நேபாளத்தில் பயங்கரம், நடந்தது என்ன? முப்பது நிமிடங்களில் பேரழிவை ஏற்படுத்திய பனிப்பாறை ஏரி வெடிப்பு
நேபாளத்தில் பயங்கரம், நடந்தது என்ன? முப்பது நிமிடங்களில் பேரழிவை ஏற்படுத்திய பனிப்பாறை ஏரி வெடிப்பு
கடந்த ஆகஸ்ட் 26ந்தேதி (புதன்கிழமை) காலை 8.37 மணிக்கு, நேபாளம் – திபெத் எல்லையில் உள்ள லாங் டாங் தேசியப்பூங்கா அமைந்திருக்கும் பகுதியில், கடல் அளவிற்கு 5,200 மீட்டர் உயரத்தில் இருந்து, மாபெரும் பனிப்பாறைகள் அடங்கிய உறைநிலையில் இருக்கும் ஏரி ஒன்றின் தென் பகுதி பிளவுற்றது.
சுமார் 2,000 அடி அகலம் கொண்ட பனிப்பாறைகள் பிளவுற்றது. அதாவது, 4 முதல் 6 மில்லியன் க்யூபிக் மீட்டர் அளவு கொண்ட பனிப்பாறைகள் நொடிப்பொழுதுக்கும் குறைவான தருணத்தில் தனது தாய் பாறையில் இருந்து முறிந்து, அப்படியே 1,200 மீட்டர் கீழே சமவெளியில் விழுந்தது.
இந்தப் பிளவால் ஏற்பட்ட பூமியின் அதிர்வு ரிக்டர் அளவுகளில் 4.4 முதல் 5.2 ரிக்டர் என்றளவில் பதிவு செய்யப்பட்டிருப்பதால், அந்தப் பிளவின் வீரியத்தை அறிய முடியும்.
தன்னகத்தே 3.5 முதல் 5.5 மில்லியன் எடையைக் கொண்டு, ஒரு மாபெரும் பனிப்பாறை 4,000 அடி கீழ் நோக்கி புவி ஈர்ப்பு விசையின் விளைவால் விழும் போது, அதன் வேகம் மணிக்கு 300 முதல் 450 கிலோமீட்டர் (புல்லட் ட்ரெயினின் வேகம் / டேக் ஆஃப் ஆகும் போது விமானத்தின் வேகம்) என்ற வேகத்தில் இருக்கும்.
இத்தகைய பெரிய வீழ்ச்சி நடக்கும் போது, அந்த இடத்தில் உருவான ஆற்றல் விளைவை டிஎன்டி கொண்டு விளக்கினால், 10 முதல் 15 கிலோடன் டிஎன்டி ஆற்றல் வெளிப்பட்டிருக்கும். இது ஹிரோஷிமா மீது வீசப்பட்ட அணுகுண்டின் ஆற்றலுக்கு ஒப்பானது.
மேலிருந்து கீழிறங்கிய மாபெரும் புல்டோசர் போல, பனிப்பாறை கீழே விழ, அந்த இடத்தில் இருக்கும் மரம், செடி, கொடி, மண் என்று அனைத்தையும் ஒரு சேர ஒன்றாக்கி, பள்ளம் நோக்கிக் கீழிறங்கத் துவங்கியது.
இதைத் தான் பனிப்பாறை ஏரி வெடிப்பினால் ஏற்படும் திடீர் வெள்ளப்பெருக்கு என்று அறிகிறோம். சுருக்கமாக GLOF (GLACIER LAKE OUTBURST FLOOD).
இதில் என்ன சிக்கல் என்றால், கீழே விழுந்த பனிப்பாறைக்குள் 4 முதல் 6 பில்லியன் லிட்டர் நீர் இருந்திருக்கும்.
இவற்றுடன் சேர்ந்து, மண், மரம் என்று ஒன்று சேர்ந்து, சேறும் சகதியுமான ஒரு சுனாமி மேலிருந்து கீழ் நோக்கி வேகமாக வருவதாகக் கற்பனை செய்யலாம்.
இந்த சகதிச் சுனாமி உருவான இடத்தில் இருந்து லெண்டே கோலா மற்றும் போட்டிகோஷி ஆறுகளைத் தனது வழித்தடமாகக் கொண்டு சுமார் நாற்பது கிலோமீட்டர் பயணித்து, தனது வழிநெடுக உள்ள கிராமங்களை முழுமையாக கபளீகரம் செய்து விட்டது.
