தொழிலாளி அமைப்பின் வளர்ச்சியில் பெருமைப்படுவதுடன் இப்போது நட்புக் கட்சிகளை விமர்சிக்கின்ற கருத்து வேறுபாடுகளுக்காக வருத்தப்படவும் செய்கிறேன்.

நம்முடைய கட்சி மார்க்ஸிஸம் – லெனினிஸத்தின், சர்வதேச தொழிலாளி அமைப்பின் அடித்தளத்தில் அறிவுக்கும் உணர்வுகளுக்கும் மதிப்பளிக்கும் வகையில், தோழமைக் கட்சிகளின் ஒற்றுமைக்கு தீவிரமாக முயற்சிக்கும் என்று நான் திடமாக நம்புகிறேன். தோழமைக் கட்சிகளும் நாடுகளும் மீண்டும் ஒன்று சேரும் சூழ்நிலை உண்டாகும் என்பதில் நான் உறுதியாக இருக்கிறேன்.

தனிப்பட்ட செயல்பாடு பற்றி : ஆயுள் முழுவதும் தாய் மண்ணுக்கும் புரட்சிக்கும் மக்களுக்கும் நிறைந்த இதயத்துடனும் உறுதியுடனும் நான் சேவை செய்திருக்கிறேன். இப்போது உலகத்தை விட்டு நீங்கும் நிலை வந்தாலும், எது குறித்தும் நான் கவலைப்படுவதற்கில்லை- அதிக காலம் மேலும் அதிக சிறப்பாக சேவை செய்ய முடியாமற் போய் விடும் என்பதைத் தவிர.

நான் உலகை விட்டு போகும் போது, மக்களின் நேரமும் பணமும் வீண் செலவாகாமல், பெரிய அளவில் சவ அடக்க சடங்குகளை தவிர்க்க வேண்டும்.

இறுதியாக, அனைத்து மக்களுக்கும் கட்சிக்கும் படைகளுக்கும் என்னுடைய மருமக்களுக்கும் இளைஞர்களுக்கும் குழந்தைகளுக்கும் நான் என்னுடைய அளவற்ற அன்பை இங்கு விட்டுச் செல்கிறேன். உலகமெங்கும் இருக்கும் நம்முடைய தோழர்களுக்கும் நண்பர்களுக்கும் இளைஞர்களுக்கும் குழந்தைகளுக்கும் நான் என்னுடைய அன்பு நிறைந்த வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

என்னுடைய இறுதி ஆசை, நம்முடைய கட்சியும் மக்களும் தங்களின் முயற்சிகளை ஒன்று சேர்த்து, அமைதியும் ஒற்றுமையும் சுதந்திரமும் மக்களாட்சி தத்துவமும் முற்போக்கு சிந்தனையும் கொண்ட ஒரு வியட்நாமை உருவாக்கி உலக புரட்சிக்கு விலை மதிப்புள்ள கொடையை அளிக்க வேண்டும் என்பதுதான்.

ஹோ சி மின்

ஹோ சி மின்னின் வாழ்க்கையில் குறிப்பிடத்தக்க சம்பவங்கள்

1890, மே 19   ந்யூயென் சின் குங்க் (ஹோ சி மின்) ஹோங்சு என்ற கிராமத்தில் பிறந்தார் – வியட்நாமின் ங்ஙீ-அன் பிரதேசத்தில் இருந்த ஒரு கிராமத்து பள்ளி ஆசிரியரின் மகனாக.

1905 – 1910 ஹ்யூவில் இருந்த தேசிய கல்லூரியில் அவர் படித்தார். வியட்நாமின் பழைய தலைநகரம் ஹ்யூதான்.

1911 – 1917 சமையல்காரர் ஒருவருக்கு உதவியாளர், நியூயார்க்கிலிருந்த ஹார்லெம் என்ற இடத்தில் ஒரு தற்காலிக வேலை, லண்டனில் குப்பைகள் பெருக்குபவர், சமையல்காரர் ஒருவருக்கு உதவியாளர், பாரீஸ் புகைப்பட ஸ்டூடியோ ஒன்றில் பணியாளர். இப்படி பல வேலைகளைச் செய்திருக்கிறார்.

1918  ஃப்ரான்ஸ் சோஷலிஸ்ட் கட்சியில் சேர்ந்தார்.

1919, ஜனவரி   ங்யுன் அய் க்யோக் என்ற பெயரில் அவர் பாரீஸில் நடைபெற்ற வியட்நாம் தேசிய விடுதலை புரட்சி அமைப்பின் சர்வதேச கருத்தரங்கில் கலந்து கொண்டார்.

