டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்ட ஒரகடம் காவல் நிலைய சிறப்பு உதவி ஆய்வாளர் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு ; சோகத்தில் மூழ்கிய மாவட்ட காவல்துறை
காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் உட்கோட்டத்தில் 5 வருடங்களுக்கு மேலாக காவலராக பணியாற்றி கடந்த 2 வருடங்களாக ஒரகடம் காவல் நிலையத்தில் சிறப்பு உதவி ஆய்வாளராக பணிபுரிந்து வந்தவர் பச்சையம்மாள் (49), கடந்த 15-ம் தேதி வரை ஒரகடம் காவல் நிலையத்தில் பணியில் இருந்துள்ளார்.இந்நிலையில் கடந்த 16-ம் தேதி அவர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு, செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். 3 நாட்களாக தீவிர சிகிச்சை பிரிவில் அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. ஆனால் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார்.எந்த ஒரு சூழ்நிலையிலும் விடுமுறை எடுக்காமல், காவல் நிலையம் விட்டால் வீடு என்று தனது பணியில் சிறப்பாக பணிபுரிந்து வந்ததாக ஒரகடம் காவல் நிலையத்தில் பணியாற்றும் சக காவலர்கள் கண்ணீர் மல்க தெரிவித்தனர்.பணிக்கு வரும் போதெல்லாம் சிரித்த முகத்துடன் அனைவரிடமும் அன்பாக பழகி வந்த பச்சையம்மாளின் மறைவு, சக காவலர்களை மட்டுமின்றி, அப்பகுதி பொதுமக்களையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.சிறப்பு உதவி ஆய்வாளர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்த சம்பவம் காஞ்சிபுரம் மாவட்ட காவல்துறை வட்டாரத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.