காதலனுடன் தனிமையில் பேச்சு; போலீஸ் எனக்கூறி மாணவியை பலாத்காரம் செய்தவருக்கு 10 ஆண்டுகள் சிறை!
திருச்சி துவாக்குடியில் என்.ஐ.டி. எனப்படும் தேசிய தொழில்நுட்ப கழகம் அமைந்துள்ளது. மத்திய அரசின் கல்வி நிறுவனமான இங்கு நாடு முழுவதும் இருந்து, 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் தங்கி படித்து வருகிறார்கள். இதில் கடந்த 2019-ம் ஆண்டு மராட்டிய மாநிலத்தை சேர்ந்த ஒரு மாணவி விடுதியில் தங்கி என்ஜினீயரிங் 3-ம் ஆண்டு படித்து வந்தார். இவரது தந்தை கல்பாக்கம் அணுமின் நிலையத்தில் பணியாற்றி வந்ததால், அங்கு தங்கி இருந்த போது மாணவிக்கு அதே பகுதியை சேர்ந்த ஒரு வாலிபரை காதலித்து வந்தார். கடந்த 2019-ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் 1-ந்தேதி விடுதியில் இருந்து வெளியேறிய மாணவி தனது காதலனுடன் சுற்றுலா சென்றார். பின்னர், திருச்சிக்கு 4-ந்தேதி அதிகாலை 3 மணிக்கு திரும்பிய அவர்கள் என்.ஐ.டி. அருகே உள்ள பஸ்நிறுத்தத்தில் பேசிக்கொண்டு இருந்தனர். அப்போது, அங்கு வந்த வாலிபர் ஒருவர், தன்னை ஊர்க்காவல் படை வீரர் என்று கூறி அறிமுகப்படுத்திக்கொண்டு அவர்களிடம் விசாரித்துள்ளார். பின்னர், மாணவியின் காதலனை விரட்டி அடித்துவிட்டு, மாணவியை கல்லூரி விடுதியில் விடுவதாக கூறி தனது மோட்டார் சைக்கிளில் ஏற்றிச்சென்றார். அப்போது மாணவி போதையில் இருந்ததால் அவரால் எந்த எதிர்ப்பும் காட்ட முடியவில்லை. இதை தனக்கு சாதகமாக பயன்படுத்திய அந்த வாலிபர், மாணவியை விடுதிக்கு அழைத்து செல்லாமல் கல்லூரி வளாகத்துக்குள் இருந்த யூகலிப்டஸ் மரக்காட்டிற்குள் அழைத்துச்சென்று, பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதில் படுகாயம் அடைந்த மாணவியை அங்கேயே விட்டுவிட்டு அந்த வாலிபர் தப்பி ஓடிவிட்டார். பின்னர் மாணவி நடந்த சம்பவம் குறித்து தனது நண்பர்களுக்கு தகவல் கொடுத்துள்ளார். அவர்கள் மாணவியை மீட்டு அருகில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். பின்னர் இதுகுறித்து மாணவி கொடுத்த புகாரின் பேரில் துவாக்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். பின்னர், கல்லூரி வளாகத்தில் உள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்த போது, மாணவியை மோட்டார் சைக்கிளில் கடத்திச்சென்றது, திருவெறும்பூர் அருகே வாழவந்தான்கோட்டை பெரியார்நகரை சேர்ந்த மணிகண்டன்(வயது 30) என்பதும், அவர் மீது திருட்டு வழக்குகள் நிலுவையில் இருப்பதும் தெரியவந்தது. இதைத்தொடர்ந்து தப்பி ஓடிய மணிகண்டனை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். இதுதொடர்பான வழக்கு திருச்சி மகிளா கோர்ட்டில் நடைபெற்று வந்தது. போலீசார் தரப்பில் சிறப்பு அரசு வக்கீல் ஜாகீர்ஹுசேன் ஆஜராகி வாதாடினார். இந்த வழக்கில் சாட்சி விசாரணை நிறைவடைந்ததை தொடர்ந்து நேற்று தீர்ப்பு கூறப்பட்டது. அதில், குற்றம் சாட்டப்பட்ட மணிகண்டனுக்கு 10 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.25 ஆயிரம் அபராதமும் விதித்து நீதிபதி ஸ்ரீவத்சன் தீர்ப்பு கூறினார். அத்துடன் அபராதத்தை கட்ட தவறினால் கூடுதலாக 6 மாதம் சிறை தண்டனை அனுபவிக்கவும் உத்தரவிட்டார். இதைத்தொடர்ந்து மணிகண்டன் பலத்த பாதுகாப்புடன் அழைத்துச் செல்லப்பட்டு திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.