1920, ஜூலை  தேசிய மற்றும் காலனிய கேள்விகள் பற்றிய லெனினின் ஆராய்ச்சி கட்டுரையை முதல் முறையாக அவர் படிக்கிறார். அதன் விளைவாக சர்வதேச கம்யூனிசத்தின் மீது ஆழமான ஈடுபாடு ஹோசி மின்னுக்கு உண்டாகிறது.

1920, டிசம்பர் ப்ரெஞ்ச் சோசலிஸ்ட்டுகள் நடத்திய பயணங்களில் கலந்து கொண்டார். அங்கு ஃப்ரெஞ்சு கம்யூனிஸ்ட் கட்சி தொடங்குவதற்காக வாக்களித்த பெரும்பாலானோருடன் அவர் போய் சேர்ந்தார். அதன் மூலம் வியட்நாமின் வரலாற்றில் முதல் கம்யூனிஸ்ட்டாக அவர் ஆனார்.

1924, ஜூன் மாஸ்கோவில் நடைபெற்ற 5வது உலக கமின்டென் காங்கிரஸில் இந்தோ சீனாவின் பிரதிதியாக கலந்து கொண்டார்.

1925, ஜூன் வியட்நாம் புரட்சிகர இளைஞர் சங்கத்தைத் தொடங்குவதற்கான ஆரம்ப வேலைகளைச் செய்தார். அது வியட்நாம் கம்யூனிஸ்ட் கட்சிக்கு முன்னோடியாக இருந்தது.

1930, பிப்ரவரி 3 வியட்நாமிய கம்யூனிஸ்ட் மாநாடு ஒன்றுக்கு தலைமை வகித்தார். அது ஹாங்காங்கிலுள்ள கவ்லூன் என்ற இடத்தில் நடந்தது. (அதுதான் பின்னர் இந்தோ சீனா கம்யூனிஸ்ட் கட்சி, வியட்நாம் தொழிலாளர்கள் கட்சி என்றெல்லாம் இருந்து கடைசியாக வியட்நாம் கம்யூனிஸ்ட் கட்சியாக உருவெடுத்தது).

1935, ஜூலை – ஆகஸ்ட் 7வது உலக கமின்டென் காங்கிரஸில் கலந்து கொண்டார். சர்வதேச கம்யூனிச அமைப்பின் செயற்குழு இந்தோ சீனா கம்யூனிஸ்ட் கட்சியை அங்கீகரிக்க அங்குதான் முடிவு செய்தது.

1941, பிப்ரவரி 8  30 வருட அலைச்சலுக்குப் பிறகு அவர் காபேங்க் மாநிலத்திலுள்ள பாக்-போ என்ற கிராமத்திற்கு அருகில் எல்லைக் கோட்டை யாருக்கும் தெரியாமல் கடந்து வியட்நாமிற்குள் நுழைந்தார்.

1944 – 1945  பொதுவான ஆயுதப் பெருக்கத்திற்கான தயாரிப்பு வேலைகளைத் தொடங்கினார். 1944 ஆம் வருடம் டிசம்பர் 22ஆம் தேதி அரசியல் கிளர்ச்சிக்கு தனி ஆயுதப் பிரிவு என்ற அமைப்பிற்கு தொடக்கம் குறித்தார். அதுதான் எதிர்காலத்தில் வியட்நாம் மக்கள் ராணுவத்திற்கு அடித்தளமாக அமைந்தது. தேசிய விடுதலை குழுவின் தலைவராக 1945இல் அவர் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

1945, செப்டம்பர் 2  வியட்நாம் ஜனநாயக குடியரசின் அரசாங்கத்தின் சார்பாக அவர் ஹனாய் பதின் சதுக்கத்தில் சுதந்திரப் பிரகடனத்தை அறிவித்தார். அதன் மூலம் தெற்கு கிழக்கு ஆசியாவில் முதல் தொழிலாளர்கள் மற்றும் விவசாயிகளின் நாடு பிறந்தது.

1946, மார்ச் 2  தேசிய சட்ட மன்றம் தன்னுடைய முதல் கூட்டத்தில் அவரை தலைவராக தேர்ந்தெடுத்தது. வியட்நாம் ஜனநாயக குடியரசின் பிரதம அமைச்சராக அவர் நியமிக்கப்பட்டார் (1955ஆம் ஆண்டு வரை அவர் அந்த பதவியல் இருந்தார்).