பனிப்பாறை கீழ் விழுந்த இடத்தில் இருந்து நாற்பது கிலோமீட்டர் தூரத்தை அடைய எடுத்துக் கொண்ட நேரம் – அரை மணிநேரம் முதல் 40 நிமிடங்கள் வரை மட்டுமே.
இவ்வளவு குறைவான நேரத்தில் மீட்புப் பணிகள் அல்லது தப்பித்து ஓடுவது மனிதனால் இயன்ற சாத்தியக்கூறுகளுக்கு அப்பாற்பட்டதாகத் தோன்றுகிறது.
எதனால் இது நடந்திருக்கும்?
பனிப்பாறை நிலவும் பகுதிகளில் வெப்பம் அதிகமாக இருப்பது, பனிப்பாறைகளின் உள்பகுதிகளை வெப்பமாக்கி, அவற்றுக்குள் நீரோட்டத்தை உருவாக்கி, பனிப்பாறைகளின் பலத்தைச் சீர்குலைக்கின்றன.
இதன் விளைவாக உள்ளிருந்து பிளவு தோன்றுகிறது. இத்தகைய பிளவுகள் சிறிது சிறிதாகப் பெரிதாகி, தாய் பாறையில் இருந்து சிதறி கீழே விழும் போது, இத்தகைய பெரிய வெள்ளப்பெருக்காக உருவாகின்றன.
இன்னும் 47 பனிப்பாறை ஏரிகள் இதே நிலையில் GLOF அபாயத்துடன் நேபாளத்தில் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
இவை அனைத்தும் இயற்கை நிகழ்வுகளே. ஆயினும், மனிதர்களாகிய நாம் பனிப்பாறை ஏரிகள் உருகி வரும் வழிகளில் நமது இருப்புகளை அதிகரித்திருப்பது, நிகழ்வின் வீரியத்தையும் பாதிப்புகளையும் அதிகரித்துக் காட்டுகிறது.
இன்னும் நம் செயற்கைக்கோள்கள் மற்றும் பனிப்பாறை ஆராய்ச்சிகள் கொண்டு, உடைந்து முறியும் நிலையில் இருக்கும் பனிப்பாறைகள் குறித்து ஆராய்ச்சிகளை முடுக்கிவிட வேண்டும்.
நகரமயமாக்கலை முன்திட்டத்துடனும், இயற்கையையும் மனிதர்களையும் பாதிக்காத அளவில் சமத்தன்மையுடன் அணுகினால் நல்லது.
பனிப்பாறை முறிவு ஏற்படப் போவதை சில நாட்கள் முதல் சில மணிநேரங்கள் முன்னமே கண்டறிந்து நமக்கு சிக்னல் தரும் சாதனங்கள் தேவை.
எத்தனை பெரிய வித்தை கொண்டும், வெறும் 30 நிமிடங்களில் கீழிறங்கி வரும் பெரிய சகதிச் சுனாமியில் இருந்து மக்கள் தங்களைக் காத்துக் கொள்வது இயலாத காரியமாகும்.
நேற்றைய நிகழ்வில் உயிர் நீத்தோரை எண்ணி மனம் கவலை கொள்கிறது. வாழ்வின் நிலையில்லாமை குறித்த சிந்தனை ஓங்கி மறுமுறை அறைந்து விட்டுச் செல்கிறது.
சொந்தங்களை இழந்து வாடும் அனைவருக்கும் ஆழ்ந்த இரங்கல்கள் உரித்தாகுக.
இயற்கை அதன் வழி செல்லும்.
காட்டாற்று வெள்ளத்திற்கே அணையிட இயலாது எனும் போது, காட்டாற்று சுனாமிக்கு எப்படி அணையிட முடியும்?
இயற்கைக்கு தன் பாதையில் இருப்பது இன்னதென எதுவும் தெரியாது. என்றுமே மனிதன் இயற்கைக்கு கட்டுப்பட்டவன் மட்டுமே.
இயற்கையோடு இணைந்து வாழ நாம் பழகிக் கொள்ள வேண்டும். அதன் இடற்பாடுகளைத் தாண்டியும், அதன் மீது அன்பு செய்யவும் நாம் பழக வேண்டும்.
நேபாளத்திற்கு நம்மால் இயன்ற அளவு இந்த இடற்பாட்டில் இருந்து மீண்டு வரத் துணை நிற்போம்.
பதிவு: டாக்டர். அ.ப.ஃபரூக் அப்துல்லா, பொது நல மருத்துவர், சிவகங்கை