மர்ம காய்ச்சலால் இளம் பெண் சாவு!
திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே தமுத்துப்பட்டியை சேர்ந்தவர் பிரபு (வயது 25). அவருடைய மனைவி கலையரசி (வயது 21). இவர்களுக்கு கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் ஆன நிலையில் ஒரு பெண் குழந்தை உள்ளது. இந்தநிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு கலையரசி, மர்ம காய்ச்சலால் பாதிக்கப்பட்டார். இதையடுத்து அவரை குடும்பத்தினர் சிகிச்சைக்காக வேடசந்தூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் அவர், திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இருப்பினும் அவருக்கு காய்ச்சல் பாதிப்பு குறையவில்லை. இதனையடுத்து மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனையில் கலையரசி சேர்க்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக இறந்தார். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.