பொங்கல் தெகுப்பு குறித்து அண்ணாமலை பரபரப்பு குற்றச்சாட்டு!
பொங்கல் தொகுப்பில் பொதுமக்களுக்கு வழங்கப்பட்ட இலவச வேட்டியில், வழக்கமாக பயன்படுத்தி வந்த பருத்தி நூலின் அளவைக் குறைத்து விட்டு, விலை குறைவான பாலிஸ்டர் நூலை பயன்படுத்தி ஊழல் நடந்திருக்கிறது என்று கைத்தறித் துறை அமைச்சர் காந்தி மீது குற்றச்சாட்டு வைத்திருந்தோம். அதற்கு அவர், 2003-ம் ஆண்டு அரசாணையை மேற்கோள் காட்டிமக்களைத் தவறாக திசைதிருப்புகிறார். கடந்த 2003-ம் ஆண்டு அரசாணையின்படி, வேட்டியில் வெப்ட் பகுதி நெய்ய பாலிஸ்டர் நூலை பயன்படுத்தலாம். ஆனால் வார்ப் பகுதியை நெய்ய கடந்த ஆண்டு வரை 100 சதவீதம் பருத்தி நூல்தான் பயன்படுத்தப்பட்டது. ஆனால் இந்த ஆண்டு ‘வார்ப்’ பகுதி நெய்யவும், விலை குறைவான பாலிஸ்டர் நூலை பயன்படுத்தி இருக்கிறார்கள். ஒரு கிலோ ரூ.320 வரை விற்கப்படும் பருத்தி நூலை பயன்படுத்தாமல், வேண்டுமென்றே அதில் பாதி விலையான ரூ.160-க்கே கிடைக்கும் பாலிஸ்டர் நூலில் வார்ப் பகுதியை நெய்திருக்கிறார்கள். ஒரு வேட்டியில் 78 சதவீதம் பாலிஸ்டர் நூலை பயன்படுத்தியிருக்கிறார்கள். கோவையில் உள்ள ஜவுளி ஆராய்ச்சி மையத்தில் நாங்கள் சோதனை செய்ததும், வார்ப் பகுதியைத்தானே தவிர வெப்ட் பகுதியை அல்ல. இது தொடர்பான அனைத்து ஆதாரங்களுடன், தமிழ்நாடு ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு இயக்குனரகத்தில் தமிழக பா.ஜனதா சார்பில் புகார் அளிக்க உள்ளோம். அதேபோல், தி.மு.க. அரசின் நிர்வாக குளறுபடிகளால், பொதுமக்கள் அவதிக்குள்ளாவது தொடர்கிறது. கிளாம்பாக்கம் பஸ் நிலையத்தை திறந்து 40 நாட்கள் கடந்தும், இன்னும் பயணிகள் தினமும் எதிர்கொள்ளும் பிரச்சினைகளை தி.மு.க அரசு தீர்க்கவில்லை. நேற்றுமுன்தினம் (வெள்ளிக்கிழமை) இரவு, திருச்சி, தஞ்சாவூர், கும்பகோணம் உள்ளிட்ட பல்வேறு ஊர்களுக்கு செல்வதற்காக, சென்னையின் பல பகுதிகளில் இருந்து கிளாம்பாக்கம் பஸ் நிலையம் வந்த பயணிகள், ஊருக்கு செல்ல பஸ்கள் இல்லாமல் அவதிக்குள்ளாகி இருக்கின்றனர். குழந்தைகள், தாய்மார்கள், வயது முதிர்ந்தவர்கள் என 100-க்கும் அதிகமான பயணிகள் தி.மு.க. அரசின் நிர்வாக குளறுபடிகளால் தவித்துள்ளனர். சாலை மறியல் போராட்டம் செய்தும், பஸ்களை சிறைபிடித்தும் பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். கிளாம்பாக்கம் பஸ் நிலையம் முழுவதுமாக தயாராகும் வரை, பஸ்களை மீண்டும் கோயம்பேட்டில் இருந்து செயல்பட அனுமதிக்க வேண்டும். அதை விடுத்து, பூசி மொழுகும் வேலையில் பொதுமக்களை தொடர்ந்து அவதிக்குள்ளாக்கினால் நேற்றுமுன்தினம் நடந்த பொதுமக்களின் போராட்டம், சென்னை முழுக்க மிக பெருமளவில் வெடிக்கும் என தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை தனது எக்ஸ் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.