வடலூர் நகராட்சியில் சட்டவிரோத டூவீலர் ஸ்டாண்ட்:பல லட்சம் ரூபாய் வருவாய் இழப்பு மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை
வடலூர் நகராட்சியில் சட்டவிரோத டூவீலர் ஸ்டாண்ட்: த
பல லட்சம் ரூபாய் வருவாய் இழப்பு மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை
கடலூர் மாவட்வடலூர் நகராட்சிப் பகுதியில் எவ்வித அனுமதியுமின்றி சட்டவிரோதமாக டூவீலர் ஸ்டாண்ட் நடத்தப்பட்டு வருவதாகவும், இதனால் நகராட்சிக்குச் சேர வேண்டிய பல லட்சம் ரூபாய் வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாகவும் அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது. இச்சட்டவிரோதச் செயலைக் கட்டுப்படுத்தி, சம்பந்தப்பட்டவர்கள் மீது கடலூர் மாவட்ட ஆட்சியர் உடனடியாக கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்களும் பொதுமக்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கடலூர் மாவட்டத்தின் முக்கிய மையப் பகுதியாக வடலூர் விளங்குகிறது. இங்கு உலகப் புகழ்பெற்ற வள்ளலார் தெய்வ நிலையம், அரசு தொழிற்பயிற்சி நிலையம் (ITI), மேம்படுத்தப்பட்ட அரசு மருத்துவமனை, அரசு மற்றும் தனியார் கல்வி நிறுவனங்கள், வணிக வளாகங்கள், சிட்கோ தொழிற்பேட்டை மற்றும் வங்கிகள் அமைந்துள்ளன. இதன் காரணமாக நாள்தோறும் ஆயிரக்கணக்கான பொதுமக்களும், ஏராளமான வாகனங்களும் வடலூரைக் கடந்து செல்கின்றன.
மேலும், வடலூர் பேருந்து நிலையம் மற்றும் வணிக வளாகப் பகுதிகள் சென்னை, கும்பகோணம், புதுச்சேரி, திருச்சி ஆகிய நான்கு முக்கியச் சாலைகளை இணைக்கும் நான்குமுனைச் சந்திப்பாக விளங்குவதால், நாள்தோறும் ஏராளமான பயணிகள் வந்து செல்லும் மையப் பகுதியாக உள்ளது.
இத்தகைய சூழலைப் பயன்படுத்தி, வடலூர் – கடலூர் செல்லும் சாலையில் பழைய பூங்கா அமைந்திருந்த தேசிய நெடுஞ்சாலைக்குச் சொந்தமான இடத்தையும், பொதுப் போக்குவரத்துப் பாதைகளையும் ஆக்கிரமித்துச் சிலர் சட்டவிரோதமாக டூவீலர் ஸ்டாண்ட் நடத்தி வருகின்றனர். நகராட்சி நிர்வாகத்திடமிருந்து முறையான உரிமம் பெறாமலும், எந்தவித ஏல விதிகளையும் பின்பற்றாமலும் இந்த ஸ்டாண்ட் பல ஆண்டுகளாகத் தங்கு தடையின்றிச் செயல்பட்டு வருகிறது.
பொதுவாக நகராட்சி எல்லைக்குள் உள்ள பொது இடங்களில் டூவீலர் ஸ்டாண்ட் அமைப்பதற்கு, முறைப்படி இ-டெண்டர் அறிவிப்பு வெளியிட்டு ஏலம் விடப்பட வேண்டும். இதன் மூலம் நகராட்சிக்கு ஆண்டுதோறும் பல லட்சம் ரூபாய் கட்டண வருவாயாகக் கிடைக்கும். இந்நிதி நகரின் குடிநீர், சாலை, மின்விளக்கு போன்ற அடிப்படை உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தப் பயன்படுத்தப்படும். ஆனால், வடலூரில் பல ஆண்டுகளாக இந்தச் சட்டவிரோத ஸ்டாண்ட் இயங்கி வருவதால், நகராட்சி கருவூலத்திற்கு வர வேண்டிய பெரும் தொகை தனிநபர்களின் கைக்குச் செல்கிறது. இதனால் நகராட்சிக்கு நேரடி நிதியிழப்பு ஏற்படுவதோடு, நகர்ப்புற வளர்ச்சியும் பாதிக்கப்படுகிறது.
