தேசிய சினிமா விருதுகளில் மாற்றம்!
தேசிய சினிமா விருதுகளில் இந்திரா காந்தி, நர்கீஸ் தத் ஆகியோரது பெயர்கள் நீக்கப்பட்டுள்ளன. இதுபோன்ற புதிய மாற்றங்கள் அமல்படுத்தப்பட்டுள்ளன.
2022-ம் ஆண்டுக்கான தேசிய சினிமா விருதுகள் இன்னும் வழங்கப்படவில்லை. அந்த விருதுகளில் செய்யப்பட வேண்டிய மாற்றங்கள் குறித்து பரிந்துரைப்பதற்காக மத்திய தகவல் ஒலிபரப்பு அமைச்சகம் ஒரு குழுவை அமைத்தது.மத்திய தகவல் ஒலிபரப்பு அமைச்சக கூடுதல் செயலாளர் நீரஜா சேகர் தலைமையிலான அக்குழுவில், பிரபல டைரக்டர்கள் பிரியதர்ஷன், விபுல் ஷா, சென்சார் போர்டு தலைவர் பிரசூன் ஜோஷி, ஒளிப்பதிவாளர் எஸ்.நல்லமுத்து உள்ளிட்டோர் இடம்பெற்றனர்.
இந்த குழு, கடந்த டிசம்பர் மாதம் தனது பரிந்துரைகளை அளித்தது. அதன்பிறகு, 2022-ம் ஆண்டின் தேசிய விருதுகளுக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டன. கடந்த மாதம் 30-ந் தேதியுடன் விண்ணப்பங்கள் பெறுவது முடிவடைந்தது.
குழுவின் பரிந்துரைப்படி, தேசிய விருதுகளில் ஏராளமான மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. ‘இயக்குனரின் சிறந்த அறிமுக படத்துக்கான இந்திரா காந்தி விருது’ என்ற விருதில் முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி பெயர் நீக்கப்பட்டுள்ளது. அந்த விருது, ‘இயக்குனரின் சிறந்த அறிமுக படத்துக்கான விருது’ என்று மாற்றப்பட்டுள்ளது.
இதுவரை தயாரிப்பாளருக்கும், இயக்குனருக்கும் பகிர்ந்து அளிக்கப்பட்ட விருது பணம், இனிமேல் முழுமையாக இயக்குனருக்கு மட்டும் அளிக்கப்படும். ‘தேசிய ஒருமைப்பாட்டுக்கான நர்கீஸ் தத் விருது’ எ்னற விருதில் பழம்பெரும் நடிகை நர்கீஸ் தத் பெயர் நீக்கப்பட்டுள்ளது. ‘தேசிய, சமூக, சுற்றுச்சூழல் கோட்பாடுகளை வலியுறுத்தும் சிறந்த படம்’ என்று விருதின் பெயர் மாற்றப்பட்டுள்ளது.
திரையுலக ஆளுமைகளுக்கு வழங்கப்படும் ‘தாதாசாகேப் பால்கே’ விருதுக்கான பரிசுத்தொகை ரூ.10 லட்சத்தில் இருந்து ரூ.15 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது.
அதுபோல், பல்வேறு பிரிவுகளில் வழங்கப்படும் தங்கத்தாமரை விருதுக்கான பரிசுத்தொகை ரூ.3 லட்சமாகவும், வெள்ளித்தாமரை விருதுக்கான பரிசுத்தொகை ரூ.2 லட்சமாகவும் உயர்த்தப்பட்டுள்ளது. சிறந்த அனிமேஷன் படம், சிறந்த ஸ்பெஷல் எபெக்ட்ஸ் படம் ஆகியவை ‘சிறந்த ஏ.வி.ஜி.சி. படம்’ என்ற ஒரே விருதாக இணைக்கப்பட்டுள்ளன.சிறந்த ஒலிப்பதிவுக்கான விருது, சிறந்த ஒலி வடிவமைப்புக்கான விருதாக மாற்றப்பட்டுள்ளது. அதற்கான பரிசுத்தொகை ரூ.50 ஆயிரத்தில் இருந்து ரூ.2 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது.
சிறந்த இசை இயக்கத்துக்கான விருது, சிறந்த பின்னணி இசை விருதாக மாற்றப்பட்டுள்ளது. சிறப்பு ஜூரி விருது நீக்கப்படுகிறது. திரைப்படம் அல்லாத பிரிவில், சில பிரிவுகள் நீக்கப்பட்டுள்ளன. வேறு பிரிவுகள் ஒன்றாக இணைக்கப்பட்டுள்ளன. ‘குடும்ப அம்சங்கள் நிறைந்த சிறந்த படம்’ என்ற விருது நீக்கப்பட்டுள்ளது. ‘சிறந்த திரைக்கதை’ என்ற புதிய விருது அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
மத்திய அரசு வெளியிட்ட அறிவிப்பாணையில் இத்தகவல்கள் கூறப்பட்டுள்ளன.