“அசத்திய சென்னை மாநகராட்சி பள்ளி மாணவர்கள்”.. 33 சென்டம்.. 79% தேர்ச்சி!
சென்னை: சென்னை மாநகராட்சி பள்ளிகளில் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் 79.11 சதவீதம் மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். 33 பேர் வெவ்வேறு பாடங்களில் சென்டம் அடித்துள்ளனர்.
10ம் வகுப்பு பொதுத்தேர்வு கடந்த மார்ச் 26ஆம் தேதி தேதி தொடங்கி ஏப்ரல் 8ஆம் தேதி வரை நடந்தது. இந்தத் தேர்வை தமிழ்நாடு, புதுச்சேரியைச் சேர்ந்த 8 லட்சத்து 94 ஆயிரத்து 264 மாணவ மாணவியர் எழுதினர். பொதுத் தேர்வுக்காக தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் 4,107 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டன. தேர்வு எழுதிய மொத்த மாணவ மாணவியரில், 4 லட்சத்து 47 ஆயிரத்து 203 பேர் மாணவர்கள். 4 லட்சத்து 47 ஆயிரத்து 61 பேர் மாணவியர். தமிழ்நாட்டில் 10ம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் இன்று காலை 9.30 மணிக்கு வெளியானது. தேர்வு எழுதியவர்களில் 91.55 சதவீதம் பேர் தேர்ச்சி அடைந்துள்ளனர். அதாவது தேர்வு எழுதிய 8 லட்சத்து 94 ஆயிரத்து 264 மாணவ மாணவியர்களில் 8 லட்சத்து 18 ஆயிரத்து 743 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். சென்னை மாநகராட்சி கல்வித் துறையின் கீழ், 206 தொடக்கப் பள்ளிகள், 130 நடுநிலைப் பள்ளிகள், 46 உயர்நிலைப் பள்ளிகள் மற்றும் 35 மேல்நிலைப் பள்ளிகள் என மொத்தம் 417 பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன. இந்த பள்ளிகளில் 1.2 லட்சம் மாணவர்கள் பயின்று வருகின்றனர். சென்னை மாநகராட்சிப் பள்ளிகளைச் சேர்ந்த 1.20 லட்சம் மாணவர்களில் 7,311 மாணவர்கள் இந்த கல்வியாண்டிற்கான 10ஆம் வகுப்பு பொதுத் தேர்வை எழுதினர். இதில், 5,784 மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். அதாவது, 79.11 சதவீதம் மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர் சென்னை மாநகராட்சி பள்ளிகளில் கடந்த ஆண்டு 79.6 சதவீதம் மாணவர்கள் 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் தேர்ச்சி பெற்றிருந்தனர். இந்த முறை மாநகராட்சி பள்ளிகளில் தேர்ச்சி சதவீதம் 0.49 சதவீதம் குறைந்துள்ளது. முன்னதாக, கடந்த 2021-22ல் சென்னை மாநகராட்சி பள்ளிகளில் 10ஆம் வகுப்பு தேர்ச்சி சதவீதம் 76.1% ஆக இருந்தது. அதற்கு முன்னதாக கொரோனா பரவல் சமயத்தில் 2019-20 மற்றும் 2020-21ல் தேர்ச்சி சதவீதம் 100 ஆக இருந்தது குறிப்பிடத்தக்கது. சென்னை மாநகராட்சி பள்ளிகளைப் பொறுத்தவரை, இந்த ஆண்டு 451 மதிப்பெண்களுக்கு மேல் 192 பேரும், 401 முதல் 450 மதிப்பெண்கள் வரை 601 பேரும், 351 முதல் 400 மதிப்பெண்கள் வரை 917 பேரும் பெற்றுள்ளனர்.
மேலும், கணிதத்தில் 24 பேரும், அறிவியலில் 4 பேரும், சமூக அறிவியலில் 5 பேரும் என 33 பேர் பல்வேறு பாடங்களில் 100க்கு 100 மதிப்பெண் பெற்றுள்ளனர். கடந்த ஆண்டு மூன்று மாணவர்கள் மட்டுமே சென்டம் பெற்ற நிலையில், இந்த ஆண்டு சென்டம் எடுத்த மாணவர்களின் எண்ணிக்கை பெரிய அளவில் உயர்ந்துள்ளது.