திவ்யதேசம், திருக்கூடலூர் ஆடுதுறைப் பெருமாள் கோயில்
திவ்யதேசம், திருக்கூடலூர்
ஆடுதுறைப் பெருமாள் கோயில்
ஆடுதுறைப் பெருமாள் கோயில்
புராணப்பெயர்- திருக்கூடலூர், வடதிருக்கூடலூர்,ஆடுதுறைப் பெருமாள் கோயில், சங்கம க்ஷேத்திரம்
மூலவர் – வையம் காத்த பெருமாள் (ஜகத்ரட்சக பெருமாள்)
உற்சவர் – வையம் காத்த பெருமாள்
தாயார் – பத்மாசினி தாயார் (புஷ்பவல்லி தாயார்)
தீர்த்தம் – சக்ர தீர்த்தம்
திருமங்கையாழ்வார் மங்களாசாசனம் செய்தத் தலம்,திருவையாறிலிருந்து 12 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ள தலம்.இது ஆடுதுறை பெருமாள் கோயில் மற்றும் சங்கம க்ஷேத்திரம் என்றும் அழைக்கப் படுகிறது.
கோயிலில் வரதராஜ பெருமாள், ஆண்டாள் மற்றும் ஆழ்வார்களுக்கு தனிச் சந்நதிகள் உண்டு.ராஜ கோபுரம் ஐந்து நிலைகள் கொண்டது.கோயிலுக்கு உள்ளே ஒரு மண்டபத்துத் தூண்களில் ராணி மங்கம்மா மற்றும் அவரது அமைச்சர்கள் உருவங்கள் செதுக்கப் பட்டுள்ளன.
கிழக்கு நோக்கி நின்ற திருக்கோலத்தில் காட்சி தரும் மூலவர் வையம் காத்த பெருமாள்,உய்யவந்தார்,ஜகத்ரட்சகன் என்றெல்லாம் அழைக்கப் படுகிறார்.கையில் செங்கோல் ஏந்தி காட்சி தரும் உற்சவருக்கும் அந்த பெயர்.
நந்தக முனியும், தேவர்களும் ஒன்று கூடி ஹிரண்யாக்ஷணின் கொடுமையிலிருந்து பூவுலகை காக்க மகாவிஷ்ணுவை வேண்டிய காரணத்தால் இத்தலம் திருக்கூடலூர் என்ற பெயர் பெற்றது
நந்தக முனியின் மகளான உஷை, தலப் பெருமாளுக்கு மலர்ச் சேவை செய்து வந்ததாகவும், அவள் மீது மையல் கொண்ட சோழ மன்னன் அவளை மணந்ததாகவும் அவனது அமைச்சர்களின் பொய்யான தகவல்களால், மன்னன் அவளைப் பிரிந்த்தாகவும், பின் பெருமாளே அவர்கள் மீண்டும் கூடி வாழ காரணமாக இருந்ததாகவும், அதனால் கூடலூர் என பெயர் பெற்றதாகவும் கதையும் உண்டு
காவிரி இவ்விடத்தில் திருமாலை வணங்கி பாப விமோசனம் பெற்று இழந்த பொலிவை திரும்பிப் பெற்றாள்.அம்பரீசன்,திருமங்கையாழ்வார்,பிரம்மா, கங்கை,யமுனை, சரஸ்வதி ஆகியோர் பெருமாளின் தரிசனம் பெற்று வழிபட்ட புண்ணியத் தலம் இதுவாகும்.
கொள்ளிடக் கரையில் இருந்து வெள்ளத்தால் அழிந்ததால் ஆடுதுறையில் கட்டப்பட்டு ஆடுதுறை பெருமாள் கோயில் என வழங்கப்படுகிறது