சமூக ஆர்வலர்கள் தாக்குதல்
நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டை மார்கெட் பகுதியை சார்ந்த சமூக ஆர்வலர் திரு பெர்டின் ராயர் மிகச் சிறந்த தகவல் ஆர்வலர், மேலும் மீனவர்கள் உரிமைகளுக்காக தொடர்ந்து போராடி வருபவர். கனிம வளங்கள் மற்றும் கொள்ளை சட்ட விரோத கட்டிடங்களுக்கு எதிராக பல்வேறு சட்ட ரீதியான செயல்பாடுகளை தொடர்ந்து செய்து வருபவர். நெல்லை மாநகராட்சியில் தகவல் உரிமை சட்டம் மூலம் பல்வேறு முறைக் கேடுகள் வெளிவந்தது இவரது சட்டப் போராட்டத்தின் விளைவாக கனிம வள கொள்ளைக்கு எதிராக இவரால் தொடரப்பட்ட வழக்குகள் இரண்டு தற்பொழுது நீதிமன்ற விசாரணைக்கு வர உள்ளது. நீதிமன்றத்தில் ஆஜராகி கனிம கொள்ளைக்கு எதிராக சமூக ஆர்வலர் பெர்டின்ராயர் நீதிமன்றத்தில் சாட்சியம் அளிக்கவுள்ள நிலையில், கடந்த 03-05-2024 காலை பாளையங்கோட்டை அரசு மருத்துவமனை அருகில் இரண்டு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த பொழுது அவரை சமூக விரோதிகள் தாக்கி அரிவாள் போன்ற கொடூரமான ஆயுதங்களை பயன்படுத்தி கொலைவெறி தாக்குதல் நடத்தியதில் பலத்த காயமடைந்து தற்பொழுது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றார். தமிழகம் முழுவதும் சமூக ஆர்வலர்கள்,சமூக செயல்பாட்டாளர்கள், தகவல் ஆர்வாளர்கள் மற்றும் பொது நலனுக்காக போராடுபவர்கள் தொடர்ந்து தாக்குதலுக்கு உள்ளாகுவதும் மிரட்டப்படுவதும் வாடிக்கையாக இருந்து வருகிறது. இதுபோன்ற தாக்குதல்களை தமிழக அரசு சாதாரணமாக எடுத்துக் கொள்ளாமல் சிறப்பு கவனம் செலுத்தி சமூக ஆர்வலர்களை பாதுகாக்க நேர்மையான நியாயமான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், சமூக ஆர்வலர்க பெர்டின் ராயர் அவர்களை தாக்கிய சமூக விரோதிகளை உடனடியாக குண்டத்தடை சட்டத்தில் கைது செய்ய வேண்டும் என்றும், தமிழகத்தில் இனி ஒரு சமூக ஆர்வலர் தாக்கப்பட்டார் என்கின்ற தகவல் வராத அளவிற்கு மிகக் கடுமையான சட்ட நடவடிக்கைகளை தமிழக அரசு எடுக்க வேண்டும் என்றும் தகவல் உரிமைச் சட்டம் ஆர்வலர்கள் அமைப்பாளர் பத்து ரூபாய் இயக்கம் சார்பில் கேட்டுக்கொள்கின்றோம் என்று அந்த இயக்கத்தின் பொது செயலாளர் Dr நல்வினை விஸ்வராஜு வழக்கறிஞர் தனது அறிக்கையில்கூறியுள்ளார்.