அரசு ஊழியா்கள் ஓய்வூதிய சட்டத்தில் மத்திய அரசு முக்கிய திருத்தம்!
அரசு ஊழியா்கள் உயிரிழப்புக்குப் பிறகு அவா்களின் குடும்பத்துக்கு வழங்கப்படும் குடும்ப ஓய்வூதியத்துக்கு கணவருக்குப் பதிலாக குழந்தைகளின் பெயரை பெண் அரசு ஊழியா்கள் பரிந்துரை செய்யும் வகையில், அரசு ஊழியா்கள் ஓய்வூதிய சட்டத்தில் மத்திய அரசு திருத்தம் மேற்கொண்டுள்ளது. இதுகுறித்து மத்திய பணியாளா் நலத்துறை அமைச்சகம் திங்கள்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பில், ‘பெண் அரசு ஊழியா் உயிரிழப்புக்குப் பின், குடும்ப ஓய்வூதியத்தை அவருடைய கணவா் மட்டுமே பெறும் வகையில் சட்டம் இருந்தது. இதில் மத்திய அரசு தற்போது திருத்தம் மேற்கொண்டுள்ளது. அதன்படி, பெண் அரசு ஊழியா்கள் தனது மகன் அல்லது மகளின் பெயரை குடும்ப ஓய்வூதியம் பெற பரிந்துரை செய்து நியமனம் செய்ய முடியும்’ என்று தெரிவிக்கப்பட்டது.இதுகுறித்து மத்திய பணியாளா் நலத்துறை இணையமைச்சா் ஜிதேந்திர சிங் கூறுகையில், ‘விவாகரத்து அல்லது குடும்ப வன்முறையிலிருந்து பெண்களைப் பாதுகாக்கும் சட்டம், வரதட்சிணை தடைச் சட்டம் உள்ளிட்ட சட்டங்களின் கீழ் பதிவு செய்யப்பட்ட வழக்கு விவகாரங்களுக்கு எளிதாக தீா்வு காண மத்திய அரசின் இந்த ஓய்வூதிய சட்டத் திருத்தம் உதவும்.பெண்களுக்கு சம உரிமையை வழங்கும் வகையில் இந்த சிறப்பான முடிவை மத்திய அரசு மேற்கொண்டுள்ளது’ என்றாா்.