“பொதுமக்கள் அனைவரும் நிறைய குழந்தைகளை பெற்றுக்கொள்ள வேண்டும்”-மோடி வீடு கட்டி தருவார்!
ராஜஸ்தானில் கடந்த நவம்பர் மாதம் நடந்த சட்டசபை தேர்தலில் பா.ஜனதா ஆட்சியை கைப்பற்றியது. பஜன்லால் சர்மா, முதல்-மந்திரி ஆக பதவி ஏற்றார். சமீபத்தில் விரிவாக்கம் செய்யப்பட்ட அவரது மந்திரிசபையில், பாபுலால் காராடி என்பவர் மந்திரியாக பொறுப்பேற்றார். அவருக்கு பழங்குடியினர் பகுதி மேம்பாடு இலாகா ஒதுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், உதய்பூரில் வளர்ந்த பாரதம் சங்கல்ப் யாத்ரா தொடர்பான பொதுக்கூட்டம் நடந்தது. அதில், முதல்-மந்திரி பஜன்லால் சர்மா முன்னிலையில் பாபுலால் காராடி பங்கேற்றார். கூட்டத்தில், பொதுமக்களுக்கு அறிவுரை கூறும் விதமாக பாபுலால் காராடி பேசுகையில், நாட்டில் யாரும் பட்டினியுடன் தூங்க செல்லக்கூடாது என்பதும், சொந்த வீடு இல்லாமல் இருக்கக்கூடாது என்பதும் பிரதமர் மோடியின் கனவு. எனவே பொதுமக்கள் அனைவரும் நிறைய குழந்தைகளை பெற்றுக்கொள்ள வேண்டும். அந்த குழந்தைகளுக்கு பிரதமர் மோடி வீடு கட்டி தருவார். அப்புறம் என்ன பிரச்சினை? நாடாளுமன்ற தேர்தலில் பிரதமர் மோடிக்கே மக்கள் ஓட்டுப்போட வேண்டும் என்றார்.