z
சென்னை: பொதுப்பணித்துறையின் சார்பில் சென்னை ராஜிவ் காந்தி அரசு பொது மருத்துவமனை வளாகத்தில் ₹65 கோடியில் நரம்பியல் துறைக்கு புதிய கட்டிடம் விரைவில் மக்கள் பயன்பாட்டிற்கு வர உள்ளது. சென்னை ராஜிவ் காந்தி அரசு பொது மருத்துவமனை தெற்கு ஆசியாவிலேயே மிகப்பெரிய அரசு மருத்துவமனையாகும். பழமையான இந்த மருத்துவமனையில் அனைத்து வகை நோய்களுக்கும் தரமான மருத்துவ சிகிச்சைகள் இலவசமாக அளிக்கப்படுகின்றன. 2,500 படுக்கை வசதிகளுடன் கூடிய இந்த அரசு மருத்துவமனையில் 10,000 முதல் 15,000 பேர் புறநோயாளிகளாக வந்து சிகிச்சை பெறுகிறார்கள்.மருத்துவ துறையில் இந்தியாவிலேயே தலைசிறந்து விளங்கும் தமிழ்நாட்டின் தலைநகரில் அமையப்பெற்றுள்ள சென்னை ராஜிவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் அனைத்து மருத்துவ துறைகளும் சிறப்பாக செயல்பட்டு வருகின்றன. இந்த மருத்துவமனைக்கு மேலும் பெருமை சேர்க்கின்ற வகையில், முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவுரையின்படி தமிழ்நாடு சட்டமன்ற பேரவையில் சென்னை ராஜிவ் காந்தி அரசு பொது மருத்துவமனை வளாகத்தில் நரம்பியல் துறைக்கான அதிநவீன வசதிகளுடன் கூடிய புதிய கட்டிடம் ₹65 கோடி மதிப்பீட்டில் கட்டப்படும் என்று மருத்துவம் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சரால் அறிவிக்கப்பட்டது. இந்த அறிவிப்பினை விரைந்து செயல்படுத்திடும் பொருட்டு 65 கோடி ரூபாய் அறிவித்து முதல்வர் உத்தரவிட்டார்.