சிறுமியை கடத்திச் சென்று பலாத்காரம் செய்த கோழி இறைச்சிக்கடை ஊழியருக்கு “20 ஆண்டுகள்” சிறை; கோர்ட் அதிரடி தீர்ப்பு!
தஞ்சையை சேர்ந்த 15 வயது சிறுமி, தஞ்சையில் உள்ள ஒரு பள்ளியில் கடந்த 2014-ம் ஆண்டு பத்தாம் வகுப்பு படித்து வந்தார். அப்போது ஆண்டு இறுதித்தேர்வு எழுதி முடித்த பின்னர் புதிய பஸ் நிலையம் அருகே உள்ள ஒரு கவரிங் கடைக்கு வேலைக்கு சென்றார். அந்த கடையின் அருகே உள்ள ஒரு கோழி இறைச்சி கடையில் தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு அருகே உள்ள உஞ்சிய விடுதியை சேர்ந்த சிவா என்ற பிரமோத்(வயது 42) வேலை பார்த்து வந்தார். அப்போது அந்த சிறுமிக்கும், சிவாவுக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டது. இந்த நிலையில் அந்த சிறுமியிடம், ஊட்டியில் தனது உறவினர் பள்ளிக்கூடம் வைத்து நடத்தி வருவதாகவும், அதில் சேர்த்து விடுவதாகவும் சிவா கூறி உள்ளார். மேலும் அந்த சிறுமியை வலுக்கட்டாயமாக ஊட்டிக்கு அழைத்துச்சென்று அங்கு அடைத்து வைத்து பாலியல் தொல்லை கொடுத்துள்ளார்.இந்த நிலையில் சிறுமியை காணவில்லை என அவருடைய தாய் தஞ்சை தெற்கு போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். புகாரின் பேரில் அப்போதைய போலீஸ் இன்ஸ்பெக்டர் மோகன்தாஸ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார். இதற்கிடையில் சிறுமி ஊட்டியில் இருப்பது தெரிய வந்ததும் போலீசார் அங்கு சென்று மாணவியை மீட்டதோடு, சிவாவை கைது செய்தனர். இந்த வழக்கு தஞ்சை போக்சோ கோர்ட்டில் நடந்து வந்தது. இந்த வழக்கில் நீதிபதி சுந்தர்ராஜன் தீர்ப்பு கூறினார். அவர் தனது தீர்ப்பில், சிவா என்ற பிரமோத்துக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.31 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார். மேலும் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு ரூ.3 லட்சம் இழப்பீடு வழங்கவும் தமிழக அரசுக்கு உத்தரவிட்டார்.