கல்வி நிறுவனங்களுக்கு வழங்கப்படும் மதசார்பு சிறுபான்மையினர் அந்தஸ்து சான்றிதழ் இனிவருங்காலங்களில் காலம் குறிப்பிடப்படாமல் நிரந்தர சான்றிதழாக வழங்கப்படும்; முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு!
சென்னை தலைமைச் செயலகத்தில், சிறுபான்மையினர் நலன் குறித்த ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெற்றது. கூட்டத்திற்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமை தாங்கி பேசினார் அப்போது அவர் பேசியதாவது:- நமது திராவிட மாடல் அரசு, தமிழ்நாட்டில் வாழும் சிறுபான்மையினரின் நலன்களைப் பாதுகாப்பதிலும், அவர்களது சமூகப் பொருளாதார நிலையினை மேம்படுத்துவதிலும் எப்போதும் கவனமாக உள்ளது என்பதை நீங்கள் அனைவரும் நன்கு அறிவீர்கள். சிறுபான்மையின மக்களுக்கு கல்வி, வேலைவாய்ப்புகளில் சமமான வாய்ப்பை வழங்கியும், அவர்களின் சட்டப்பூர்வ உரிமைகளை உறுதிசெய்தும், அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சியை ஏற்படுத்தியும், சிறுபான்மையினருக்கு ஒரு வளமான எதிர்காலத்தினை உருவாக்குவதில் எங்களது அரசு பெரும் பங்காற்றி வருகிறது என்றால், அது மிகையல்ல. குறிப்பாகச் சொல்ல வேண்டுமென்றால், 2021-ஆம் ஆண்டு ஆட்சிக்கு வந்தது முதல், கிறிஸ்தவ தேவாலயங்களில் பணியாற்றும் உபதேசியார்கள் மற்றும் பணியாளர்கள் மேம்பாட்டுக்காக நல வாரியம் சிறுபான்மையினர் விடுதி மாணவ மாணவியர்க்கு சிறுபான்மையினர் பண்டிகை நாட்களில் சிறப்பு உணவு கரூர், மதுரை, தேனி ஆகிய மூன்று மாவட்டங்களில் ஒரு கிறிஸ்தவ உதவிச் சங்கம் கூடுதலாக துவங்கிட நிதி ஒதுக்கீடு. ஜெருசலேமுக்கு புனிதப் பயணம் செல்வதற்கு அருட் சகோதரிகள், மானியம் உயர்வு கன்னியாஸ்திரிகளுக்கு வழங்கப்படும்தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டுக் கழகத்தின் மூலம் அதிகக் கடன்கள்என நமது திராவிட மாடல் அரசின் சார்பில் கிறித்தவ மக்களுக்காக எண்ணற்ற அறிவிப்புகள் வெளியிடப்பட்டுச் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. இதற்கெல்லாம் மணிமகுடமாக, கிறித்தவர்களாக மதம் மாறிய ஆதிதிராவிடர்களுக்கும் இடஒதுக்கீடு உள்ளிட்ட சலுகைகளை வழங்கும் வகையில் இந்திய அரசியலமைப்புச் சட்டத்தைத் திருத்த வேண்டுமென தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் தனித்தீர்மானம் கொண்டு வந்து நாங்கள் நிறைவேற்றியுள்ளோம். இப்படி எண்ணற்ற திட்டங்களை முத்தமிழறிஞர் தலைவர் கலைஞர் காலம் தொட்டு, நாங்கள் சிறுபான்மையினரின் நலனைக் கருத்தில்கொண்டு திட்டங்களைத் தீட்டி, அவற்றைச் செம்மையாக, உறுதியோடு செயல்படுத்தி வருகிறோம். கிராமப்புறங்களில் உள்ள அரசின் நிதியுதவி பெறும் சிறுபான்மையினர் பள்ளிகளில் 1 முதல் 5 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கும் மாண்புமிகு