லட்சியக் கனவு காண்போம்.. கோடிக்கணக்கான இளைஞர்களின் ரோல் மாடல் அப்துல் கலாம் நினைவு நாள் இன்று!
27.07.2023
லட்சியக் கனவு காணுங்கள் என இளைஞர்களுக்கும், மாணவர்களுக்கும் உரமூட்டிய மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் அவர்களின் நினைவு நாள் இன்று. அவரது நினைவு நாளில் அவரது கனவை நிறைவேற்றி இந்தியாவை பல துறைகளிலும் முன்னேற்றுவோம் என உறுதி ஏற்போம்.
கோடிக்கணக்கான இந்திய இளைஞர்களின் கனவு நாயகனாகத் திகழும் முன்னாள் குடியரசுத் தலைவர் ஏவுகணை நாயகன் டாக்டர் ஏபிஜே அப்துல் கலாமின் 8ஆம் ஆண்டு நினைவு நாள் இன்று அனுசரிக்கப்படுகிறது. எளிய பின்னணியில் இருந்து வந்து இந்தியாவின் மிக உயரிய பதவியை அலங்கரித்த அப்துல் கலாமின் நினைவை இன்றைய நாளில் போற்றுவோம்.
1931ஆம் ஆண்டு, அக்டோபர் மாதம் 15 ஆம் நாள் இராமநாதபுரம் மாவட்டத்தின் இராமேஸ்வரத்தில் பிறந்தவர் அப்துல் கலாம். அங்குள்ள தொடக்கப் பள்ளியில் தனது பள்ளிப்படிப்பை தொடங்கிய அவர், பள்ளிக் காலத்திலேயே குடும்பச் சூழல் கருதி, வீடுகளில் செய்தித்தாள் போடுவது போன்ற பணிகளை மேற்கொண்டு, படிப்பிலும் ஆர்வத்தோடு ஈடுபட்டு வந்தார்.
திருச்சியில் உள்ள செயின்ட் ஜோசப் கல்லூரியில் இயற்பியல் படிப்பை முடித்த அப்துல் கலாம், 1955ஆம் ஆண்டு சென்னை எம்.ஐ.டி விண்வெளி பொறியியல் படிப்பு படித்தார். பின்னர் அதில் முதுகலைப் பட்டமும் பெற்றார். அதைத் தொடர்ந்து, பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனத்திலும் (DRDO) இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்திலும், (ISRO)பணியாற்றினார். இந்திய விண்வெளித் துறையின் மைல் கல்லாக உள்ள அக்னி-1 திட்டத்திற்கு வித்திட்டார் அப்துல் கலாம்.
இஸ்ரோவின் மிகப்பெரிய சாதனையாக கருதப்படும் ரோஹினி செயற்கைக்கோள் ஏவப்பட்டதில் அப்துல் கலாமின் பங்கு முக்கியமானது. இதற்காக அவருக்கு மத்திய அரசு பத்மபூஷன் விருது வழங்கி கௌரவித்தது. 1992 முதல் 1999ம் ஆண்டு வரை பிரதமரின் அறிவியல் ஆலோசகராக இருந்த அப்துல் கலாம். 1999ஆம் ஆண்டில் நடந்த பொக்ரான் 2 அணு ஆயுத சோதனையில் முக்கிய பங்கு வகித்தார் கலாம். அவருக்கு பத்ம விபூஷண் விருது வழங்கப்பட்டது.
ஐந்து ஏவுகணை திட்டங்களில் பணிபுரிந்துள்ள அப்துல் கலாம் 2002ஆம் ஆண்டு இந்தியாவின் 11வது குடியரசு தலைவராக பொறுப்பேற்றார். குடியரசுத் தலைவராவதற்கு முன்பாக, வானியல் விஞ்ஞானத்தில் அவரது திறமைகளை கௌரவிக்கும் வகையில் இந்தியாவின் மிக உயரிய பாரத ரத்னா விருதும் அவருக்கு வழங்கப்பட்டது.
தமிழ்நாட்டுக்கு மட்டுமல்லாது இந்தியாவின் பெருமையாகத் திகழ்ந்த அப்துல்கலாம், கடந்த 2015 ஆம் ஆண்டு ஜூலை 27 ஆம் தேதி ஷில்லாங்கில் மாணவர்கள் மத்தியில் உரையாடிக் கொண்டிருந்த போது மாரடைப்பு ஏற்பட்டு காலமானார். அவரது உடல் சொந்த ஊரான ராமேஸ்வரம் அருகில் உள்ள பேய்க்கரும்பு எனும் இடத்தில் அடக்கம் செய்யப்பட்டு நினைவிடம் அமைக்கப்பட்டது. இந்தியப் பொருளாதாரம் முன்னேற வேண்டும், மக்களின் வாழ்க்கைத் தரம் உயர வேண்டும், இந்தியாவை வல்லரசாக்க வேண்டும் என்பதை மூச்சாகக் கொண்டிருந்தார் அப்துல் கலம். அப்துல் கலாமின் நினைவு நாளான இன்று அரசியல் தலைவர்கள், பல்வேறு துறை பிரபலங்கள் அப்துல் கலாமை நினைவு கூர்ந்து வருகின்றனர்.
எங்கள் WhatsApp குழுவில் இணையுங்கள்