அடுத்த 5 நாட்களுக்கு.. தமிழகத்தில் இடி, மின்னலுடன் கொட்டப்போகும் மழை! வானிலை மையம் அறிவிப்பு
சென்னை: தமிழகத்தில் கடந்த சில நாட்களாக வெயில் தீவிரமடைந்து வரும் நிலையில், இன்று முதல் அடுத்த 5 நாட்களுக்கு மாநிலத்தின் பல்வேறு இடங்களில் இடி மின்னலுடன் மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்திருக்கிறது.
இது குறித்து விடுக்கப்பட்டுள்ள அறிவிப்பில், “மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, இன்று முதல் 6ம் தேதி வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 30 கிலோமீட்டர் முதல் 40 கிலோமீட்டர் வரை) லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
7ம் தேதி தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 30 கிலோமீட்டர் முதல் 40 கிலோமீட்டர் வரை) லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நீலகிரி, கிருஷ்ணகிரி, தர்மபுரி, ஈரோடு, திருப்பத்தூர் மற்றும் வேலூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது. 8 மற்றும் 9ம் தேதிகளில் தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலையை பொறுத்த அளவில் இன்று தொடங்கி 7ம் தேதி வரை அடுத்த 3 தினங்களுக்கு தமிழக உள் மாவட்டங்களில் அதிகபட்ச வெப்பநிலையில் பெரிய மாற்றத்திற்கான வாய்ப்பு குறைவு. அதற்கு அடுத்த 2 தினங்களுக்கு அதிகபட்ச வெப்பநிலை 2° செல்சியஸ் வரை படிப்படியாக குறையக்கூடும்.
அடுத்த 5 தினங்களுக்கு, தமிழக உள் மாவட்டங்களில் ஒருசில இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை 2°-4° செல்சியஸ் இயல்பை விட அதிகமாக இருக்கக்கூடும். இன்று மற்றும் நாளை வட தமிழக உள் மாவட்டங்களில் அநேக இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை 3°-5° செல்சியஸ் இயல்பை விட மிக அதிகமாக இருக்கக்கூடும். அடுத்த 5 தினங்களுக்கு அதிகபட்ச வெப்பநிலை வட தமிழக உள் மாவட்டங்களின் சமவெளி பகுதிகளில் ஒருசில இடங்களில் 41°-44° செல்சியஸ், இதர தமிழக மாவட்டங்களின் சமவெளி பகுதிகளில் 39°-40° செல்சியஸ், கடலோர தமிழக மாவட்டங்கள், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் 36°-39° செல்சியஸ் இருக்கக்கூடும். வெப்ப அலையை பொறுத்த அளவில், இன்றும் நாளையும் வட தமிழக உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் வெப்ப அலை வீசக்கூடும். 5 மற்றும் 6ம் தேதிகளில் வட தமிழக உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் வெப்ப அலை வீசக்கூடும்.
அதிக வெப்பநிலை மற்றும் அதிக ஈரப்பதம் இருக்கும் பொழுது, தமிழக மாவட்டங்கள், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில், ஓரிரு இடங்களில் அசௌகரியம் ஏற்படலாம். சென்னை மற்றும் புறநகர் பகுதிகளை பொறுத்தவரையில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 39-40 டிகிரி செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 29-30 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும். மீனவர்களுக்கான எச்சரிக்கையை பொறுத்த அளவில் இன்று தொடங்கி 6ம் தேதி வரை தெற்கு ஆந்திர கடலோரப்பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 65 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். மேற்குறிப்பிட்ட நாட்களில் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாமென்று அறிவுறுத்தப்படுகிறார்கள்” என வானிலை ஆய்வு மையம் அறிவித்திருக்கிறது.