கும்பகோணம், மன்னார்குடி சாலையில் ஆலங்குடி பஸ் நிறுத்தம் பகுதியில் 150 அடி நீள நிழல் வலை அமைப்பு
திமுகவினர் ஏற்பாடு:
வலங்கைமான் : வலங்கைமான் அடுத்த ஆலங்குடியில் கும்பகோணம் மன்னார்குடி சாலையில் பொதுமக்கள் நலன் கருதி பஸ் நிறுத்தம் பகுதியில் நிழல் வலை அமைக்கப்பட்டுள்ளது.
திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் அடுத்த ஆலங்குடியில் குரு கோயில் உள்ளது. கும்பகோணம், மன்னார்குடி வழித்தடத்தில் உள்ள கோயிலுக்கு நாள்தோறும் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் வந்து செல்கின்றனர். கோயிலுக்கு வரும் நூற்றுக்கணக்கான பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் ஆகியோர் கும்பகோணம் மற்றும் மன்னார்குடி வழித்தடத்தில் செல்வதற்கு குரு கோயில் நுழைவு வாயில் பகுதியில் எதிரே பஸ்க்காக காத்து நிற்பது வழக்கம். முன்னதாக சென்னை கன்னியாகுமரி தொழில்தட சாலை திட்டத்தின் கீழ் கும்பகோணத்தில் இருந்து நீடாமங்கலம் வரை சாலை அகலப்படுத்தப்பட்டு பலப்படுத்தும் பணிகள் மேற்கொள்ளப்பட்டது. முன்னதாக சாலை அகலப்படுத்தும் பணியின் போது சாலை ஓரங்களில் உள்ள மரங்கள் அனைத்தும் அப்புறப்படுத்தப்பட்டன. இதேபோல ஆலங்குடி பஸ் நிறுத்தம் பகுதியில் இருந்த நிழல் தரும் மரங்களும் அப்புறப்படுத்தப்பட்டது. இதன் காரணமாக பஸ்க்கு நிற்கும் பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் கடும் வெயிலில் நிற்க வேண்டிய சூழல் ஏற்பட்டது. இந்நிலையில் ஆலங்குடி திமுக சார்பில் கும்பகோணம் மன்னார்குடி சாலையில் சுமார் 150 அடி நீளத்திற்கு பச்சை நிற நிழல் வலை கட்டப்பட்டுள்ளது. இதன் காரணமாக வெப்பம் தணிந்தது. பொதுமக்கள் சாலையை பயன்படுத்தி பல்வேறு பணிகளுக்கு சென்று வருகின்றனர்.