கூடுதல் கட்டணம் மற்றும் பாதுகாப்பற்ற சூழல்:
சட்டவிரோதமாகச் செயல்படும் நபர்கள், வாகன உரிமையாளர்களிடம் நகராட்சி நிர்ணயித்த தொகையை விடப் பல மடங்கு கூடுதல் கட்டணம் வசூலிப்பதாகப் பயணிகள் வேதனை தெரிவிக்கின்றனர். மேலும், நிழற்கூரை இன்றி மழை மற்றும் வெயிலில் வாகனங்கள் நிறுத்தப்படுவதால் சேதமடைகின்றன.
அதுமட்டுமின்றி, கட்டணம் வசூலிப்பதற்கு நகராட்சி முத்திரை அல்லது ஜி.எஸ்.டி எண் இல்லாத சாதாரணத் துண்டுச் சீட்டுகளே வழங்கப்படுகின்றன. முறையான உரிமம் இல்லாததால், நிறுத்தப்படும் இருசக்கர வாகனங்கள் திருடப்பட்டாலோ அல்லது சேதமடைந்தாலோ அவர்கள் எந்தப் பொறுப்பும் ஏற்பதில்லை. மேலும், சாலையோரங்களை ஆக்கிரமித்து வாகனங்களை நிறுத்துவதால் பேருந்துகள் வந்து செல்வதிலும், பாதசாரிகள் நடந்து செல்வதிலும் கடும் சிரமம் ஏற்படுகிறது.
பொதுமக்களின் கோரிக்கை:
நகராட்சி நிர்வாகத்தின் அலட்சியப் போக்கே இத்தகைய சட்டவிரோதச் செயல்களுக்குக் காரணம் எனக் குற்றம் சாட்டும் பொதுமக்கள், கடலூர் மாவட்ட ஆட்சியர் மற்றும் நகராட்சி நிர்வாகத் துறை அதிகாரிகள் உடனடியாகத் தலையிட்டுச் சட்டவிரோதமாகச் செயல்படும் டூவீலர் ஸ்டாண்டை அகற்றிச் சீல் வைக்க வேண்டும் என வலியுறுத்துகின்றனர்.
மேலும், இதுவரை சட்டவிரோதமாகப் பணம் வசூலித்த தனிநபர்கள் மீது காவல்துறையின் மூலம் வழக்குப்பதிவு செய்து, முறைகேடாகச் சேர்த்த நிதியைப் பறிமுதல் செய்ய வேண்டும் என்றும்; நகராட்சிக்கு உரிய இடங்களை அடையாளம் கண்டு, நாளிதழ்கள் மற்றும் இணையதளம் வாயிலாக முறைப்படி இ-டெண்டர் அறிவிப்பு வெளியிட்டுப் புதிய டூவீலர் ஸ்டாண்டிற்கு ஏலம் விட வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டுள்ளனர். இதன் மூலம் நகராட்சியின் வருவாயைப் பாதுகாக்கவும், பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்யவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
அதிகாரிகளின் விளக்கம்:
நகராட்சி ஆணையர் ஹேமலதா தெரிவித்ததாவது:
வடலூர் நகராட்சி எல்லைக்குட்பட்ட, வடலூரிலிருந்து கடலூர் செல்லும் தேசிய நெடுஞ்சாலைக்குச் சொந்தமான இடத்தில் ஆக்கிரமிப்பு செய்து, தனிநபர்கள் சட்டவிரோதமாக டூவீலர் ஸ்டாண்ட் நடத்தி வருகிறார்கள். இந்த டூவீலர் ஸ்டாண்டிற்கும் நகராட்சிக்கும் எந்தவிதத் தொடர்பும் கிடையாது. மேலும், இது தொடர்பாக தேசிய நெடுஞ்சாலைத்துறைக்குக் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. நகராட்சிக்கு இழப்பை ஏற்படுத்திய தனிநபர்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
தேசிய நெடுஞ்சாலைத்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில்:
இந்த டூவீலர் ஸ்டாண்ட் அமைந்திருக்கும் இடத்தினை அளவீடு செய்து தருமாறு குறிஞ்சிப்பாடி வட்டாட்சியருக்குக் கடிதம் அனுப்பியுள்ளோம். அளவீடு செய்த பிறகு, அந்த இடம் தேசிய நெடுஞ்சாலைத்துறைக்குச் சொந்தமானது என உறுதிசெய்யப்பட்டால், உடனடியாக ஆக்கிரமிப்பு அப்புறப்படுத்தப்பட்டு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவித்தார்.