பாதுகாப்பு தரவேண்டிய போலீஸ்காரரே பெண்களிடம் நகை பறித்த அதிர்ச்சி சம்பவம்!
கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே மாக்கினாம்பட்டியில் உள்ள சாய்பாபா காலனியை சேர்ந்த தர்மசாஸ்தா மனைவி மகேஸ்வரி(58), கடந்த 27-ந் தேதி பொள்ளாச்சி நோக்கி மொபட்டில் சென்றார். ஜோதி நகரில் சென்றபோது, பின்னால் மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம ஆசாமி, அவர் அணிந்திருந்த 4 பவுன் தங்க நகையை பறித்துவிட்டு தப்பி சென்றார். இதேபோன்று கோலார்பட்டியில் உள்ள சுங்கம் பகுதியை சேர்ந்த முருகன் மனைவி அம்சவேணி(32), பொள்ளாச்சி நோக்கி மொபட்டில் சென்றார். உடுமலை ரோடு பி.ஏ.பி. அலுவலகம் அருகே சென்றபோது, பின்னால் மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம ஆசாமி, அவர் அணிந்திருந்த 2 பவுன் தங்க நகையை பறித்து சென்றார். இந்த சம்பவங்கள் குறித்த புகார்களின்பேரில் பொள்ளாச்சி நகர கிழக்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். மேலும் கோவை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பத்ரிநாராயணன் உத்தரவின் பேரில் துணை சூப்பிரண்டு ஜெயச்சந்திரன் மேற்பார்வையில் இன்ஸ்பெக்டர் வெங்கடேசன் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது. அவர்கள் நகை பறிப்பு சம்பவங்கள் நடைபெற்ற பகுதிகளில் உள்ள கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்தனர். அதில், ‘புல்லட்’ ரக மோட்டார் சைக்கிளில் வந்த ஒருவரது உருவம் பதிவாகி இருந்தது. அவர் யார்? என்று விசாரித்தபோது, மாக்கினாம்பட்டியை சேர்ந்த சபரி கிரி(41) என்பது தெரியவந்தது. மேலும் அவர் செட்டிப்பாளையம் போலீஸ் நிலையத்தில் ஏட்டுவாக பணியாற்றி வந்த நிலையில் தற்போது சி.ஐ.டி. பிரிவுக்கு மாற்றப்பட்டு இருப்பதும், வால்பாறை துணை போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் அவரது மனைவி போலீசாக பணிபுரிந்து வருவதும் கண்டுபிடிக்கப்பட்டது. அவரிடம் போலீசார் துருவி துருவி விசாரணை நடத்தினர். அப்போது, பெண்களிடம் நகை பறித்ததை அவர் ஒப்புக்கொண்டார். அதோடு கடந்த 23-ந் தேதி செட்டிபாளையம் பகுதியில் ஒரு பெண்ணிடம் 2 பவுன் தங்க நகையை பறித்ததும் இவர்தான் என்பது தெரியவந்தது. உடனே அவரை கைது செய்த போலீசார், வழிப்பறி செய்து வைத்திருந்த நகைகளை மீட்டனர். மேலும் அவருக்கு வேறு ஏதேனும் வழிப்பறி சம்பவங்களில் தொடர்பு உள்ளதா? என்று போலீசார் விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர்.