ஒரே நாடு; ஒரே ரேஷன் கார்டு’ திட்டத்தின் கீழ், தமிழக கார்டுதாரர்கள் அதிக எண்ணிக்கையில், பிறமாநிலங்களில் உள்ள ரேஷன் கடைகளில், உணவுபொருட்களை வாங்கி பயன் பெற்று வருகின்றனர்.
மத்திய அரசு, இடம்பெயரும் தொழிலாளர் பயன் பெற ‘ஒரே நாடு, ஒரே ரேஷன் கார்டு’ திட்டத்தை செயல்படுத்தியது.
அதன் கீழ் எந்த மாநில ரேஷன் கார்டுதாரர்களும், தாங்கள் வசிக்கும் மாநிலத்தில் உள்ள ரேஷன் கடைகளில் அரிசி, கோதுமை வாங்கலாம்.
தமிழகம் 2020 அக்., 1ல் ஒரே ரேஷன் திட்டத்தில் இணைந்தது.
அத்திட்டத்தின் கீழ், தமிழக ரேஷன் கடைகளில் பிறமாநிலத்தவர்களில் கார்டு வைத்திருப்பவருக்கு, விரல் ரேகை பதிவு செய்து, கிலோ அரிசி 3 ரூபாய்க்கும்;கிலோ கோதுமை 2 ரூபாய்க்கும் வழங்கப்படுகிறது.
தமிழகத்தில் கட்டுமானம், ஹோட்டல் உட்பட, அனைத்து தொழில்களிலும் வட மாநிலங்களை சேர்ந்த 10 லட்சத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணிபுரிந்தும், ரேஷன் பொருட்களை அதிகம் வாங்குவதில்லை.
அவர்களுடன் ஒப்பிடும்போது, தமிழகத்தை சேர்ந்த கார்டுதாரர்கள், பிற மாநிலங்களில் உள்ள ரேஷன் கடைகளில், அதிக எண்ணிக்கையில் உணவு பொருட்களை வாங்கி வருகின்றனர்.
தமிழக கார்டுதாரர்கள், பிற மாநிலங்களில் ரேஷன் பொருட்களை வாங்குவதில் டில்லி முதலிடத்திலும், கேரளா இரண்டாவது இடத்திலும், மஹாராஷ்டிரா மூன்றாவது இடத்திலும் உள்ளனர்.