முதலமைச்சரின் காலைச் சிற்றுண்டி திட்டம் விரிவாக்கம் குறித்து வரும் நிதி நிலை அறிக்கையில் சாதகமாக பரிசீலிக்கப்படும். அரசின் நிதியுதவி பெறும் சிறுபான்மையினர் பள்ளிகளில் மேற்கொள்ளப்பட வேண்டிய பணியாளர் நிர்ணயம், பணி நியமனங்களுக்கு ஒப்புதல் அளித்தல், பணியிட மாற்றங்கள் மற்றும் பதவி உயர்வுகள் குறித்த கோரிக்கைகளுக்கென தனியாக ஒரு இணையதள வசதி ஏற்படுத்தப்படும். பள்ளிக் கல்வித் துறையில், அரசு தொடக்க, நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் அனைத்து வகையான ஆசிரியர்கள் நேரடி நியமனத்திற்கான உச்ச வயது வரம்பினை பொதுப்பிரிவினருக்கு 53 எனவும், இதரப் பிரிவினருக்கு 58 எனவும் நிர்ணயித்து ஆணை வழங்கப்பட்டுள்ளது. இந்த உச்ச வயது வரம்பு அரசின் நிதியுதவி பெறும் சிறுபான்மையினர் பள்ளிகளுக்கும் விரிவுபடுத்துவதற்கான சாத்தியக்கூறுகள் ஆராயப்படும். சிறுபான்மையினரின் கல்லூரி ஆசிரியர் பணியிடங்களில், யு.ஜி.சி. மற்றும் அரசு விதிகளுக்குட்பட்டு தேர்வு செய்யப்பட்ட ஆசிரியர்களுக்கு, பல்கலைக்கழகம் மற்றும் அரசால் மூன்று மாத காலத்திற்குள் நியமன அங்கீகாரம் அளிக்கப்படும். மாநில அரசால் கல்வி நிறுவனங்களுக்கு வழங்கப்படும் மதசார்பு சிறுபான்மையினர் (Religious Minority) அந்தஸ்து சான்றிதழ் தற்போது ஐந்து ஆண்டுகளுக்கு வழங்கப்பட்டு வருகிறது. இனிவருங்காலங்களில் இச்சான்றிதழ் காலம் குறிப்பிடப்படாமல் நிரந்தர சான்றிதழாக வழங்கப்படும். சமூகநலத் துறை, ஆதி திராவிடர் நலத் துறை, மாற்றுத் திறனாளிகள் நலத் துறை ஆகிய துறைகளின் கீழ் உதவி பெறும், அரசு சாரா தொண்டு நிறுவனங்களைப் பதிவு செய்தல், உரிமங்களைப் புதுப்பித்தல், நிதியுதவி மற்றும் மானியங்களைப் பெறுவதற்கான நடைமுறைகள் ஆகியவை எளிமைப்படுத்தப்படும். இதற்கென பிரத்யேகமாக ஒரு இணையதளம் உருவாக்கப்படும் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன். இப்போது நான் குறிப்பிட்ட விவரங்களில் இடம்பெறாத உங்கள் கோரிக்கைகள் மற்றும் கருத்துகள் மீதும் அரசு உரிய கவனம் செலுத்தி அவற்றிற்கும் விரைவில் தீர்வு காணப்படும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்.உங்களது அனைத்துக் கோரிக்கைகளையும் கேட்க திறந்த மனத்தோடு இருக்கிறேன்.உங்களது பிரதிநிதியாகவே கழகத்தின் சட்டமன்ற உறுப்பினர் திரு. இனிகோ இருதயராஜ் அவர்கள் இருக்கிறார்கள். மேலும், தொடர்புடைய அரசு செயலாளர்களிடம் உங்கள் கோரிக்கைகளை வழங்கலாம். உரிய நேரத்தில் அவற்றை பரிசீலித்து, நடவடிக்கைகள் எடுக்கப்படும் என உறுதியளிக்கிறேன். திராவிட மாடல் அரசின் இந்தப் பணித் தொய்வின்றித் தொடரும் என்று கூறி, அதற்கு உங்களது ஒத்துழைப்பினைத் தொடர்ந்து தாருங்கள் எனக் கேட்டு விடைபெறுகிறேன் என்றார்.