“வளர்ச்சி திட்ட பணிகளை அரசு முதன்மை செயலாளர் ஆய்வு” குடிநீர் தட்டுப்பாடு தடுக்க அலுவலர்களுக்கு அறிவுறுத்தல்
திருவண்ணாமலை, மே 9: திருவண்ணாமலை மாவட்டத்தில் நடைபெறும் வளர்ச்சி திட்ட பணிகளை அரசு முதன்மைச் செயலாளர் தீரஜ்குமார் ஆய்வு நடத்தினார். அப்போது, கோடைகால குடிநீர் தட்டுப்பாடு ஏற்படாமல் தடுக்க அலுவலர்கள் தனி கவனம் செலுத்த வேண்டும் என கேட்டுக்கொண்டார். அரசின் திட்டங்களின் செயல்பாடுகள் மற்றும் முன்னேற்றங்களை ஆய்வு செய்வதற்காக ஒவ்வொரு மாவட்டத்திற்கும் கண்காணிப்பு அலுவலர்களை தமிழ்நாடு அரசு நியமித்துள்ளது. அதன்படி, திருவண்ணாமலை மாவட்டத்திற்கான கண்காணிப்பு அலுவலராக அரசு முதன்மை செயலாளர் தீரஜ்குமார் நியமிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில், அரசு முதன்மைச் செயலாளர் தீரஜ்குமார் தலைமையில், திருவண்ணாமலை மாவட்டத்தில் நடைபெறும் அரசு திட்டப் பணிகளின் முன்னேற்றம் குறித்தகண்காணிப்பு குழு ஆய்வு கூட்டம் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்தது. கலெக்டர் பாஸ்கர பாண்டியன் முன்னிலை வகித்தார். டிஆர்ஓ பிரியதர்ஷினி, கூடுதல் கலெக்டர் ரிஷப், செய்யாறு உதவி கலெக்டர் பல்லவி வர்மா உள்ளிட்ட பல்வேறு துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர். இந்த ஆய்வு கூட்டத்தில், வேளாண்மைத்துறை மூலம் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டத்தின் கீழ் செயல்படுத்தப்படும் பணிகள் மற்றும் பல்வேறு திட்டங்கள் குறித்தும், வேளாண் உபகரணங்கள், உயிர் உரங்கள் விவசாயிகளுக்கு விநியோகம் செய்வது குறித்தும், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை சார்பில் செயல்படுத்தப்படும் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டம் குறித்தும் ஆய்வு நடத்தினர். மேலும், முதலமைச்சரின் கிராம சாலை மேம்பாட்டு திட்டம், குழந்தை நேய பள்ளி உட்கட்டமைப்பு மேம்பாட்டு திட்டம், பள்ளி உட்கட்டமைப்பு மேம்பாட்டு திட்டம், நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை மூலம் கலைஞர் நகர்புற மேம்பாட்டு திட்டத்தின் கீழ் செயல்படுத்தப்படும் பணிகள், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை மூலமும் இ-சேவை மையத்தின் மூலமும் 20 வகையான சான்றிதழ் வழங்கும் பணிகள், பள்ளி கல்வி துறை மூலம் நீண்ட நாட்களாக பள்ளிக்கு வருகை புரியாத மாணவர்களை மீண்டும் பள்ளிக்கு வரவழைப்பது தொடர்பாக மேற்கொள்ளப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்து துறைவாரியாக ஆய்வு செய்தார். மேலும், சிறப்பு செயலாக திட்டத்தின் மூலம் கலைஞர் மகளிர் உரிமை திட்டம், நான் முதல்வன் திட்டம், சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறை மூலம் முதலமைச்சரின் காலை உணவு திட்டம் மற்றும் புதுமை பெண் திட்டம், சுகாதாரம் மற்றும் மக்கள் நல்வாழ்வு துறை சார்பில் செயல்படுத்தப்படும் மக்களை தேடி மருத்துவம். முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டுத்திட்டம் ஆகிவை குறித்து ஆய்வு செய்தார். மேலும், அவர் நகராட்சிகள் மற்றும் கிராம ஊராட்சிகளில் செயல்படுத்தப்படும் குடிநீர் திட்டங்களை குறித்து தனித்தனியே ஆய்வு செய்தார். கோடைகாலத்தில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படாமல் தடுக்க அதிகாரிகள் தனி கவனம் செலுத்த வேண்டும் என்றும் உத்தரவிட்டார்.