“முல்லைப் பெரியாற்றில்” புதிய அணை கட்ட முயற்சிக்கும் கேரள அரசின் நடவடிக்கை கடும் கண்டனத்திற்குரியது!
தென்மாவட்ட மக்களை வஞ்சிக்கும் கேரள அரசின் முயற்சியை ஆரம்ப நிலையிலேயே தடுத்து நிறுத்த வேண்டும். கேரள சட்டப்பேரவை கூட்டத்தொடரின் ஆளுநரின் உரையில் முல்லைப் பெரியாற்றில் புதிய அணைகட்டுவதே கரையோர பகுதிகளில் வசிக்கும் மக்களின் பாதுகாப்பிற்கு ஒரே தீர்வு எனவும், தமிழகத்துடன் சுமூக உடன்பாட்டிற்கு தேவையான அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்படும் எனவும் குறிப்பிடப்பட்டிருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இதயதெய்வம் புரட்சித் தலைவி அம்மா அவர்களின் தொடர் சட்டப் போராட்டத்தால் தேனி, மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம் மற்றும் திண்டுக்கல் மாவட்ட மக்களின் வாழ்வாதாரத்திற்கு உயிர் நாடியாக விளங்கும் முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டத்தை 142 அடியாக உயர்த்துவதற்கான உத்தரவை உச்சநீதிமன்றம் பிறப்பித்தது. உச்சநீதிமன்றம் அமைத்த கண்காணிப்பு மற்றும் நிபுணர் குழு பலமுறை மேற்கொண்ட ஆய்வில் முல்லைப் பெரியாறு பாதுகாப்பாக இருப்பதை உறுதிபடுத்திய பின்னரும் புதிய அணையை கட்டியே தீருவோம் என்ற கேரள அரசின் பிடிவாதப்போக்கை ஒருபோதும் ஏற்றுக் கொள்ள முடியாது. எனவே, புதிய அணை கட்டும் கேரள அரசின் முயற்சியை ஆரம்பநிலையிலேயே தடுத்து நிறுத்துவதோடு, உச்சநீதிமன்ற உத்தரவின்படி பேபி அணையை பலப்படுத்தி முல்லைப் பெரியாறு அணையின் நீர் மட்டத்தை 152 அடியாக உயர்த்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என தமிழக முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்களை வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன் என அம்மா மக்கள் முன்னேற்றக் கழக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தனது எக்ஸ் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.