40 ஆண்டு ஆச்சு! தங்கம் தென்னரசு சின்ன குழந்தை! இந்த அழையா விருந்தாளியை மறந்துட்டாரா? அன்புமணி கேள்வி
40 ஆண்டு ஆச்சு! தங்கம் தென்னரசு சின்ன குழந்தை! இந்த அழையா விருந்தாளியை மறந்துட்டாரா? அன்புமணி கேள்வி
29.07.2023 , கடலூர்
என்எல்சியை எதிர்த்து நாங்கள் நேற்று இன்றைக்கு போராடவில்லை, அமைச்சர் தங்கம் தென்னரசு நிஜார் போட்டுக் கொண்டு ஸ்கூல் போன காலத்திலிருந்தே போராடி வருகிறோம் என எம்பி அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
கடலூர் மாவட்டத்தில் என்எல்சி விரிவாக்க பணிகளுக்காக நிலம் கையகப்படுத்தப்பட்டது. இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு இவர்கள் கையப்படுத்திய இடத்தில் அறுவடைக்கு தயாராக பயிர்கள் இருந்தன.
எனினும் கால்வாய் பதிக்கும் பணிக்காக ஜேசிபி கொண்டு பச்சை பச்சேல் பயிர்களை அழித்தனர். இதனால் விவசாயிகள் கோபம் கொண்டனர். அரசியல் கட்சித் தலைவர்களும் என்எல்சியின் இந்த போக்கை கண்டித்தனர்.
அறுவடை செய்யும் வரை கூட காத்திருக்காமல் பயிர்கள் நாசம் செய்வதா என கேள்வி எழுப்பினர். மேலும் கையகப்படுத்திய நிலத்திற்கு உகந்த விலையையும் என்எல்சி கொடுக்கவில்லை என தெரிகிறது. இந்த நிலையில் நேற்று முன் தினம் என்எல்சி முற்றுகை போராட்டத்தை பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் நடத்தினார்.
அப்போது என்எல்சி அலுவலகத்திற்குள் நுழைய முயன்ற அன்புமணியை கைது செய்ய போலீஸார் முற்பட்டனர். இதனால் போலீஸாருக்கும் பாமக தொண்டர்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதையும் மீறி அன்புமணியை வேனில் ஏற்றியதால் ஆத்திரமடைந்த தொண்டர்கள் சாலை மறியல் போராட்டம் நடத்தி பேருந்துகள் மீது கல்வீசியதாக தெரிகிறது.
இந்த கூட்டத்தை கலைக்க போலீஸார் வானத்தை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர். இதையடுத்து அன்புமணி ராமதாஸை போலீஸார் கைது செய்தனர். இதனால் எதிர்ப்பு தெரிவித்த பாமகவினர் அரசு பேருந்துகள் மீது கல்வீசி தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதல் சம்பவத்தில் பாமகவினரும் போலீஸாரும் காயமடைந்தனர்.
இதுகுறித்து தங்கம் தென்னரசு கூறுகையில் அறவழியில் போராடுவதற்கு தமிழக அரசு அனுமதி வழங்கி உள்ளது. இந்த சூழ்நிலையில், சில அரசியல் கட்சிகள் போராட்டம் நடத்துவதாக அறிவித்து அறவழியில் போராட்டம் என்பதை தாண்டி அது வன்முறையாக மாறியுள்ளது. இது கண்டனத்திற்குரியது. தமிழக அரசு வன்முறையை தமிழ்நாட்டின் எந்த மூலையிலும் அனுமதிக்காது. பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் யாராக இருந்தாலும் அரசு கடுமையான நடவடிக்கையை எடுக்கும் என தெரிவித்தார்.
இந்த நிலையில் தென் மாவட்டங்களில் பாமக சார்பில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக தூத்துக்குடி சென்ற அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவரிடம் குறுகிய கால அரசியல் ஆதாயத்திற்காக வன்முறை தூண்டப்பட்டுள்ளது என அமைச்சர் தங்கம் தென்னரசு கூறியது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.
அதற்கு பதில் அளித்த மருத்துவர் அன்புமணி ராமதாஸ், நாங்கள் 40 ஆண்டுகள் என்எல்சியை எதிர்த்து போராட்டம் நடத்தி வருகிறோம். தங்கம் தென்னரசு அப்போது சின்ன குழந்தை. பள்ளிக் கூடம் படித்துக் கொண்டு நிஜார் போட்டு இருந்திருப்பார். அப்போது இருந்து நாங்கள் என்எல்சியை எதிர்த்து போராடி வருகிறோம். இது குறுகிய காலம் கிடையாது.
அன்று நிலம் வழங்கிய மக்களுக்கு இழப்பீடு கூடுதலாக கொடுக்க வேண்டும் என நாங்கள் போராடினோம். அடுத்தது வேலை வாய்ப்புக்காக போராடினோம். இதுவரை யாருக்காவது வேலை வாய்ப்பு கொடுத்தார்களா, தங்கம் தென்னரசு கொடுத்தாரா, இல்லை அவருடைய அப்பாதான் கொடுத்தாரா, இந்த கேள்வியை அவரிடமே கேளுங்கள். அமைதியான முறையில் நடந்த போராட்டத்தை தூண்டி விட்டு கலவரப்படுத்தியது காவல் துறை.
தலைமைச் செயலகத்தில் அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, எம்.ஆர்.கே.பன்னீர் செல்வம், கணேசன் ஆகியோர் தலைமைச் செயலாளராக இருந்த இறையன்பு தலைமையில் என்எல்சி தொடர்பான ஆலோசனைக் கூட்டம் நடந்த போது அழையா விருந்தாளியாக சென்ற நான் 40 நிமிடங்கள் வாதிட்டேனே அதை தங்கம் தென்னரசு மறந்துவிட்டாரா.
ஒரு விவசாய நிலத்தை அழிப்பதற்கு எதிராக போராடுவது குறுகிய அரசியலா, இவருடைய அப்பாவும் ஒரு விவசாயிதானே, சாப்பிட்டிற்கு என்ன செய்ய போகிறார்கள். திமுகவை விவசாயிகளுக்கு எதிரான அரசு என சொல்லிவிடலாமா என கேள்வி எழுப்பினார் அன்புமணி.
எங்கள் WhatsApp குழுவில் இணையுங்கள்