1,500 இடைநிலை ஆசிரியர் பணியிடங்களை ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் நேரடியாக நியமிக்க பள்ளிக்கல்வித்துறை முதன்மைச் செயலாளர் உத்தரவு!
பள்ளிக்கல்வி ஆசிரியர் நேரடி நியமனம்- அரசு பள்ளிகளில் இடைநிலை ஆசிரியர் காலிப் பணியிடங்கள் ஏற்கனவே அனுமதி வழங்கப்பட்டுள்ள 1000 இடைநிலை ஆசிரியர் பணியிடங்களுடன் கூடுதலாக 500 இடைநிலை ஆசிரியர் காலிப் பணியிடங்களை ஆசிரியர் தேர்வு வாரியம் வாயிலாக நேரடி நியமனம் மூலம் நிரப்பிட அனுமதி வழங்குதல்- ஆணை வெளியிடப்படுகிறது. அதன்படி
1.தொடக்கக் கல்வி இயக்கக நிர்வாகத்தின் கீழ் செயல்படும் ஊராட்சி ஒன்றிய / நகராட்சி / மாநகராட்சி / அரசு தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் 01.08.2022 நிலவரப்படி காலியாக உள்ள இடைநிலை ஆசிரியர் பணியிடங்களுள் 1000 காலிப் பணியிடங்களை நேரடி நியமனம் மூலம் நிரப்பிட அனுமதி அளித்து மேலே முதலாவதாகப் படிக்கப்பட்ட அரசாணையில் ஆணை வெளியிடப்பட்டுள்ளது.
2. பள்ளிக்கல்வித் துறையில் தொடக்கக் கல்வி இயக்கக நிர்வாகத்தின் கீழ் செயல்படும் ஊராட்சி ஒன்றிய / நகராட்சி / மாநகராட்சி / அரசு தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் நேரடி நியமனம் மூலம் நிரப்ப வேண்டிய இடைநிலை ஆசிரியர் விவரங்கள் ஆசிரியர் தேர்வு வாரியத்திற்கு தெரிவிக்கப்பட்டுள்ளது எனவும், இக்காலிப் பணியிடங்களுக்கு நேரடி நியமனம் மூலம் 2023-24-ம் ஆண்டில் பணிநாடுநர்களைத் தெரிவு செய்யவும், மேலே முதலாவதாகப் படிக்கப்பட்ட அரசாணையில் ஏற்கனவே நேரடி நியமனம் மூலம் நிரப்ப அனுமதி வழங்கப்பட்ட 1000 இடைநிலை ஆசிரியர் பணியிடங்கள் தவிர்த்து மீதமுள்ள இடைநிலை ஆசிரியர் காலிப் பணியிடங்களை ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் நிரப்பிட அனுமதி வழங்குமாறு மேலே இரண்டாவதாகப் படிக்கப்பட்ட கடிதத்தில் தொடக்கக்கல்வி இயக்குநர் அரசைக் கோரியுள்ளார்.
3. தொடக்கக்கல்வி இயக்குநரின் கருத்துரு அரசால் விரிவாகப் பரிசீலனை செய்யப்பட்டது. பரிசீலனைக்குப் பின்னர், தொடக்கக் கல்வி இயக்கக நிர்வாகத்தின் கீழ் செயல்படும் ஊராட்சி ஒன்றிய / நகராட்சி / மாநகராட்சி / அரசு தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் 2023-2024-ம் ஆண்டின் கண்டறியப்பட்ட 8643 எண்ணிக்கையில், பின்வரும் நிபந்தனைகளின் அடிப்படையில், ஏற்கனவே அனுமதி வழங்கப்பட்டுள்ள 1000 இடைநிலை ஆசிரியர் பணியிடங்களுடன் கூடுதலாக 500 இடைநிலை ஆசிரியர் காலிப்பணியிடங்களை ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் நிரப்பிட தொடக்கக் கல்வி இயக்குநருக்கு அனுமதியளித்து அரசு ஆணையிடுகிறது.
(a) ஒருங்கிணைந்த நிதி மற்றும் மனித வள மேலாண்மை அமைப்பால் (IFHRMS) அனுமதிக்கப்பட்ட அளவைவிட உபரியாக உள்ள இடைநிலை ஆசிரியர் பணியிடங்களை, அதிகமாக காலியாக உள்ள மாவட்டங்களில் 100க்கும் மேற்பட்ட மாணவர்கள் எண்ணிக்கையுடைய பள்ளிகளுக்கு பணிநிரவல் (deployment) செய்யப்பட வேண்டும்.
(b) தற்போது இடைநிலை ஆசிரியர் 1500 பணியிடங்களை நிரப்பிக் கொள்ள அனுமதிக்கப்பட்டதில் தேர்வாகும் தேர்வர்களை பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் அதிகமாக காலியாகவுள்ள மாவட்டங்களில் முன்னுரிமை அடிப்படையில் நியமனம் செய்யப்பட வேண்டும்.
(c) அவ்வாறு நியமனம் செய்யப்படும் முன்னுரிமை மாவட்டங்களில் தேர்வர்களை முதலில் நியமனம் செய்யும் போதே குறைந்தபட்சம் 5 ஆண்டுகள் இம்மாவட்டங்களில் பணிபுரிய வேண்டும் எனும் நிபந்தனையை நியமன ஆணையில் குறிப்பிட்டு நியமனம் செய்யப்பட வேண்டும்.
4. இவ்வாணை நிதித்துறையின் அ.சா.எண்.13662/நிதித்துறை/2023, நாள் 11.12.2023-ல் பெறப்பட்ட இசைவுடன் வெளியிடப்படுகிறது என பள்ளிக்கல்வித்துறை முதன்மைச் செயலாளர் குமரகுருபரன் உத்தரவிட்டுள்ளார்.