1946, டிசம்பர் 20 ஃப்ரெஞ்ச் காலனிகளுக்கு எதிராக வியட்நாம் மக்கள் போரிடுவதற்கு தயாராக வேண்டும் என்று வானொலியில் பேசினார்.

1950, செப்டம்பர் எதிரியின் வடக்கு பகுதிகளைக் கைப்பற்றுவதற்கான வேலைகள் நடந்தன. அதில் கிடைத்த வெற்றி வியட்நாம் ஜனநாயக குடியரசு சோவியத் யூனியனுடனும் மற்ற சோசலிச நாடுகளுடனும் நேரடியாக உறவு வைத்துக் கொள்ள வழி வகுத்தது.

1951, பிப்ரவரி இந்தோ சீனா கம்யூனிஸ்ட் கட்சியின் 2வது காங்கிரஸில் உரையாற்றினார். தன்னுடைய பெயரை வியட்நாம் தொழிலாளர்கள் கட்சி என்று மாற்றிக் கொள்ள அங்குதான் அது தீர்மானித்தது. தன்னுடைய உரையில் ஹோ சி மின் கிடைக்கக் கூடிய எல்லா இயற்கை சந்திகளையும் பயன்படுத்தி ஒரு வெற்றிகரமான முடிவை உண்டாக்க வேண்டும் என்று கட்சியையும் மக்களையும் கேட்டுக்

கொண்டார். வியட்நாம் தொழிலாளர்கள் கட்சியின் மத்திய குழுவின் தலைவராக அவர் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

1954, ஜூலை 22   ஜெனீவா ஒப்பந்தங்களில் கையெழுத்து போடுவது பற்றியும், இந்தோ சீனாவில் அமைதி உண்டாக்குவது பற்றியும் மக்களுக்கு உரையாற்றினார்.

1955, ஜூன்   சோவியத் யூனியனுக்கும் மற்ற சோசலிச நாடுகளுக்கும் கட்சி மற்றும் நாட்டின் தலைவர் என்ற முறையில் பயணம் சென்றார்.

1960, செப்டெம்பர்  வியட்நாம் தொழிலாளர்கள் கட்சியின் 3வது காங்கிரஸ் நடைபெற்றது. அதில் வியட்நாமிய புரட்சி சம்பந்தமாக இரண்டு முக்கியமான முடிவுகள் எடுக்கப்பட்டன. 1) வடக்கில் சோசலிச அமைப்பை உண்டாக்குவது. அடக்கு முறையாளர்களிடமிருந்தும் அவர்களின் வழித் தோன்றல்களிடமிருந்தும் தெற்கை விடுதலை செய்வது. 2) நாட்டை அமைதியாக மீண்டும் இணைப்பது. வியட்நாம் தொழிலாளர்கள் கட்சியின் மத்திய குழுவின் தலைவராக மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

1965, ஏப்ரல்   உச்ச பாதுகாப்பு குழுவின் தலைவராக நியமிக்கப்பட்டார். தேசிய சட்டமன்றத்தின் ஒரு கூட்டத்தில் அவர் மக்களிடம் இப்படி கேட்டுக் கொண்டார்: ‘நாட்டின் நலனுக்காகவும் அமெரிக்க அடக்கு முறை ஆட்சியாளர்களுக்கு எதிராகவும் நடைபெறும் போராட்டத்தில் மக்கள் ஒவ்வொருவரும் திரண்டெழ வேண்டும்.’

1969, செப்டெம்பர் 3  ஹனாவிலிருந்த அவருடைய இல்லத்தில் மாரடைப்பு ஏற்பட்டு மரணத்தைத் தழுவினார். வியட்நாம் தொழிலாளர்கள் கட்சியின் மத்திய குழுவின் அரசியல் பிரிவு 1969, நவம்பர் 29ஆம் தேதி ஒரு முடிவு எடுத்தது. அதன்படி ஹோ சி மின்னின் உடலை பதப்படுத்தி வைத்திருப்பது என்றும், அவர் பற்றிய நினைவைத் தொடர்வது என்றும் தீர்மானிக்கப்பட்டது. 1975 ஆகஸ்டு 29 ஆம் தேதியிலிருந்து ஹோ சி மின் ஹனாயிலுள்ள பதின் சதுக்கத்திலிருக்கும் நினைவாலயத்தில் உறங்கிக் கொண்டிருக்கிறார்.

 

 

Spread the love

TamilNews Media

Tamil web magazine in which daily news, medical articles, politics, sports, education related news are uploaded. Contact 9600032872

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Social Share Buttons and Icons powered by Ultimatelysocial