கடலூரில் 175 பள்ளி வாகனங்களை வட்டார போக்குவரத்து அதிகாரிகள் ஆய்வு செய்தார்.
கடலூர் மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மாணவர்களை ஏற்றிக்கொண்டு வருவதற்காக தனியார் பள்ளிகள் வாகனங்களை பயன்படுத்துகிறார்கள். அந்த வகையில் மாணவர்களை ஏற்றிச் செல்வதற்காக கடலூர், நெய்வேலி, பண்ருட்டி போன்ற வட்டார போக்குவரத்து கழகத்துக்குட்பட்ட 86 பள்ளிகளில் 280 வாகனங்கள் இயக்கப்படுகின்றன.
இந்நிலையில் அந்த வாகனங்கள், மாணவர்கள் பயணம் செய்வதற்கு ஏற்றதாக உள்ளதா? என்று ஆய்வு செய்ய வட்டார போக்குவரத்து அதிகாரிகள் முடிவு செய்து கடலூர், நெய்வேலி, பண்ருட்டி உள்ளிட்ட பகுதிகளில் உள்ள தனியார் பள்ளிக்கூடங்களில் பயன்படுத்தப்படும் 175 வாகனங்களை முதற்கட்டமாக மஞ்சக்குப்பம் மைதானத்தில் மாவட்ட ஆட்சியர் அருண் தம்புராஜ் பள்ளி வாகனங்களை பார்வையிட்டு ஆய்வு பணியை துவக்கி வைத்தார்.
இந்த ஆய்வின் போது வாகனங்கள் முறையாக தகுதிச்சான்று பெற்றிருக்கின்றனவா? விபத்து சமயங்களில் மாணவர்கள் அவசரமாக வெளியேற வாகனங்களில் அவசர வழி உள்ளதா? மாணவர்கள் வெளியே தலையை நீட்டுவதை தடுக்க ஜன்னல் கம்பிகள் நெருக்கமாக இருக்கிறதா? டிரைவர் கேபின் தனியாக அமைக்கப்பட்டுள்ளதா? கதவுகளுக்கு பூட்டு உள்ளதா?, வேக கட்டுப்பாட்டு கருவி பொருத்தப்பட்டுள்ளதா?, ஜி.பி.எஸ். கருவியுடன் சி.சி.டி.வி. கேமரா பொருத்தப்பட்டுள்ளதா? என ஆய்வு செய்யப்பட்டது.
இதனிடையே வாகனங்களில் விபத்து நேரங்களில் தீ விபத்து ஏற்பட்டால் அதை எவ்வாறு அணைப்பது என தீயணைப்பு துறையினர் செய்முறை விளக்கம் செய்து காண்பித்தனர்.
இந்த ஆய்வில் கடலூர் கோட்டாட்சியர் அபிநயா, துணை கண்காணிப்பாளர் பிரபு, வட்டாரப் போக்குவரத்து அலுவலர் அருணாச்சலம், மோட்டார் வாகன ஆய்வாளர்கள் விஜய், ரவிச்சந்திரன், பிரான்சிஸ் ஆகியோர் தொடர்ந்து ஆய்வு மேற்கொண்டனர்.