திருநங்கையை தீர்த்து கட்டிய ஐடி ஊழியர்; பரபரப்பு தகவல்!
கோவை அருகே தெலுங்குபாளையம் எல்.ஐ.சி. காலனியை சேர்ந்தவர் தனலட்சுமி (வயது 39). திருநங்கையான இவர் கடந்த 2019-ம் ஆண்டு முதல் 2021-ம் ஆண்டு வரை கோவையில் உள்ள ஒரு ஐ.டி. நிறுவனத்தில் பணியாற்றிவிட்டு மும்பை சென்றார். இருப்பினும் அவர், அவ்வப்போது கோவை வந்து செல்வது வழக்கம். இவருக்கு வடவள்ளி அருகே அன்னை இந்திரா நகரில் வசித்து வரும் மாசிலாமணி (32) என்ற திருநங்கையுடன் பழக்கம் ஏற்பட்டது. மாசிலாமணி வீட்டில் மணி என்பவரும் வாடகைக்கு வசித்து வந்தார். இந்தநிலையில் கடந்த 2 வாரத்துக்கு முன்பு மும்பையில் இருந்து கோவை திரும்பிய தனலட்சுமி, மாசிலாமணியின் வீட்டுக்கு வந்து தங்கி இருந்தார்.
கத்தியால் குத்தி கொடூர கொலை
கடந்த மாதம் 29-ந் தேதி மாசிலாமணி மற்றும் மணி ஆகியோர் வெளியே சென்றனர். அப்போது வீட்டில் தனியார் இருந்த தனலட்சுமியை மர்மநபர் ஒருவர் கொலை செய்துவிட்டு தப்பி சென்றுவிட்டார். இதுகுறித்து வடவள்ளி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில், அந்த ஆசாமி சென்னை மடிப்பாக்கம் அருகே புழுதிவாக்கத்தை சேர்ந்த சுப்பையா மகன் தினேஷ் என்கிற தினேஷ் கந்தசாமி(30) என்பதும், ஐ.டி. நிறுவனத்தில் பணியாற்றி வந்ததும் தெரியவந்தது. மதுரையில் பதுங்கி இருந்த அவரை போலீசார் கைது செய்து, கோவைக்கு அழைத்து வந்து விசாரணை நடத்தினர். விசாரணையில், அவர் தனலட்சுமியை கொலை செய்ததை ஒப்புக்கொண்டார். முருகபக்தரான தினேஷ் கோவை மருதமலை முருகன் கோவிலுக்கு கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் வந்தபோது, அவரை சிலர் தாக்கிவிட்டு அவரிடம் இருந்த பணத்தை பறித்து சென்றனர். இது தினேசுக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தியது.
தாக்குதல்
அதன்பிறகு கடந்த அக்டோபர் மாதம் அவர் மீண்டும் மருதமலைக்கு வந்தார். அப்போது அவர் தன்னை தாக்கி பணம் பறித்தவர்கள் அப்பகுதியில் உள்ளார்களா? என்று தேடிப்பார்த்தார். ஆனால் அவர்கள் சிக்கவில்லை. திருநங்கை மாசிலாமணி, மணி வசித்து வந்த வீட்டின் அருகே தினேஷ் சுற்றித்திரிந்துள்ளார். இதனை பார்த்த மாசிலாமணியும், மணியும் தினேசிடம் யார் நீ?, இங்கு ஏன் வந்தாய்? என்று கேட்டு அவரை தாக்கியுள்ளனர். அந்த சமயம் தினேசை தேடி அவரது பெற்றோரும் வந்து இருந்தனர். அவர்களை சமாதானப்படுத்த முயன்ற தினேசின் பெற்றோரை மாசிலாமணி தாக்கியதாக தெரிகிறது. அதன்பிறகு தினேசை பெற்றோர் சென்னைக்கு அழைத்து சென்று விட்டனர். தனது பெற்றோரை தனது கண்முன்னே தாக்கியதால் தினேசுக்கு மாசிலாமாணி மீது ஆத்திரம் ஏற்பட்டது. அவரை பழிவாங்க நினைத்த அவர், அந்த சமயத்திற்காக காத்து கொண்டிருந்தார்.
ஆளை மாற்றிக்கொன்ற கொடூரம்
இந்தநிலையில் கடந்த 29-ந் தேதி இரவு மாசிலாமணியை கொலை செய்யும் நோக்கத்தோடு அவரது வீட்டுக்கு தினேஷ் சென்றுள்ளார். அங்கு மாசிலாமணி, மணி ஆகியோர் இல்லை. திருநங்கை தனலட்சுமி மட்டும் தூங்கிக் கொண்டு இருந்தார். அவர்தான் மாசிலாமணி என எண்ணிய தினேஷ், கத்தியால் தனலட்சுமியின் உடலில் பல இடங்களில் சரமாரியாக குத்தி கொலை செய்தது தெரிய தெரிய வந்தது. திருநங்கை மாசிலாமணிக்கு பதிலாக தினேஷ் ஆளைமாற்றி தனலட்சுமியை கொன்ற கொடூரம் அம்பலமானது.